அஞ்சு வயசுதாய்யா பள்ளிப் படிப்பை தொடங்க பொருத்தமான காலம்.. புரிஞ்சுக்கங்க!
Posted By: Sutha
Published: Sunday, October 29, 2017, 10:08 [IST]
சார்லட், அமெரிக்கா: பள்ளிப் படிப்பில் நாம் நமது பிள்ளைகளை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறோம் என்று தெரிந்துமே கூட அந்தக் கொடுமையை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மேலை நாடுகளில் இந்த பள்ளிப்படிப்பு என்பது எந்த அளவுக்கு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
மேலை நாட்டு கல்வி முறையும் நம்ம நாடு பள்ளிக்கு கல்வி முறை பற்றியும் ஒரு சின்ன அலசல் இது. நம்ம நாட்டு கல்வி சிறந்ததா அல்லது மேலை நாட்டு கல்வியின் தரம் சிறந்ததா என்று பார்ப்பதை விட எந்த கல்வி நம் குழந்தைகளுக்கு சரியானது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஒரு காலத்தில் நம்முடைய ஊர்களில் ஐந்து அல்லது ஆறு வயதில்தான் பிள்ளைகள் பள்ளி பக்கம் போவார்கள். பிறகு இது 4 வயதாக குறைந்தது. அதுவும் பின்னர் 3 ஆகி இப்போது இரண்டரை வயதிலேயே ப்ரீகேஜி என்று வந்து நிற்கிறோம். ஆனால் மேலை நாடுகளில் பள்ளிக் கல்வி எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா?.
5 வயதில்தான் கேஜியே ஆரம்பிக்கிறது
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஐந்து வயது முடிந்த பிறகே பள்ளிப் படிப்பு (கே.ஜி என்கிற கிண்டர் கார்டன்) ஆரம்பிக்கிறது. இது நம்ம கல்வி முறையில் (எல்.கே.ஜி.+யு.கே.ஜிக்கு) சமம் என வைத்து கொள்ளலாம். இந்த கே.ஜி இலிருந்து எல்லா குழந்தைகளுக்கும் நம் ஊர் தனியார் பள்ளிகளின் தரத்தோடு அந்த ஊர் அரசு பள்ளிகளில் இலவச கல்வி பயில்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் என்றைக்கு அரசு இலவச கல்வி அதுவும் தரமான கட்டமைப்பு கொண்ட தரமான சூழ்நிலையில் தர போகிறது என்பது இன்னும் பதில்லில்லாத கேள்விகளாகவே நீடிக்கிறது .
ஆடி ஓடுங்கள் மழலைகளே
நம் ஊரை போல இரண்டரை வயதிலேயே குழந்தையை கொண்டு போய் ப்ரீகே.ஜி வகுப்பில் முழு நேரமும் உட்கார் என்று அவர்கள் அனுப்புவதில்லை. அது நாள் வரை ஓடி ஆடி கொண்டிருந்த குட்டீஸ்களை இரண்டரை வயது ஆனதும் நீ வளந்தாச்சு தங்கம் என்று பள்ளியில் சேர்த்து அங்கே அவர்களை ஒரு பெஞ்சிலோ நாற்காலியிலோ நாள் முழுக்க உட்கார வைத்து ஒவ்வொரு ஆசிரியராக வந்து கரும்பலகையில் கை வலிக்க வலிக்க எழுதி குழந்தைகளும் கை வலிக்க வலிக்க நோட்டை நிரப்பும் பழக்கம் அங்கு அறவே இல்லை. அறிந்தோ அறியாமலோ அவ்வளவு சிறு வயதில் குழந்தைகளை நாம் இங்கே இப்படி செய்வது ஒரு வகையில் அவர்கள் மழலைத்தனத்துக்க்கு எதிராக நாம் செய்யும் வன்முறை தான்.
