Sunday, October 29, 2017

'2.0' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய போது | படம்: '2.0' படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து..
இனிமேல் '2.0' மாதிரியான படம் இந்தியாவில் வருமா என எனக்குத் தெரியாது என்று '2.0' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. துபாயில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா BURJ PARK-ல் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த '2.0' படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:
ஷங்கர் மீதான நம்பிக்கையினால் மட்டுமே '2.0'வில் நடித்தேன். வெயிலில் கஷ்டப்பட்டேன் என்று அவர் இங்கு தெரிவித்தார். வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அதைவிட முட்டாள் யாருமே இருக்க முடியாது.
ஒருவர் பெயர், புகழோடு இருக்கிறார் என்றால், அது திறமையாலும், கடின உழைப்பாலும் மட்டும் கிடையாது. அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று அர்த்தம். ஒரு சிலருக்கு வாய்ப்புகள் தானாக வரும், அது ஆண்டவனின் அருள். அப்படி வரவில்லை என்றால் நாமே தேடி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அந்த வாய்ப்புகள் மற்றவர்களின் வயிற்றில் அடிக்காமலும், மற்றவர்களின் வாய்ப்பைப் பறிக்காமலும், நாணயமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும்.
இப்போது தான் துபாய்க்கு முதல் முறையாக வந்துள்ளேன். பல நாடுகளுக்கு சென்றபோது துபாய்க்கு வருவேன், விமானத்திற்காக விமானநிலையத்திற்குள் இருந்துவிட்டு, விமானம் ஏறி போய்விடுவேன். இப்போது தான் முதல்முறையாக விமான நிலையத்தை விட்டு வெளியே வந்திருக்கிறேன். இந்திய மக்கள் பலரும் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு துபாய் அரசாங்கத்திற்கு இந்தியன் என்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஒரு பந்தம் இருக்கிறது. 1960-70களில் பேருந்து நடத்துநராக இருக்கும்போது, பல இஸ்லாமிய சகோதரர்களுடன் தான் இருப்பேன். சென்னைக்கு நடிக்க வாய்ப்பு தேடி வந்த போது, ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் ஓர் இஸ்லாமியர் தான். பெயர், புகழ் கிடைத்தவுடன் போயஸ் கார்டனில் சொந்த வீடு வாங்கினேன். அதுவும் ஓர் இஸ்லாமியரிடமிருந்துதான் வாங்கினேன். ராகவேந்திரா மண்டபம் இருக்கும் இடமும் ஓர் இஸ்லாமிய சகோதரரிடமிருந்துதான் வாங்கினேன். இதுவரை பல படங்கள் நடித்திருந்தாலும், ஒரு படத்தின் பெயர் சொன்னால் அனைவருக்குமே தெரியும். அது 'பாட்ஷா'. அதில் இஸ்லாமியராக தான் நடித்திருந்தேன்.
'2.0' படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஷங்கர் சாருடைய கதைக் களத்திற்கு, சுபாஷ்கரன் மாதிரி ஒருவர் முதலீடு செய்யவில்லை என்றால் இப்படம் நடந்திருக்காது. இதன் மூலம் பெரிய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை சுபாஷ்கரனுக்கு கிடையாது. அவர் மிகப்பெரிய தொழிலதிபர். இந்திய மண்ணுக்கு ஒரு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவருக்கு ஷங்கர் சார் மாதிரி ஓர் இயக்குநர் கிடைத்தது நல்ல வாய்ப்பு.
ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி என இப்படத்தில் அனைவருமே தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இனிமேல் இப்படியொரு படம் இந்தியாவில் வருமா என எனக்குத் தெரியாது. ஷங்கராலும் இதே போல் முடியாது.
நாம் மட்டுமே ஹாலிவுட்டை மீறிய படம் என்று சொல்லிக் கொண்டிருந்தால், நாமே சுயதம்பட்டம் அடித்து கொண்டது போல் இருக்கும். ஆகவே, இதனை படம் பார்த்தவுடனே அனைவரும் உணர்வார்கள்.
இதில் பல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அவர்கள் பணத்துக்காக மட்டும் இதில் பணிபுரியவில்லை. ஏற்கனவே பிஸியாக இருந்தவர்கள், இதன் கதையைக் கேட்டு தேதிகளை மாற்றிக் கொண்டு பணிபுரிந்திருக்கிறார்கள் என்றால் இக்கதை எப்படியிருக்கும் என நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இதற்கு மேல் இப்படத்தைப் பற்றி சொல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024