Saturday, September 30, 2017

பணிப்பதிவேடு 'டிஜிட்டல்'மயம் பணிதாமதம்:அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லை

பதிவு செய்த நாள்30செப்
2017
01:32

சிவகங்கை:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்' மயமாக்கும் பணி தாமதமாகி வருகிறது.கருவூலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதில் பணிப்பதிவேட்டின் பக்கங்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டு வருகின்றன. கணினியில் ஏற்றியவுடன் 'பிரின்ட்' எடுத்து சம்பந்தப்பட்ட ஊழியருக்கு வழங்கப்படும். அதில் ஏதேனும் பதிவுகள் விடுதல் இருந்தால், அவற்றை வரைவு அலுவலர் மூலம் சரிசெய்து மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

பணிப்பதிவேட்டில் ஊழியர்களின் சுயவிபரம், பணிநியமன ஆணை, பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், கல்வி தகுதிகள், ஜி.பி.எப்., ஓய்வூதிய திட்டம், பணிக்காலம் சரிபார்ப்பு, உயர்கல்வி பயில முன்அனுமதி, இடமாறுதல், பதவி உயர்வு, ஊதிய நிர்ணயம், தேர்வுநிலை, சிறப்புநிலை, ஊக்க ஊதியம், விடுப்பு, குடும்ப உறுப்பினர்கள், வாரிசு நியமனம் போன்ற பதிவுகள் இருக்க வேண்டும். பலரது பணிப்பதிவேட்டில் ஊக்க ஊதியம், விடுப்பு போன்ற பதிவுகள் கூட விடுபட்டுள்ளன. இதனால் அவற்றை சரிசெய்து தர சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கருவூலத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் விடுபட்ட பதிவுகளை சரிசெய்து கொடுக்காமல் ஊழியர்கள் தாமப்படுத்தி வருகின்றனர். சில துறைகளில் பதிவுகளை சரிசெய்து கொடுக்க வரைவு அலுவலர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி தொய்வடைந்துள்ளது.கருவூல கணக்குத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டந்தோறும் கருவூலங்களில் 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி நடக்கிறது. பலரது பணிப்பதிவேட்டில் ஏராளமான பதிவுகள் விடுபட்டுள்ளன. அதனை சரிசெய்து தர வலியுறுத்தியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். மாவட்டங்களில் இப்பணி முடிவடைந்துவிட்டால், பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்'மயமாக்க சென்னைக்கு தான் செல்ல வேண்டும், என்றார்.



No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024