பள்ளிக்குச் செல்வது ஜாலியாகத்தான்
அப்பயிடானால் அந்த நாடுகளில் அதுவரை பள்ளி செல்வதில்லயா என கேட்கலாம் நீங்கள். நிச்சயம் அனுப்புகிறார்கள் பெற்றோர்கள். போகிறார்கள் அக்குழந்தைகளும், ஆனால் ஆசை ஆசையாக. நம்மை போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அல்ல. 9 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே. அதனால் குழந்தைகளுக்கு தேவையான மதிய ஓய்வுக்கு தடை இல்லை. அங்கு நான்கு வயதில் தான் ப்ரீ.கே.ஜி (ப்ரீ கே எனப்படும் ப்ரீ கிண்டர்கார்டன்) போகிறார்கள். அதுவும் கே.ஜி போவதற்கு ஒரு முன்னேற்பாடாக குழந்தை பள்ளிக்கு செல்ல பழகும் தருணமாக ஒரு சமூக சூழ்நிலைக்குள் அவர்களை நுழைக்கும் வருடமாக தான் இது பார்க்கப்படுகிறது.
3 வயசு ஜாலி வயசு பாஸ்
அப்போ 3 வயசில ஸ்கூல் போக மாட்டார்களா என்று நீங்க ஆச்சரியப்பட்டால் அது தான் உண்மை. பெரும்பாலானோர் போவதில்லை வீட்டிலே தான் கல்வி வீட்டுக் கல்வி எனப்படும் ஹோம் ஸ்கூலிங் தான். பள்ளி செல்ல நினைக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் 3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் என்றால் வாரத்தில் மூன்று அல்லது நாலு நாட்கள் என வகுப்பு முறை இருக்கிறது . அதுவும் 2 முதல் 3 வயது என்றால் மொத்தமே வாரத்தில் இரு நாட்கள் தான் வகுப்புக்கு போகிறார்கள். எல்லாம் மதியம் ஒரு மணி வரை தான் அப்புறம் வீடுதான் ஜாலிதான். மம்மியுடன் விளையாட்டுதான்.
விளையாட்டு முக்கியம்
குறைந்த கால நேரமே கல்வி பள்ளி சிறு குழந்தைகளுக்கு என்று அழகான வரையறையை பின்பற்றுகிறார்கள்.அதுவும் எளிய (play ஸ்கூல்) முறையில் விளையாட்டோடு இயைந்த கல்வி தான். அழுத்தமில்லாத கல்வி முறைகளோடு அழகான கல்வி முறை. நோ நோட்ஸ் நோ புக்ஸ். ஒரு பைலை கொண்டு போகும் சிறுவர்கள் என அவர்கள் கொடுத்து வைத்த குழந்தைகளே. ஒரு எழுத்தை எழுதுவதை விட அது தொடர்பான சிப்ட்ஸ் செய்கிறார்கள். கத்திரி கோல் கொண்டு வெட்டுவது, வண்ணங்கள் தீட்டுவது என்று அவர்களின் வகுப்பறையே வண்ண வானவில் தான். போதாத குறைக்கு இவர்கள் வகுப்பறையில் பொம்மை, வாகனங்கள் என்று விளையாட்டு பொருட்கள் கூட உண்டு.
கிளாஸே டாப்பாக இருக்கும்
அந்த வகுப்பறைகளை பார்த்தால் அதிசயமாக இருக்கும். உள்ளே முழுவதும் படங்கள். நிறைய டப்பாக்கள் எல்லாம் குழந்தைகளின் கைதொட்டு மனம் தொடும் கல்வி முறைக்கான டப்பாக்கள். நம்ம ஊரைப் போல எல்லோர் நாற்காலியும் ஆசிரியரை பார்த்து போடப்படுவதில்லை இங்கே. நான்கு நான்கு நாற்காலிகள் ஒவ்வொரு குழுக்கள் எது செய்தாலும் குழுக்களாக செய்து அறியும் குதூகலம் அவர்களுக்கு உண்டு. முக்கியமாக சொல்ல வேண்டியது இங்கு வீட்டுப் பாடம் ஐந்து வயது வரை கொடுக்கப்படுவதில்லை (No homework ), படித்து விளையாடி விட்டு பட்டாம்பூச்சியாக வீடு திரும்பி வருகிறார்கள். முக்கியமாக அவர்கள் சொல்லி தருவது தேங்க்ஸ், சாரி, ப்ளீஸ் போன்ற நல்ல வார்த்தைகள் தான் முதல் பாடங்கள் அங்கு. தோழமையோடு பழகும் விதத்தையும் குழந்தைகள் பின்பற்ற வேண்டிய ஓழுங்கையும் (obedience) தான் முக்கியமாக சொல்லித் தருகிறார்கள்.
