Friday, September 29, 2017

வெற்றுச் செலவல்ல ஓய்வூதியம்!

Published : 28 Sep 2017 10:03 IST

மணி. கணேசன்




அரசின் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு ஊழியர்களின் பங்களிப்புகள் அளப்பரியவை. ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகள், கருத்துகள், செயல்திட்டங்கள் போன்றவற்றைப் பலவகையிலும் ஆராய்ந்து, அவை அரசின் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் வடிவம் கொடுப்பதில் ஊழியர்களின் இரவு பகல் பாரா உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. தேர்தல் காலம், பேரிடர் காலம், நிவாரண உதவிகள் அளித்தல், தேர்வுக்கான தயாரிப்பு மற்றும் திருத்தும் பணிகள் முதலானவற்றின்போது அந்தந்தத் துறைகள் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கிறது. பச்சிளங்குழந்தைக்குப் பாலூட்டவோ சோறூட்டவோ இயலாமல் நெரிகட்டிக்கொண்டு தவிக்கும் பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளின் அவலப்பாடுகள் சொல்லி மாளாதவை.

ஊதியம் வழங்கல் என்பது உழைப்பிற்கானது என வரிந்து கட்டிப் பேசுவதில் பயனில்லை. உழைப்பிற்கு உரிய நியாயமான ஊதியத்திற்கான போராட்டமானது அனைத்து நிலைகளிலும் தொன்றுதொட்டு நடந்து வரும் துர்ப்பாக்கிய நிலையேதான் இங்கும் உள்ளது. அப்படியிருக்கும்பட்சத்தில், மிகையான உழைப்பிற்கான ஊதியத்தைக் கோருவதென்பது இயலாத ஒன்றாக உள்ளது. இக்கோரிக்கையானது ஆட்சியாளர்களும் பொதுமக்களும் ஆகப் பெரிய சமூகக் குற்றமாகப் பார்க்கப்பட்டுப் பரப்புரை செய்யப்படும் நிலையை என்னவென்பது?

அரசு ஊழியர்களும் தொழிலாளர்களே

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏனையோரைப் போன்றே வாழக் கடன்பட்டவர்கள். பன்னாட்டுத் தொழிலாளர்கள் அமைப்பு பரிந்துரைக்கும் ஊதியம் மற்றும் விடுப்புகள் சார்ந்த எல்லாவித உரிமைகளுக்கும் உட்பட்டவர்கள். இவர்கள் யாவரும் தமக்குத் தாமே ஊதியங்களை நிர்ணயம் செய்து கொள்ளும் அதிகாரம் படைத்தவர்களும் அல்லர். நாட்டின் நிதிநிலைமைகளைக் கருத்தில் கொண்டு மனத்தளவில் ஒப்புக்கொண்டாலும்கூட, நியாயத்திற்கு சற்றும் பொருந்தாதவகையில் பரிந்துரைக்கப்படும் ஊதியக்குழுவின் அறிக்கையிலும் ஆயிரம் குளறுபடிகள்!

இந்த நிலையில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதன்பின் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கு பல கட்டப் போராட்டங்களையும் இழப்புகளையும் எதிர்கொண்டாலும் உரிய நியாயங்கள் இதுவரையிலும் கிடைக்கவில்லை.

ஊதிய முரண்பாடுகளும் வேறுபாடுகளும் சுரண்டப்படும் உழைப்பின் வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன. இவையே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் போராட்டக் களத்திற்கு இட்டுச் செல்கின்றன. மக்களையோ மாணவர்களையோ பாதிக்கச் செய்வது இத்தகையோரின் நோக்கமல்ல.

புதிய ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்ட நியாயங்களை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டித் தக்க நீதியை நிலைநாட்டிடவே அறவழிப் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பணிக்காலத்தில் மாத ஊதியம் மற்றும் இதர ஊதியப் பணப்பலன்களும் பணிநிறைவுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற ஒவ்வொரு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தகுதியுடையவராவர்.

