Tuesday, October 31, 2017


மதுரையில் அரசு டாக்டர் மாயம் : விளக்கம் கேட்கிறது கேரளா


மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி, மாயமான கேரளாவை சேர்ந்த டாக்டரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. கேரளா மாநிலம், புனலுார் அருகே கரியாரா கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் டாக்டர் வருண், 28. மதுரை அரசு மருத்துவ கல்லுாரியில், குழந்தைகள் நலம் குறித்து, முதுநிலை டிப்ளமோ படிக்கிறார். கல்லுாரி விடுதியில் தங்கியிருந்தார்.

மாணவர்கள் : குழந்தைகள் சிறப்பு வார்டில் டாக்டர் வருண் உட்பட, 20 முதுநிலை மாணவர்கள், தீவிர சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த, 27ம் தேதி மதியம், 12:40 மணிக்கு பணியில் இருந்த, டாக்டர் வருணின் சிகிச்சை முறை குறித்து, சக டாக்டர், நர்ஸ், நோயாளிகள் முன், பெண் உட்பட இரு சீனியர் டாக்டர்கள் உதாசீனம் செய்து பேசி, டாக்டர் பணியை விட்டு போகும்படி திட்டிஉள்ளனர். இதனால், மனமுடைந்த வருண், அன்று மதியம், 2:00 மணிக்கு அலைபேசியை, 'சுவிட்ச் ஆப்' செய்து, ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து, மாயமாகி விட்டார்.
மகன் காணாமல் போய், மூன்று நாட்களாகியும், மதுரை போலீஸ் விசாரணையில் சுணக்கம் இருப்பதாக, டாக்டர் வருணின் பெற்றோர், கேரளா முதல்வர், பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளனர். 

விளக்கம் கேட்பு : அவரது உத்தரவுப்படி, கேரளா உள்துறை அமைச்சகத்தில் இருந்து, தமிழக டி.ஜி.பி.,யிடம் டாக்டர் வருண் வழக்கு குறித்து, விளக்கம் கேட்டுள்ளனர்.

டீன் மருதுபாண்டியன் கூறுகையில், ''டாக்டர் அருணை கண்டுபிடிக்க வலியுறுத்தி இன்று, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து முறையிட உள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024