நேரத்துக்கு சாப்பிடுவது அவசியம்
இந்த 9 முதல் 1 மணி வரையிலான கல்வி நேரத்தில் ஒரு சிற்றுண்டி நேரம் (ஸ்னாக்ஸ் டைம்) இருக்கிறது. மதியம் 12 மணிக்கு உணவு இடைவேளை இருக்கிறது. அது மட்டுமா சாப்பிட்டு முடித்து விட்டு அரை மணி நேரம் வெளியில் விளையாடவும் விளையாட்டு நேரம் (playground டைம்) இருக்கிறது , நம்ம ஊர்லயும் விளையாட்டு நேரம் இருக்கிறது வாரத்தில் ஒரு மணி நேரம் எவ்வளவு பெரிய வித்தியாசம் பாருங்க. நம்ம ஊர்ல மாதிரி ஓன்று இரண்டு அல்ல வகை வகையான சறுக்குகள், ஊஞ்சல்கள், ஏறு கம்பிகள், தொங்கு கம்பிகள், மிதிவண்டி, டிரக் வண்டி என பல வாகனங்கள் என அவர்களின் விளையாட்டு திடலில் அவர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்த அதிகப்படியான பொருட்கள் இருக்கிறது.
தடி கொண்டு அடித்தால் கனியுமா
நம் ஊர்களில் எல்கேஜி, யுகேஜி என்பது ப்ரீகேஜியாக மாற காரணம் பெற்றோர் இருவருமே வேலைக்கு போகும் கலாச்சாரம் அதிகரித்ததும்தான். அது பேஷன் அல்லது கட்டாயம் என்ற நிலை வந்து விட்டது. பிள்ளைக்கு இரண்டு வயசு ஆனதும் இனி ஸ்கூல் தான என்கிற பேச்சு சர்வ சாதாரணமாகி விட்டது. இன்னொரு காரணம் நம் பிள்ளையை சீக்கிரம் ஸ்கூலில் போட்டு வளர்த்து பெரிய அறிவாளியாக்கி விட வேண்டும் என்கிற பெற்றோரின் ஆசையும் ஒரு காரணம் தான். அனால் தானாக பருவத்தில் கனிய விடாமல் அவ்வளவு சீக்கிரமாக நாம் பழத்தை பழுக்க வைக்க செயற்கையாக செய்கிற முயற்சி தான் இந்த ப்ரீ.கே.ஜி. ஒரு இரண்டரை வயதுக்குரிய குழந்தையின் மன நிலையிலிருந்து இதை அணுகிப் பார்த்தால் தான் அந்த பிரச்சனை தெரியும் நமக்கு.. காலையில் பத்து மணிக்கு எழும்பி கொண்டிருந்த குழந்தை அதுவும் இரண்டரை வயது மழலை குறைந்தது காலை 7.30க்கு எழும்ப வேண்டி இருக்கிறது. அதுவும் ஒரு மணி நேரத்தில் பல் துலக்கி ஒரு கப் காபி ஒரு இட்டிலி தோசை என திணித்து அதுவும் குழந்தை தூக்கத்தை களைத்த எரிச்சல் ஒரு பக்கம். விளையாட விடாமல் கிளம்பு கிளம்பு என்று நாம் விரட்டும் எரிச்சல் ஒரு பக்கம் என குழந்தை திக்கு முக்கடிப் போகிறது காலை பொழுதில்.
