Tuesday, October 31, 2017

ஆதாரை எதிர்த்த வழக்கில் மம்தாவுக்கு கோர்ட் கண்டனம்

புதுடில்லி, : 'சமூகநலத் திட்டங்களின் பயனை அளிக்க, ஆதாரை கட்டாயமாக்கும், பார்லி., நடவடிக்கையை, மாநில அரசு எவ்வாறு எதிர்க்க முடியும்?' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான, மம்தா பானர்ஜிக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.



மத்திய அரசு வழங்கும், சமூகநலத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு, 'ஆதார்' எண்ணை அவசியமாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது தொடர்பாக, அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர், கபில் சிபல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

தனிநபராகஇந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த
போது, கபில் சிபல் கூறுகையில், ''ஆதாரை கட்டாயமாக்கும், மத்தியஅரசின் திட்டத்தை எதிர்த்து, மேற்கு வங்க மாநில தொழிலாளர் துறை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.

அப்போது, வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு, 'கூட்டாட்சி அமைப்பில், பார்லிமென்டில் எடுக்கப்படும் நடவடிக்கையை, மாநில அரசு எவ்வாறு எதிர்க்க முடியும்?
'இந்த விஷயத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி, தனிநபராக, புதிதாக வழக்கு தொடரலாம்; அவரை, தனிநபராக கருதி, அவர் அளிக்கும் மனுவை, நீதிமன்றம் விசாரிக்கும்' என்றனர்.

இதற்கிடையே, தனிநபர்ஒருவர், மொபைல் போன் எண்களை, ஆதாருடன் இணைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், அது பற்றி பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு,

'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.

அரசியல் சாசன அமர்வு

இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, அரசியல் சாசன அமர்வை அமைக்கப் போவதாக, உச்ச நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு, நேற்று கூறியதாவது:ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின், அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அமர்வு கூறியது.

சென்னையில் கனமழை : விமானங்கள் தாமதம்

சென்னை: கனமழை காரணமாக, சென்னையில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள், ஒரு மணி நேரம் வரை, தாமதமாக சென்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், நகரின் பல்வேறு சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வர வேண்டிய ஏராளமான பயணியர், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, விமான நிலையத்திற்கு, கால தாமதமாக வந்து சேர்ந்தனர்.
அதை போல, பைலட்டுகள், விமான பணிப் பெண்களும் தாமதமாக வந்தனர். இதனால், சென்னையில் இருந்து கோலாலம்பூர், துபாய், கொழும்பு, டில்லி, மும்பை, அந்தமான், புனே, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய, 23 விமானங்கள், ஒரு மணி நேரம் வரை, தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
வீடு புகுந்த 2 திருடர்கள் 'துவைத்தெடுத்த' இளம்பெண்

திருப்பூர்: திருப்பூரில், பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய இரண்டு வாலிபர்களை, இளம்பெண் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தார். திருப்பூரைச் சேர்ந்தவர் செல்வகுமார், 32; மனைவி கஸ்துாரி, 28. அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில், வேலை செய்கிறார். நேற்று, வழக்கம் போல் வீட்டை பூட்டி, வேலைக்கு சென்று விட்டார். பிற்பகல், 3:30 மணியளவில், அவரது வீட்டின் பூட்டை திறந்து உள்ளே நுழைந்த இருவர், பீரோவில் இருந்த, 5 சவரன் நகை மற்றும், 8,000 ரூபாயை திருடி, தப்ப முயன்றனர். எதேச்சையாக வீடு திரும்பிய கஸ்துாரி, இதை பார்த்து அதிர்ச்சிஅடைந்தார்.
உடனே, அங்கிருந்த பெரிய தடியை எடுத்து, துணிச்சலுடன் உள்ளே சென்றார். திருடர்கள் இருவரையும், கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக தாக்கினார். 
வலி தாங்காமல் இருவரும் போட்ட சத்தத்தில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இருவரையும் கட்டி வைத்து, போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார், இருவரையும் கைது செய்து, அழைத்து சென்றனர்.

டெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'

ஓசூர்: ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், நேற்று காலை, இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி வர தாமதமானதால், முன்னதாக வந்த கலெக்டர் கதிரவன், பள்ளியில் டெங்கு ஒழிப்பு ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியின் கழிப்பறை, நீர்த்தேக்க தொட்டி மற்றும் மொட்டை மாடியில் ஆய்வு செய்தார். பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், மாணவ, மாணவியருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
பள்ளியை சுகாதாரமாக வைக்க தவறிய தலைமை ஆசிரியை லதாவை, சஸ்பெண்ட் செய்யுமாறு, கலெக்டர் உத்தரவிட்டார். இதேபோல், டெங்கு ஒழிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாத நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரகுமாரும், கலெக்டர் உத்தரவுப்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குமரியில் தொடர்ந்து 3-வது நாளாக மழை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை மூன்று நாட்களாக பலத்த இடி மின்னலுடன் பெய்து வருகிறது. மாவட்டத்தில் 198 குளங்கள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 420 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. 590 குளங்கள் 50 சதவீதம் நிரம்பியுள்ளன. திற்பரப்பு அருவியில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.மூன்று நாட்களாக பெய்துவரும் மழையால் சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின.

மதுரையில் அரசு டாக்டர் மாயம் : விளக்கம் கேட்கிறது கேரளா


மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி, மாயமான கேரளாவை சேர்ந்த டாக்டரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. கேரளா மாநிலம், புனலுார் அருகே கரியாரா கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் டாக்டர் வருண், 28. மதுரை அரசு மருத்துவ கல்லுாரியில், குழந்தைகள் நலம் குறித்து, முதுநிலை டிப்ளமோ படிக்கிறார். கல்லுாரி விடுதியில் தங்கியிருந்தார்.

மாணவர்கள் : குழந்தைகள் சிறப்பு வார்டில் டாக்டர் வருண் உட்பட, 20 முதுநிலை மாணவர்கள், தீவிர சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த, 27ம் தேதி மதியம், 12:40 மணிக்கு பணியில் இருந்த, டாக்டர் வருணின் சிகிச்சை முறை குறித்து, சக டாக்டர், நர்ஸ், நோயாளிகள் முன், பெண் உட்பட இரு சீனியர் டாக்டர்கள் உதாசீனம் செய்து பேசி, டாக்டர் பணியை விட்டு போகும்படி திட்டிஉள்ளனர். இதனால், மனமுடைந்த வருண், அன்று மதியம், 2:00 மணிக்கு அலைபேசியை, 'சுவிட்ச் ஆப்' செய்து, ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து, மாயமாகி விட்டார்.
மகன் காணாமல் போய், மூன்று நாட்களாகியும், மதுரை போலீஸ் விசாரணையில் சுணக்கம் இருப்பதாக, டாக்டர் வருணின் பெற்றோர், கேரளா முதல்வர், பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளனர். 

விளக்கம் கேட்பு : அவரது உத்தரவுப்படி, கேரளா உள்துறை அமைச்சகத்தில் இருந்து, தமிழக டி.ஜி.பி.,யிடம் டாக்டர் வருண் வழக்கு குறித்து, விளக்கம் கேட்டுள்ளனர்.

டீன் மருதுபாண்டியன் கூறுகையில், ''டாக்டர் அருணை கண்டுபிடிக்க வலியுறுத்தி இன்று, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து முறையிட உள்ளோம்,'' என்றார்.
ஜெ., மரணத்தில் மர்மம்: விசாரணையில் தாமதம்
நீதிபதி அலுவலகத்தில் கம்ப்யூட்டர், தொலைபேசி இல்லை


ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அலுவலகம், கம்ப்யூட்டர், தொலைபேசி இல்லாமல் இயங்குகிறது. அதனால், விசாரணை தாமதமாகுமோ என, அ.தி.மு.க., தொண்டர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.




ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என, அணிகள் இணைப்புக்கு முன், ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதித்தார். அணிகள் இணைப்புக்கு பின், விசாரணை கமிஷன் பற்றிய அறிவிப்பு, செப்., 25ல் வெளியானது. ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி, விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். கமிஷன் செயல்பட, சென்னை, எழிலகம் அருகே, பசுமை தீர்ப்பாயம் இயங்கும், கலாஸ் மஹால் கட்டடத்தின் முதல் மாடியில், இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

'ஜெ., மரணம் குறித்தும், மருத்துவமனையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், விபரம் அறிந்தவர்கள், நவ., 22க்குள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, தகவல்கள் அளிக்கலாம்' என, நீதிபதி, ஆறுமுகசாமி அறிவித்துள்ளார். விசாரணையை முடித்து, மூன்று மாதங்களில்

அறிக்கை அளிக்கும்படி, அரசு அறிவுறுத்தி உள்ளது.தற்போது, ஒரு மாதம் முடிந்து விட்டது. ஆனாலும், பணிகள் இன்னும் வேகம் பிடிக்கவில்லை. விசாரணை கமிஷன் அலுவலகத்தில், துணை செயலர் அந்தஸ்திலான அதிகாரி உள்ளிட்ட, நீதித் துறை மற்றும் பொதுத் துறை ஊழியர்கள், 10 பேர் நியமிக்கப்பட்டுஉள்ளனர். எனினும், அவர்களுக்கான, மேஜை, நாற்காலிகள், நேற்று வரை வரவில்லை.

மேலும், அந்த அலுவலகத்திற்கு, இதுவரை, தொலைபேசி இணைப்பும் தரப்படவில்லை. வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை சேகரித்து வைக்க, கம்ப்யூட்டர்கள் வழங்கப்படவில்லை. அதனால், மூன்று மாதங்களுக்குள், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய முடியுமா என, அ.தி.மு.க.,வினருக்கு கவலை ஏற்பட்டுள்ளது.

15 பேருக்கு, 'நோட்டீஸ்?'

அதே நேரத்தில், ஜெ., மரணம் தொடர்பாக, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், சென்னை, அப்பல்லோ மருத்துவர்கள், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறும் என, தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும், 'நோட்டீஸ்'அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 15 பேருக்கு, விசாரணைக்கு வரும்படி நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக, நேற்று செய்திகள் வெளியாகின. இது குறித்து, நீதிபதி தரப்பில் கேட்ட போது, 'இதுவரை, யாருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படவில்லை.அனைத்து நடவடிக்கைகளும், நவ., முதல் சூடுபிடிக்கும்.

இது தொடர்பான அறிவிக்கை, அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.

தனி கணக்கு

விசாரணை கமிஷன் அலுவலகத்தில், சென்னை, தலைமை செயலகத்தில் பணிபுரிந்த, பொதுத் துறை மற்றும் சட்டத் துறை அலுவலர்கள், 10 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான ஊதியம், விசாரணை செலவுகள் பராமரிப்புக்காக, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சிண்டிகேட் வங்கியில், தனி கணக்கு துவங்கப்பட்டு உள்ளது.

விசாரணை கூண்டு

ஜெ., மரணம் குறித்த விசாரணை கமிஷனில், நீதிமன்றத்தில் நடைபெறுவது போலவே, விசாரணை நடைபெறும். அதற்காக, நீதிமன்றத்தில் இருப்பது போலவே, சாட்சி கூண்டுகள், நீதிபதி அமரும் மேஜை, நாற்காலி ஆகியவை அமைக்கப்படும். அதற்காக, தமிழக சிறு தொழில் நிறுவனமான, 'டான்சி நிறுவனத்தில், 'ஆர்டர்' தரப்பட்டுள்ளது. 

- நமது நிருபர் -

NEWS TODAY 2.5.2024