காலப்போக்கில் உலகமயம், தாராளமயம் மற்றும் உலக வங்கியின் நிர்ப்பந்தம் காரணமாக இந்த அடிப்படை உரிமை பறிபோனது. ஆம், ஓய்வூதியம் வழங்கும் முறையில் 2003 – 2004 ஆம் ஆண்டுகளில் பழைய நடைமுறைகள் யாவும் ஒழிக்கப்பட்டு மாறாக, புதிய சீர்திருத்தங்கள் ஓய்வூதியத் திட்டத்தில் புகுத்தப்பட்டன.

குறிப்பாக, 2003 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பின் தமிழக அரசுப் பணிகளில் நியமனம் பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் கட்டாயமாக உட்படுத்தப்பட்டனர். இவர்களிடமிருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கென பங்களிப்பாக, ஒவ்வொரு பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றிலிருந்து 10% தொகைப் பிடித்தம் செய்யப்படுகிறது. அதேவேளையில் அரசும் அதே அளவு தொகையைச் செலுத்துவதை உறுதியளித்துள்ளது.

மேலும், மொத்தக் கூடுதல் தொகைக்கு ஆண்டுதோறும் ஏனைய ஊழியர் சேம நலநிதிக்கு வழங்கப்படும் வட்டியினைத் தந்து அரசின் கருவூலக் கணக்குத் துறை, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தின் உதவியுடன் இதன் கணக்குகளைப் பராமரித்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சற்றேறக்குறைய 4,62,000 பயனாளிகளாக உள்ளனர்.

மறுக்கப்படும் உரிமைகள்

இப்புதிய ஓய்வூதியத் திட்டமானது பழைய ஓய்வூதிய நடைமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பணி ஓய்விற்குப் பின் ஓர் அரசு ஊழியர் பழைய ஓய்வூதியத்தின்கீழ் பெறும் அகவிலைப்படி மாற்றம் நிரம்பிய பணிக்காலத்தில் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் பாதியளவிலான ஓய்வூதியம், இறப்பிற்குப் பின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறும் நிகர ஊதியம் ஆகிய வசதிகள் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியருக்கும் ஆசிரியருக்கும் மறுக்கப்படுவதாக உள்ளது.

14 ஆண்டுகால தொடர் போராட்டத்தின் விளைவாக, அண்மையில்தான் தமிழக அரசின் நிதித்துறை செய்திக் குறிப்பில் 4,62,327 பேரின் பங்களிப்புத் தொகை, அரசுப் பங்களிப்புத் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.18,016 கோடி ரூபாய் அரசின் பொதுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது.

தவிர, இத்திட்டத்தின்படி பணிநிறைவு, பணிவிலகல் மற்றும் இறப்பு ஆகியவற்றினை எதிர்கொள்ளும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் மொத்தம் சேமித்த பணத்தில் 60% தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும் எனவும் மீதமுள்ள 40% பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து பெறப்படும் லாபத்தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான தொகை ஓய்வூதியமாக அளிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற நடைமுறையை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கி உள்ளனர். விதிவிலக்காக திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னும் தொடர்கிறது.

அறுபது வயதை எட்டுவோர் மிச்சமுள்ள ஏனைய காலங்களில் இளம் வயதினர் போல் ஓடியாடி உழைத்திட இயலாது. புதிய திட்டத்தின்கீழ் பணி ஓய்வுப் பெற்றோரைக் கொண்டாடிடும் இனிய தருணங்கள் பழங்கதைகளாகவோ கற்பனைகளாகவோ எதிர்பார்ப்புகளாகவோ மட்டுமே இருக்கும். இப்படி கைவிடப்பட்டவர்களால் ஆயிரமாயிரம் நெஞ்சைப் பிளக்கும் கண்ணீர்க் கதைகள் ஓலமிட்டுக் காற்றில் பிசுபிசுக்கும். அரசின் நிர்வாகம் தலைசிறக்க தம் ஆயுள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருண்ட வாழ்க்கைக்கு இந்த இரு அரசுகளின் கைமாறுதான் என்ன?

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு உழைத்தோருக்கான வெற்றுச் செலவு அல்ல ஓய்வூதியம். மூத்த குடிமக்களை நிம்மதியாகவும் மரியாதையுடனும் வாழ வழிவகுக்கும் உபரி ஊதியம். அவ்வளவே!

- மணி. கணேசன்,

தொடர்புக்கு: mani_ganesan@ymail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024