ஆந்திர தலைநகருக்கான கனவு நனவாகுமா? - 'அமராவதி' உருவாவதில் தொடரும் சிக்கல்
Published : 29 Oct 2017 17:08 IST
வி. ராகவேந்திரா | தமிழில்: பால்நிலவன்
ஆந்திராவின் புதிய தலைநகரம் உருவாக நிர்ணயிக்கப்பட்ட நாட்களைக் கடந்துவிட்டது. அங்கு அமைக்கவேண்டிய கட்டிடங்களுக்கான வடிவமைப்புகளை முடிவெடுப்பதில் காலதாமம் ஆகஆக எதிர்பார்ப்புகள் அதிகமாவதை நம்மால் தவிர்க்கமுடியவில்லை.
அமராவதியைப் பொறுத்தவரை உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக அமைக்கவேண்டும் என்பதுதான் முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவின் எண்ணம். அவரது பரந்து விரிந்த கண்ணோட்டம் பரவலாக பலராலும் மதிக்கப்படுகிறது, ஆனால் இதில் பெரிய கேள்வியே வடிவமைப்பாளர்கள் விரைவில் முடித்துத் தருவார்களா என்பதுதான்.
ஹபீஸ் ஒப்பந்ததாரர்கள்
இதற்கான உருவாக்குதலும் பராமரித்தலும் மேற்கொள்ளும் பொறுப்பேற்றுள்ள ஹபீஸ் கட்டடக் கலை ஒப்பந்ததாரர்கள் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசியபடி இறுதி வடிவமைப்பை ஏப்ரல் 2017ல் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
ஆனால் இப்பணியில் பின்னர் சற்றே தொய்வு ஏற்படத் தொடங்கியது. அதிகாரப் பூர்வமாக, இறுதி வடிவம் பெற மேலும் 40 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்னும் முடியவில்லை.
நகர உருவாக்கத்தையும் அதற்கான பாராமரிப்பையும் ஏற்றுக்கொண்ட ஹபீஸ் கட்டடக் கலை ஒப்பந்த பங்குதாரருடன் முதலமைச்சரின் சமீபத்திய பேச்சு வார்த்தைகளின் முடிவில், லண்டன் நகரத்தை அடிப்படையாகக்கொண்ட அந்த வடிவமைப்பில் சில மாற்றங்களைச் சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான முடிவுகளும் ஏற்படவில்லை.
முதல்வருக்கு திருப்தியில்லை
ஒப்பந்ததாரரின் தலைமைக் கலைஞர்கள் மார்ச் 2017ல் தனித்தன்மைமிக்க அமராவதி நகரம் வடிவ மாதிரியின் கருத்தாக்கங்கள் மற்றும் நடைபெற உள்ள பணிகளின் இறுதிகட்ட வேலைகள் குறித்தும் திட்டமாதிரிகளை சமர்ப்பித்தனர்.
உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்கள் அதை உருவாக்கியபோதும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதில் திருப்தியடையவில்லை. ஏற்கெனவே சமீப காலக்கட்டங்களின் கருத்தியல் சாயல்கள் அதில் இருந்ததுதான் அவர் திருப்தியடையாததற்கான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
கோஹினூர் வைரவடிவில் சட்டப்பேரவை வளாகம்
ஒப்பந்ததாரர்களின் குழு, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை வளாகத்தை ஆந்திராவின் கொள்ளூர் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட விலைமிகு கோஹினூர் வைரத்தைப் போன்ற ஒரு வைர வடிவிலும் உருவாக்கியுள்ளனர். உயர் நீதிமன்றக் கட்டிடத்தை ஒரு பௌத்த நினைவுச்சின்னமாகவும் அமைத்து இவற்றைக் காட்சிப்படுத்தினர்.
நாயுடு, அந்த வடிவமைப்புகளில் சில மாற்றங்கள் செய்யவிரும்பி ஆலோசனை வழங்கினார். மற்ற அரசுக் கட்டிடங்கள் எப்படி இருக்கலாம் என்பது குறித்தும் சில ஆலோசனைகளை வழங்கினார். அதனோடு ஒப்பந்ததாரர்களின் கட்டிடக் கலைக்குழுவினருடன் சில மதிப்புமிக்க ஆலோசனை வழங்க திரைப்பட இயக்குநர்கள் எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் பயாப்தி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவருமே தங்கள் திரைப்படங்களில் அழகுமிக்க பழமைவாய்ந்த கட்டிடக் கலை வடிவங்களுக்கு முக்கியத்துவம் தந்தவர்கள்.
குவிந்த பல திட்டங்கள்
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட நடைமுறைகள் பல குவிந்தன. அவற்றில் மூன்று மட்டும் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட வேண்டுமென்று மக்கள் விரும்பியுள்ளனர். அதேநேரத்தில் முதல்வர் வடிவமைப்புகளின் நிறைவுப் பணிவரை மொத்த திட்டத்தையும் கட்டிடக் கலைகளின் அழகியல் சார்ந்த பார்வையிலிருந்து மட்டுமல்ல இயற்கைச் சூழலோடு இயைந்த ஒரு நகர கட்டமைப்பாக அமையவேண்டுமென்றும் அவர் விரும்பினார்.
