Thursday, September 28, 2017

பணிக்கு வராத டாக்டர்கள் : பெண் பரிதாப சாவு
பதிவு செய்த நாள்28செப்
2017
02:45

பெரம்பலுார்: அரியலுார் அருகே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, டாக்டர்கள் பணியில் இல்லாததால், பெண் நோயாளி உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலுார் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தி, 42. இரண்டு நாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சாந்தி, உடையார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
நேற்று காலையில், காய்ச்சல் அதிகமாகி, வீட்டில் மயங்கி விழுந்தார்.
காலை, 6:30 மணிக்கு, சாந்தியை, உடையார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, அவரது கணவர், ரவி அழைத்து சென்றார். அப்போது, அங்கு டாக்டர்கள், நர்சுகள் யாரும் பணியில் இல்லை. பெண் ஊழியர் ஒருவர் மட்டும் இருந்தார்.

மனைவியை தன் மடியில் படுக்க வைத்தவாறு, மருத்துவமனை வராண்டாவில், டாக்டர்களுக்காக, ரவி காத்திருந்தார். காலை, 7:30 மணிக்கு டாக்டர்கள் பணிக்கு வந்தனர். சாந்தியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக, ரவியிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சாந்தியின் உறவினர்கள், அங்கு திரண்டனர். டாக்டர்கள் இல்லாததே சாந்தியின் சாவுக்கு காரணம் எனக்கூறி, மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024