Friday, September 29, 2017

மாநில செய்திகள்

சிறிய விழாவாக நடத்தி அவமதிக்க வேண்டாம் மணி மண்டபத்தை முதல்-அமைச்சர் திறக்க வேண்டும் நடிகர் பிரபு


“நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்க வேண்டும்” என்று நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செப்டம்பர் 29, 2017, 05:30 AM

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. சிவாஜி மணிமண்டபத்தை அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிவாஜி கணேசன் மகனும் நடிகருமான பிரபு, மணிமண்டபத்தை முதல்-அமைச்சர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது, ஜெயலலிதாவின் கனவு திட்டமாகும். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் விழாவுக்கு தலைமையேற்று மணிமண்டபத்தை திறந்து வைத்து எங்கள் தந்தையின் ஆத்மாவுக்கு பெருமை சேர்த்து இருப்பார்.

தமிழக அரசு, மரியாதைக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரம் முதல்-அமைச்சரோ துணை முதல் அமைச்சரோ தலை சிறந்த நடிகரின் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

சிவாஜி கணேசன் தனது திரைப்படங்கள் மூலம் தமிழுக்கும் தமிழ் கலாசாரத்துக்கும் பெருமை சேர்த்து இருக்கிறார். எனவே இந்த விழாவை சிறிய நிகழ்ச்சியாக நடத்துவது எங்கள் தந்தையை அவமரியாதை செய்யும் விதமாகவே இருக்கும். எனவே இதனை மறுபரிசீலனை செய்து முதல்-அமைச்சரும் அரசு அதிகாரிகளும் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது எங்கள் குடும்பம் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோள் ஆகும். நல்ல பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவரும், நடிகருமான வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடிகர் திலகம் சிவாஜியின் மணி மண்டபத்தை 1-ந்தேதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார், என்று அறிவிக்கப்பட்டு இருப்பது திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் திலகத்தின் மாண்புக்கு இழுக்கு சேர்க்கும் செயலில் ஈடுபட்டுள்ள முதல்- அமைச்சருக்கு, திரையுலகினர் எதிர்ப்பு தெரித்து, முதல்-அமைச்சர் திறந்து வைத்தால் மட்டுமே விழாவுக்கு வருவோம் என்று திரையுலகினர் அறிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழக திரையுலகமும் நடிகர் திலகத்திற்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராகத் திரண்டு எழவேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024