Tuesday, October 31, 2017

ஜெ., மரணத்தில் மர்மம்: விசாரணையில் தாமதம்
நீதிபதி அலுவலகத்தில் கம்ப்யூட்டர், தொலைபேசி இல்லை


ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அலுவலகம், கம்ப்யூட்டர், தொலைபேசி இல்லாமல் இயங்குகிறது. அதனால், விசாரணை தாமதமாகுமோ என, அ.தி.மு.க., தொண்டர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.




ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என, அணிகள் இணைப்புக்கு முன், ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதித்தார். அணிகள் இணைப்புக்கு பின், விசாரணை கமிஷன் பற்றிய அறிவிப்பு, செப்., 25ல் வெளியானது. ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி, விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். கமிஷன் செயல்பட, சென்னை, எழிலகம் அருகே, பசுமை தீர்ப்பாயம் இயங்கும், கலாஸ் மஹால் கட்டடத்தின் முதல் மாடியில், இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

'ஜெ., மரணம் குறித்தும், மருத்துவமனையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், விபரம் அறிந்தவர்கள், நவ., 22க்குள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, தகவல்கள் அளிக்கலாம்' என, நீதிபதி, ஆறுமுகசாமி அறிவித்துள்ளார். விசாரணையை முடித்து, மூன்று மாதங்களில்

அறிக்கை அளிக்கும்படி, அரசு அறிவுறுத்தி உள்ளது.தற்போது, ஒரு மாதம் முடிந்து விட்டது. ஆனாலும், பணிகள் இன்னும் வேகம் பிடிக்கவில்லை. விசாரணை கமிஷன் அலுவலகத்தில், துணை செயலர் அந்தஸ்திலான அதிகாரி உள்ளிட்ட, நீதித் துறை மற்றும் பொதுத் துறை ஊழியர்கள், 10 பேர் நியமிக்கப்பட்டுஉள்ளனர். எனினும், அவர்களுக்கான, மேஜை, நாற்காலிகள், நேற்று வரை வரவில்லை.

மேலும், அந்த அலுவலகத்திற்கு, இதுவரை, தொலைபேசி இணைப்பும் தரப்படவில்லை. வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை சேகரித்து வைக்க, கம்ப்யூட்டர்கள் வழங்கப்படவில்லை. அதனால், மூன்று மாதங்களுக்குள், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய முடியுமா என, அ.தி.மு.க.,வினருக்கு கவலை ஏற்பட்டுள்ளது.

15 பேருக்கு, 'நோட்டீஸ்?'

அதே நேரத்தில், ஜெ., மரணம் தொடர்பாக, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், சென்னை, அப்பல்லோ மருத்துவர்கள், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறும் என, தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும், 'நோட்டீஸ்'அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 15 பேருக்கு, விசாரணைக்கு வரும்படி நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக, நேற்று செய்திகள் வெளியாகின. இது குறித்து, நீதிபதி தரப்பில் கேட்ட போது, 'இதுவரை, யாருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படவில்லை.அனைத்து நடவடிக்கைகளும், நவ., முதல் சூடுபிடிக்கும்.

இது தொடர்பான அறிவிக்கை, அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.

தனி கணக்கு

விசாரணை கமிஷன் அலுவலகத்தில், சென்னை, தலைமை செயலகத்தில் பணிபுரிந்த, பொதுத் துறை மற்றும் சட்டத் துறை அலுவலர்கள், 10 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான ஊதியம், விசாரணை செலவுகள் பராமரிப்புக்காக, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சிண்டிகேட் வங்கியில், தனி கணக்கு துவங்கப்பட்டு உள்ளது.

விசாரணை கூண்டு

ஜெ., மரணம் குறித்த விசாரணை கமிஷனில், நீதிமன்றத்தில் நடைபெறுவது போலவே, விசாரணை நடைபெறும். அதற்காக, நீதிமன்றத்தில் இருப்பது போலவே, சாட்சி கூண்டுகள், நீதிபதி அமரும் மேஜை, நாற்காலி ஆகியவை அமைக்கப்படும். அதற்காக, தமிழக சிறு தொழில் நிறுவனமான, 'டான்சி நிறுவனத்தில், 'ஆர்டர்' தரப்பட்டுள்ளது. 

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024