Sunday, October 29, 2017


மலேசியாவில் இறந்தது, காதலனைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய மருத்துவர் ஓமனா அல்ல


By DIN  |   Published on : 28th October 2017 05:40 PM  
Omana


திருவனந்தபுரம்: தனது காதலனைக் கொன்று துண்டுத் துண்டாக வெட்டி வீசிய வழக்கில் பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வரும் கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் ஓமனா மலேசியாவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசியாவில் அடையாளம் தெரியாத இந்தியப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக, ஒரு  பெண்ணின் புகைப்படத்தை, ஊடகங்களில் வெளியிட்டது இந்திய தூதரகம். இதைப் பார்த்து, புகைப்படத்தில் இருப்பவர் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஓமனா என்று செய்திகள் வெளியாகின. ஓமனாவின் குடும்பத்தினரும் உருவ ஒற்றுமை இருப்பதாகவேக் கூறினர்.
இந்த நிலையில், அந்த பெண் ஓமனா இல்லை என்பதும், அவர் திருவனந்தபுரம் செரியாத்துராவைச் சேர்ந்த 37 வயதாகும் மெர்லின் ரூபி என்பதும் உறுதி செய்யப்பட்டது.
மலேசியாவில் உள்ள மின்சாதனப் பொருட்கள் விற்பனைக் கடையில் பணியாற்றிய மெர்லின், கடந்த ஜூன் மாதம் மாடியில் இருந்து தவறி விழுந்த பலியானார். அவரது அடையாளம் தெரியாமல், அவரது உடல் கடந்த 4 மாதங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில்தான் இந்திய தூதரகம் அவரது புகைப்படத்தை செய்தியுடன் வெளியிட்டது.
கடந்த 4 மாதங்களாக மெர்லினைத் தேடி வந்த அவரது குடும்பத்தார், அடையாளம் காண்பித்து உடலைக் கொண்டு வந்து கடந்த 18ம் தேதி இறுதிச் சடங்குகளை செய்துவிட்டனர். இவ்வளவுக்கும் பிறகு தான், அந்த புகைப்படம் ஓமனா என்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
முரளிதரன் என்பவரை ஒமனா காதலித்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணமானதால், அவர் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்று கருதிய ஓமனா, 1996ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி, தனது காதலன் முரளிதரனை விஷம் வைத்துக் கொலை செய்தார். அவரது உடலை துண்டுத் துண்டாக வெட்டி சூட்கேஸில் நிரப்பி டேக்ஸி மூலம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் உடல் பாகங்களை வீசினார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை சென்ட்ரலில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், கடந்த 2001ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது அவர் தப்பிக்கவில்லை. ஜாமீன் முடிந்து சிறைக்குத் திரும்பிய பிறகு அங்கிருந்து அவர் தப்பிச் சென்று தலைமறைவனார். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 
இந்த நிலையில்தான் மெர்லின் ரூபியின் புகைப்படம் வெளியானது. சாயலில் அவர் ஓமனா போல இருந்ததால், ஓமனா இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    No comments:

    Post a Comment

    NEWS TODAY 25.12.2024