Friday, September 29, 2017

பேட்டியளித்த,பிரபலங்கள்,பீதி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, தமிழக அரசால் நியமிக்கப்  பட்டுள்ள, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், அடுத்த வாரம் அதிரடி விசாரணையை துவக்குகிறது. அதனால், கமிஷனின் விசாரணை வளையத்துக்குள், யார் யார் வருவர் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



ஜெ.,வை பார்க்க, அப்பல்லோ மருத்துவமனை சென்று வந்த பிரபலங்களும், 'விரைவில் வீடு திரும்புவார்' என, பேட்டி அளித்தவர்களும், 'சம்மன் வருமோ...' என்ற பீதியில் உள்ளனர். ஜெ.,வை பார்க்காமல், பார்த்ததாக பேட்டி அளித்த யாரும், விசாரணை வரம்பில் இருந்து தப்ப முடியாது என்பதால், கலக்கம் அடைந்துள்ளனர்.

திடீர் உடல் நல பாதிப்பு காரணமாக,2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனை யில், ஜெ., அனுமதிக்கப்பட்டார். அதன்பின்,

அவரது உடல் தான், டிச., 6 அதிகாலையில் வெளியே வந்தது. லண்டன் டாக்டர், டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர்கள், சென்னை டாக்டர்கள் என, பல மருத்துவ குழுவினர், சிறப்பு சிகிச்சை அளித்தும் பலனில்லை.

நியமனம்:

ஜெ., மரணம் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. அவரது மரணத்துக்கு,சி.பி.ஐ.,விசாரணை, நீதி விசாரணை கோரப்பட்டது. உயர் நீதிமன்றத்தி லும் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. கடைசியில், 'ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.இந்த அறிவிப்பு வந்த ஒரு மாதத்துக்கு பின், விசாரணை கமிஷனுக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை, தமிழக அரசு நியமித்தது.விசாரணை கமிஷன், மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கும் எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த வாரத்தில், விசாரணை கமிஷன், தன் பணியை துவக்க உள்ளது. விசாரணை வரம்புக்குள் யார் யார் வருவர் என்பது குறித்து, நீதிபதி முடிவு செய்ய வேண்டும். ஆனால், ஜெ.,க்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும்,

அவருடன் தங்கியிருந்த சசிகலா குடும்பத்தின ரிடமும், விசாரணை நடத்தப்படுவது உறுதி.

ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி, தற்போதைய துணை ஜனாதிபதி, வெங்கய்யா நாயுடு, தமிழக கவர்னர், வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் துணை தலைவர், ராகுல், பா.ஜ., தலைவர், அமித்ஷா, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வந்தனர்.மருத்துவமனைக்கு சென்று திரும்பிய தலைவர்களில் பெரும்பாலானோர், ஜெயலலிதா உடல் நிலை பற்றி, வெளியில் பேட்டி அளித்தனர்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, பொன்னையன், சி.ஆர்.சரஸ்வதி போன்றோரும், அன்றாடம் ஜெ., உடல் நிலை பற்றி பேட்டி கொடுத்தனர். ஆனால், சமீபத்தில், அமைச்சர் சீனிவாசன், 'நாங்கள் யாரும், ஜெயலலிதாவை பார்க்கவில்லை; பொய் சொன்னதற்காக, பொது மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்' என, வெளிப்படையாக பேசினார்.

மற்றொரு அமைச்சர் வீரமணி, 'சசிகலாவுக்கு பயந்து, அப்படி பொய் சொன்னோம்' என்றார்.

இதனால், தற்போது நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன், தங்களிடம் விசாரணை நடத்துமா; அதற்காக, 'சம்மன்' அனுப்புமோ என, டில்லி தலைவர்கள் உட்பட, பேட்டியளித்த பிரபலங்கள், தற்போது அச்சத்தில் உள்ளனர்.

தீவிரம்:

மருத்துவமனைக்கு வந்து சென்ற பிரபலங்களுக்கு, கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பி, அதற்கு பதிலளிக்கும்படி, விசாரணை கமிஷன் உத்தரவிடலாம். பதிலில் திருப்தி அடையவில்லை என்றால், நேரில் ஆஜராகும் படி, சம்மன் அனுப்பலாம். அவை எல்லாம், விசாரணை கமிஷன் அதிகார வரம்புக்கு உட்பட்டது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசு கூறியிருப்பதால், விசாரணை கமிஷன் பணிகள் தீவிரமடையும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024