தூங்கிக் கொண்டு செல்லும் பிள்ளைகள்
குழந்தைகளுக்கு பள்ளி பக்கத்தில் அமைந்து விட்டால் பரவாயில்லை அதுவும் குழந்தைகளுக்கு பள்ளி தூரத்தில் அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம் 7 மணிக்கோ அதற்கு முன்போ எழும்பி காலை நாடகங்கள் ஆரம்பம் . பள்ளி வாகனம் எட்டு மணிக்கு எட்டரைக்கு என்றால் அந்த குழந்தையின் நிலை தான் என்ன. இதுவும் நம்ம பெற்றோர்களின் பேராசை தான் காரணம். பக்கத்துல பள்ளி இருந்தாலும் ரொம்ப நல்ல பள்ளி பார்த்து சேர்ப்பதாக நினைத்து தூரமாக கொண்டு சேர்ப்பார்கள் என்ன செய்வது எப்படியாவது பிள்ளைகளை அறிவாளி ஆகி விட வேண்டுமே ங்கிற ஆசை தான். இந்த பள்ளி வேனில் காலையில் மாலையிலும் தூங்கி கொண்டே போகிற பிள்ளைகளை பார்த்தல் பரிதாபமாக தான் இருக்கிறது. அதுவும் அந்த வயசுக்குரிய மத்திய தூக்கமும் கிடைக்காமல் அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைக்குரிய உற்சாகம் தொலைத்து மாலையில் வீடு திரும்பும் அந்த மழலையின் முகங்களே இதற்க்கு சாட்சி. இப்படியான சூழ்நிலைகள் அவர்களின் கல்வி உள்வாங்க வேண்டிய உள்ளங்களுக்கும் மூளைக்கும் உற்சாகம் தர வாய்ப்பில்லை கட்டாயம் தடையாக தான் இருக்கும்
மாண்டிசோரி முறை
நம்ம ஊரில் மாண்டிசோரி முறையில் கல்வி பயிலும் சில மாணவர்களுக்கு இத்தகைய கல்வி முறையின் அருமையின் ஒரு பகுதி கிடைக்கிறது என்றாலும் முழுமையாக கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.பொருட்களோடு அந்த கல்வி முறை இயைந்தாலும் குழந்தைகளின் விளையாட்டு தனத்தோடு இணையவில்லை. குழந்தைகளின் குழந்தைத்தனத்தை இயல்பாய் இருக்க விடுவோம் இறுக்க வேண்டாம் என்பது தான் என் கருத்து. ஒரு ஐந்து வயது அல்லது எல்.கே.ஜி நான்கரை வயது வரையாவது முழு நேர பள்ளி கல்வி எல்லாம் குறைத்து அரை நாளாவது ஆக்கி குழந்தைகளை குழந்தைகளாய் இருக்க விடுவோமே. குழந்தைகள் மனதுக்குள் அமர்ந்து குழந்தைகளாய் அமர்ந்து யோசித்தால் மட்டுமே இந்த மாற்றங்கள் நம் ஊர் பள்ளிகளிலும் சாத்தியம். அடித்து பிடித்து காலை பரபரப்பில் குழந்தைகளை பையோடு பையாக ஒரு சுருட்டு சுருட்டி பள்ளி அனுப்பி ஒரு அறையில் அடைத்து தான் அறிவை அதி சீக்கிரமாக இரண்டரை வயதிலே புகட்ட வேண்டும் என்று இல்லை.
அம்மாவிடம் கற்கலாமே
அம்மாவின் அன்பு கைகள் கூட குழந்தைக்கு ஆஅ எழுத சொல்லித் தரலாம். அம்மா குடத்தில் தண்ணி எடுத்து வரும் எண்ணிக்கையில் கூட ஏன் அம்மாவின் அன்பு முத்தத்தின் எண்ணிக்கையில் கூட குழந்தை ஓன்று இரண்டு மூன்று படிக்கலாம். குழந்தையின் ஆடையின் வண்ணங்கள் அல்லது அம்மாவின் சேலையின் வண்ணங்கள் கூட அந்த சிறு குழந்தைக்கு நிறம் சொல்லித் தரலாம். வீட்டின் நாற்காலியும் மேசையும் காலை சூரியனும் சாப்பிடும் முட்டையும் கூட வடிவங்கள் சொல்லித் தரலாம். இதை தான் ப்ரீ.கே.ஜி என்ற வகுப்பு முறை சொல்லித் தருகிறது. அம்மாவின் சமையலறை கூட குழந்தைக்கு பாடசாலையாகலாம். அம்மாவின் பாடல் குழந்தையின் ரைம்ஸ் ஆகலாம். தூரத்து நிலவும் நம் வீட்டு தோட்டத்தில் பூக்கும் ரோஜாவில் நம்மை கடந்து செல்லும் பட்டாம்பூச்சியிலும் என நம் மழலைகக்கு சொல்லித் தர ஆயிரம் விஷயங்கள் இருக்க ஏன் இந்த அவசரக் கல்வி?
- Inkpena சஹாயா
oneindia
No comments:
Post a Comment