Thursday, September 28, 2017

நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம்: சசிகலா பரோல் கோரி விண்ணப்பிக்கவில்லை - கர்நாடக சிறைத்துறை அதிகாரி தகவல்

Published : 28 Sep 2017 07:56 IST

இரா.வினோத்பெங்களூரு



சசிகலாவின் கணவர் நடராஜன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதால், பரோலில் வெளியே வர சசிகலா விண்ணப்பித்து இருப்பதாக வெளியான தகவலை கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக் மறுத்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய தினம் சசிகலாவின் கணவர் நடராஜன் சிறை வளாகத்துக்கு வந்திருந்தார்.அதன் பிறகு சசிகலாவை சந்திக்க அவர் பெங்களூரு சிறைக்கு வரவில்லை.


இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி நடராஜன் அனுமதிக்கப்பட்டார். அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததால் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, நடராஜனை பார்க்க சசிகலா கர்நாடக சிறை நிர்வாகத்திடம் பரோலில் செல்ல அனுமதி கோரி இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக், 'தி இந்து'விடம் கூறியதாவது:

இதுவரை சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. கர்நாடக சிறைத்துறை விதிமுறைகளின்படி, ஒரு தண்டனை கைதி தனக்கு வழங்கப்பட்ட தண்டனையில் 3-ல் 2 பங்கு காலத்தை சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதன்பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறை நிர்வாகமும், நல்லெண்ண ஆலோசனை குழுவும் அனுமதி அளிக்கும் பட்சத்தில் பரோல் வழங்கப்படும்.

ஆனால் சசிகலா விவகாரத்தில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இன்னும் ஓராண்டு கூட முழுமையாக தண்டனை அனுபவிக்கவில்லை. எனவே சசிகலாவின் ரத்த உறவினருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ, வேறு ஏதேனும் அவசர தேவையாகவோ இருந்தால் சசிகலா ‘அவசர பரோல்' கேட்க முடியும்.

இதற்கு பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றம், சிறைத்துறை நிர்வாகம் மற்றும் நல்லெண்ண ஆலோசனை குழு அனுமதி அளிக்க வேண்டும். இந்த வகை பரோலில் 3 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை வெளியே செல்ல முடியும். சம்பந்தப்பட்ட கைதிக்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தாலும் பரோல் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றார்.

இதனிடையே, சசிகலாவுக்கு நெருக்கமான பெங்களூருவை சேர்ந்த சிலர், ‘‘உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் சிறையில் சசிகலா உடல் எடை குறைந்து காணப்படுகிறார். தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையும் அவருக்கு எதிராக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் நடராஜனை சென்று பார்க்க வேண்டுமா என யோசித்து வருகிறார். இருப்பினும் அவரது குடும்பத்தினருடன் கலந்து பேசி, பரோலில் செல்வது தொடர்பாக சசிகலாவே இறுதி முடிவெடுப்பார்’’என கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024