நகரக் கட்டுமானப் பணிகள் தொடக்கநிலையிலேயே அப்படியே நின்று ஒரு மாதம் ஆகியிருந்த நிலையில், ஆந்திர முதல்வர் கடந்த வெள்ளியன்று ஒப்பந்ததாரர்களை அழைத்தார். நவீனத்தன்மையோடும் நாட்டின் கலாச்சாரக்கூறுகளையும் உள்ளடக்கியும் அவர்கள் தயாரித்து வைத்திருந்த அக்குறிப்பிட்ட திட்டத்தை மூடிவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
முக்கிய நகரங்கள், களஞ்சியங்களைத் தேடி...
நகரக் கட்டுமான பணிகளின் ஒப்பந்ததாரர்கள் இன்னொரு முக்கியமான பணியிலும் ஈடுபட்டார்கள். ஆந்திரப் பிரதேச தலைநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம், அரசு ஆலோசகர் (தொடர்புகள்) பரகலா பிரபாகர் தலைமையில் ஒரு குழுவை ஏற்பாடு செய்துகொண்டு, புதுடெல்லி, சென்னை, திருப்பதி ஆகியநகரங்களின் தேசிய, அரசு, ஆலய அருங்காட்சியகங்களை பார்வையிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி பிரமாண்ட தானியக் களஞ்சியங்களையும் தேடிச்சென்று பார்வையிட்டுள்ளனர். ஏற்கெனவே உள்ள அமராவதி கோயில் நகரத்திற்குச் சென்று அதன் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆய்வு மேற்கொள்ளுதல், ஸ்ரீ அமரலிங்கேஸ்வர ஸ்வாமி ஆலயத்தைச் சார்ந்த தொன்மையை பிரதிபலிக்கும் சத்திரங்கள் போன்றவற்றை பார்வையிட்டுள்ளனர்.
பல நூற்றாண்டுகளாக அங்கு இருந்த பண்டைய கட்டிடக்கலைகளை நினைவுகூறும் ஒரு நவீன தலைநகரமாக அமராவதியை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்கான கலாச்சார கண்ணோட்டத்திலிருந்து அவர்கள் தங்களின் சொந்த பரிந்துரைகளை செய்தனர்.
இது வாஷிங்டன் டி.சி., புத்ராஜெயா, அஸ்தானா, லண்டன், பிரேசிலியா மற்றும் புது தில்லி ஆகியவை அவற்றின் தனித்துவமான அடையாளங்களை உள்ளடக்கியது ஆகும்.
முதல்வரின் ஆர்வமிக்க பயணங்கள்...
ஆந்திராவில் இருந்து உயர் மட்ட பிரதிநிதிகள் குறிப்பிட்ட அந்த நகரங்களுக்கும் நயா ராய்ப்பூர், காந்திநகர், சண்டிகர் மற்றும் இந்தியாவில் சிறந்ததாகக் கருதப்படும் பல்வேறு நகரங்களுக்கும் செனறு பார்வையிட்டனர்.
முதலமைச்சர் சில நகரங்களைச் சுற்றியும், மற்ற நவீன தலைநகரங்களுடன் ஒப்பிடும்போது அமராவதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி குறிப்புகளை எடுத்துக்கொண்டும் திரும்பி வந்தார்.
இறுதி வடிவமைப்பை நோக்கி....
ஆரம்பத்தில், சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான ஆலோசனை நிறுவனம் சுர்பானா - ஜுராங் தலைநகர பிராந்தியத்திற்கான மாஸ்டர் பிளான்கள், மற்றும் தலைநகரமாக வளர்வதற்கான விதை (மூல) வடிவமைப்பு ஆகியவற்றை வரைந்துகொடுக்க சீனாவின் குய்ஷூ இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட்
கார்ப்பரேஷன் (GIIC)நிறுவனம் அதை எளிய தரவுகளாக மாற்றித்தந்தன. அதை அடிப்படையாகக் கொண்டு ஆந்திர அரசும் நகர கட்டுமான ஒப்பந்ததாரர்கள் என இரு தரப்பிலும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன்படி வடிவமைப்புகளும் விரிவு பெற்றன.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக சமர்ப்பித்த திட்டங்கள் லண்டனில் இறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் அதில் விரும்பும் சிற்சில மாற்றங்களை செய்வதற்காக அங்கிருந்து திரும்பியுள்ளனர்.. ஆனால் இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆந்திர அரசு, புதிய அமராவதி நகரில் சுறுசுறுப்பாக செயல்படப்போகும் அந்த இனிய நாளை அரசு யந்திரங்கள், உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மட்டுமல்ல, ஒரு புதிய கனவு நகரத்தைக் காணும் ஆவலில் நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
No comments:
Post a Comment