Thursday, September 28, 2017

கணக்கில் வராத விடுமுறை! மூன்று நாள்கள் பிரச்னைக்கு முடிவு கேட்கிறது பெண்கள் பாதுகாப்பு சங்கம்
vikatan



பெண்களுக்கு எவ்வளவுதான் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளித்துவிடும் சக்தியும், எண்ணமும் கட்டாயம் அவர்களுக்கு இருக்கும். ஆனால், மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்குப் பிரச்னையை எதிர்கொண்டு, அதனைச் சமாளிக்கக்கூடிய சக்தியை இன்னமும் பெண்கள் கற்றுகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பெண்களுக்கு குறிப்பிட்ட அந்த நேரங்களில் ஏற்படும் வலி, மனரீதியான அழுத்தம் (Mood swings). கோபம், சோர்வு என எல்லா பிரச்னைகளையும் சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். நவீன மருத்துவம், வளர்ந்து விட்ட விஞ்ஞான தொழில்நுட்பம் என்று என்னதான் நாடுவளர்ச்சியடைந்துள்ள போதிலும், பெண்களின் இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு மட்டும் கிடைக்கவில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் பெண்கள்தங்களின் வலியையும், பிரச்னையையும் வெளிக்காட்டாமல் இருந்தாலும், மாதந்தோறும் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்களால் பல பிரச்னைகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.


பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் நாள்களில் விடுமுறை வழங்க வேண்டும் என்று பலரும் போராடி வருகிறார்கள். அதுபோன்ற வலியுறுத்தலை 'தமிழர் சுதேசி பெண்கள் பாதுகாப்புச் சங்கம்' தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2015-ம் ஆண்டில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட இந்த அமைப்பினர், தமிழக முதல்வரின் முதன்மைச் செயலருக்கு அளித்த மனுவில், "பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மூன்று நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தற்போதைய உணவுப் பழக்கவழக்கத்தால் 10 முதல் 13 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்தி விடுகிறார்கள். இதுபோன்ற சூழலில், பெண் குழந்தைகளுக்கு போதிய விழிப்பு உணர்வு இருப்பதில்லை. தவிர, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் போதியளவு இருப்பதில்லை.

சில நேரங்களில் சக மாணவர்கள், ஆசிரியர்களால் மாணவிகள் கிண்டல், கேலிக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதேபோல், தனியார் மற்றும் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு, அந்த காலகட்டங்களில் வெளியே சொல்ல முடியாத பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. சில வெளிநாடுகளில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு மூன்று நாள்கள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவிலும் இந்த காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனவே, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன்கருதி, தனியார் மற்றும் அரசுத்துறைக்கும், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாதவிடாய் காலங்களில் மூன்று நாள் விடுமுறை அளிக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து 'தமிழர் சுதேசி பெண்கள் பாதுகாப்புச் சங்க' தலைவர் கலைச்செல்வியைத் தொடர்புகொண்டு பேசினோம், "எங்கள் சங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெண்கள் நலனுக்காகப் போராடி வருகிறது. சங்கத்தில் மேலும் பலரும் பெண்களுக்கு மூன்றுநாள் விடுமுறை கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். சங்கத்தின் சார்பில் பல அறவழிப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். பள்ளி மாணவி ஒருவர், மாதவிடாய் காலத்தில் விடுப்பு எடுத்ததற்காக, அந்த மாணவியை அடித்து துன்புறுத்தியது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன.மாணவிகள் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம். மூன்று நாள்கள் விடுமுறை அளிக்க இயலாவிட்டாலும், ஒரு நாளாவது விடுப்பு அளித்தால், பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்றார்.

தனியார் மற்றும் அரசுத் துறைகளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிட்டாலும்கூட, பெண்கள் தங்களின் மாதாந்திர உடல்ரீதியான பிரச்னைகளுக்காக விடுப்பு எடுக்கும்போது, அதை உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டாலே போதுமானது. அப்படிச் செய்வதால், மற்ற நாள்களில் பெண்கள் தங்களின் பணிநேரத்தைப் பயனுள்ளதாக அமைத்துகொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மயம் என்று உலக அளவில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும், பெண்களுக்கே உரித்தான இயற்கையான உபாதைகள் மாறப்போவதில்லை. அந்த நாள்களில் பெண்களால் தங்களின் பணியை திட்டமிட்டுச் செய்ய இயலாத நிலைதான் இன்றளவும் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, வீடுகளிலும், அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களிலும் பெண்களுக்கு சிரமங்களை அளிக்காத வகையில் பணி வழங்கினாலே, அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024