Wednesday, September 27, 2017

உங்களிடம் ஆதார் இருந்தால் இந்த தேதிகளைப் பற்றி அறிந்துதான் ஆக வேண்டும்! வேறு வழியில்லை!!


Published on : 27th September 2017 04:44 PM  |


புது தில்லி: உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ... ஆதார் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலைமைக்கு இந்தியா வந்துவிட்டது. இனி சிம்கார்டு வாங்கவும் ஆதார் அவசியமாகிவிட்டது.
ஆதார் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தினாலும், ஆதார் எண் இணைத்தால்தான் மானியங்கள் என்பதில் மத்திய அரசு உறுதியாகவே இருக்கிறது. சிலிண்டர் மானியம் முதல் முதியோர் ஓய்வூதியம் என தற்போது எல்லாவற்றுக்கும் ஆதார் அவசியம்.
ஒரு வகையில் ஆதார் அட்டை வந்த பிறகு, அடையாள அட்டை, முகவரிச் சான்றிதழ் என பல சான்றிதழ்களுக்கு தேவையில்லாமல் போனதும் ஒரு வகையில் சந்தோஷப்பட வேண்டியதாகவே உள்ளது.
சரி விஷயத்துக்கு வரலாம்.
அதாவது, ஒரே ஒரு ஆதார் எண்ணை வைத்துக் கொண்டு நாம் படும்பாடு இருக்கிறதே என்று சந்தானம் அளவுக்குப் புலம்ப வைத்துவிட்டது இந்த மத்திய அரசு. ஏன் என்றால், ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும். வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும், செல்போன் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று இப்படி இணைத்து இணைத்தே மக்கள் இளைத்துப் போகும் அளவுக்கு உத்தரவுகள் பறந்து கொண்டே இருக்கின்றன.
இதெல்லாம் ஒரே இடத்தில் நடக்குமா? இல்லையே ஒவ்வொரு இடமாக வரிசையில் நிற்க வேண்டியதுதான். மக்களவைத் தேர்தலின் போது வாக்களிக்க வரிசையில் நின்ற மக்கள் அதன்பிறகு வரிசையில் நிற்பதையே முழு நேர வேலையாக செய்து வருகிறார்.
ஏன் இப்படி ஜவ்வு மிட்டாயாக இழுக்கிறீர்கள் என்று கேட்கலாம்.. பொது மக்களின் புலம்பல்களை இங்கே பதிவு செய்ய வேண்டியது நமது கடமையல்லவா? அதற்காகத்தான்.
சரி.. வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்துப் பார்க்கலாம்.
வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.  ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும் அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதற்கான கடைசி தேதி 2017ம் ஆண்டு டிசம்பர் 31. ஒரு வேளை இந்த தேதிக்குப் பிறகு வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கவில்லை என்றால், வங்கிக் கணக்கை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். ஒரு வேளை இந்த காலக்கெடு நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உண்டு.
நெட் பேங்கிங் வசதி கொண்ட வங்கி வாடிக்கையாளர்கள், இணையதளம் வாயிலாகவே தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
2. பான் அட்டையுடன் இணைக்க
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. அதோடு, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதையும் கட்டாயமாக்கியது. இதற்கான காலக்கெடு 2017 டிசம்பர் 31ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணையதளம் வாயிலாகவே இணைத்துக் கொள்ளலாம். அதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
செல்போன் எண்களுடன் ஆதார்
ஒவ்வொருவரும் வைத்திருக்கும் செல்போன் எண்களுடன், தங்களது ஆதார் எண்ணை இணைக்கும்படி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான கடைசி தேதி 2018ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி. அதேப்போல புதிய சிம்கார்டு வாங்கும் போதும் ஆதார் எண்ணை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக நிச்சயம் ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் வைத்திருக்கும் வாடிக்கையாளர் சேவை மையத்தை மக்கள் நாடியே ஆக வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்மென்ட்
மியூச்சுவல் ஃபண்ட் அமைப்புகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களின் நிதிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயம். சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட பண மோசடி தடுப்புச் சட்டம் 2017ன் விதிமுறைப்படி இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியாகும்.
ஓய்வூதியக் கணக்கு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை அளிப்பதை கடந்த ஜனவரி மாதம் கட்டாயமாக்கியது.
இறப்புச் சான்றிதிழ்
2017ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் இறப்புச் சான்றிதழ் பெற ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்புச் சான்றிதழில் மோசடிகள் நடப்பதைத் தடுக்க இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல, பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பாக தவறான தகவல்கள் தருவது குற்றம் என்பதால், ஒருவர், தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து இறுப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பிக்கும் நபரும் தனது ஆதார் எண்ணை அளிக்க வேண்டியது அவசியம்.
அடுத்து என்ன? ஓட்டுநர் உரிமம்தான்.
ஓட்டுநர் உரிமத்தோடு ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு வெகு விரைவில் வெளியாக உள்ளது. இதன் மூலம் போலி ஓட்டுநர் உரிமங்களும், ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அதோடு, புதிய அல்லது பழைய வாகனத்தை வாங்க பதிவு செய்யும் போது, ஆதார் எண் அளிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், திருட்டு வாகனங்கள் பதிவு செய்யப்படுவது தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024