Monday, October 30, 2017


புறநகர் ரயிலில் களைகட்டிய கச்சேரி: வாய்விட்டு பாடினால் நோய்விட்டு போகும்?

Published : 28 Oct 2017 16:18 IST

நெல்லை ஜெனா
புறநகர் ரயில் (கோப்பு படம்)
பல்லாவரம் ரயில் நிலையம்... அலுவலகம் செல்லும் காலை பொழுது... வழக்கம் போல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. அலுவலகம் செல்லும் அவசரத்தில் நானும் ஓடோடி வந்து பல்லாவரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் ஏறினேன். சுமாரான கூட்டம் தான்.
ரயில் புறப்பட்டு திரிசூலம் ரயில் நிலையத்தை நெருங்கியது. அவசர அவசரமாக வந்த பதற்றம் - வேகமாக அலுவலகம் செல்ல வேண்டும் என்ற ஆதங்கம், ஓட்டமும் நடையுமாக வந்ததால் டென்ஷன் குறைய வில்லை.
திடீரென பாட்டுச் சத்தம் கேட்டது. புறநகர் மின்சார ரயில்களில் சிலர் பாட்டு பாடிக் கொண்டே பணம் வசூலிப்பது வாடிக்கை. அதுபோன்று சிலர் பாடுகிறார்களோ என எண்ணினேன்.
ஆனால் அது தவறு என சற்று நேரத்தில் தெரிந்தது. பாட்டு பாடியவர் சக பயணி, அவரது பாட்டிற்கு ரயிலின் சுவர் பகுதியில் தட்டி தாளம் வர வைத்துக் கொண்டிருந்தவரும் சக பயணி.
வழக்கமான கச்சேரி போன்றே சுவாமி பாடலில் துவங்கி, சினிமா பாடல் என களைகட்டியது.
நேரம் செல்ல செல்ல பலரும் அந்த கச்சேரி குழுவினருடன் இணைந்து கொள்ள தனி பாடலில் துவங்கி, குழு பாடல் என கச்சேரி முழு வீச்சில் நடந்தது. அவர்களது பாடலுக்கு மொத்த கூட்டம் தலையாட்டி கை தட்டி வரவேற்றது. பாட்டு பாடிய பலரும், நாற்பது வயதைக் கடந்தவர்கள்.
பலரும் அலுவலகங்களில் பணி செய்பவர்கள். அலுவலக நாட்களில் ஒன்றாக பயணம் செய்வதுடன், வித்தியாசமான முறையில் தங்கள் பயண நேரத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
செய்தித்தாள் படிப்பது, அரட்டை அடிப்பது, அரசியல் விவாதங்களில் ஈடுபடுவது என புறநகர் ரயில்களில் முன்பு பார்த்த காட்சிகள் இப்போது இல்லை. செல்போன் வந்த பின்பு பயண நேரத்தில் அதை பார்ப்பதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ள ரயில் பயணிகள் ஏராளம்.
சக மனிதர்களுடன் மனம் விட்டு பேசுவது கூட குறைந்து விட்டது. இதுபோன்ற மனிதர்கள் மத்தியில், இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். மனம் விட்டு பேசுவது மட்டுமின்றி மனம் விட்டு பாடியபடி செல்கின்றனர். தங்கள் கல்லூரி நாட்களில், தங்களை ஈர்த்த சினிமா பாடல்களையும் மனம் விட்டு பாடி, மீண்டும் கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்திக் கொள்கின்றனர். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும், தினந்தோறும் வாய்விட்டு பாட வாய்ப்பு கிடைத்தால், அதை கேட்டு ரசிக்க ரசிகர்கள் கூட்டமும் இருந்து விட்டால் மகிழ்ச்சிக்கு குறைவு ஏது?
தங்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம் சவுந்திரராஜன் என பாவித்துக் கொண்டு உருக்கமாக பாடினர். அவர்கள் குரலும், பாடிய விதமும், தொழில்முறை பாடகர்கள் போன்று இல்லா விட்டாலும், ஆத்மார்த்தமாக அவர்கள் பாடிய விதம் ரசிக்கும் படியாக இருந்தது. ஏறக்குறைய மினி மேடை கச்சேரியாக மாறியது ரயில் பயணம். எனக்கும் இது, புதிய அனுபவமாக இருந்தது.
எனினும் அவரவர் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததும் இறங்கிக் கொண்டனர். புதியவர்கள் கச்சேரியில் இணைந்து கொண்டனர். ஆட்கள் மாறினாலும் கச்சேரி மட்டும் நிற்கவில்லை.
நான் இறங்க வேண்டிய எழும்பூர் ரயில் நிலையம் வந்தது. கச்சேரி தொடர்ந்தது. நானும் பழைய நினைவுகளை அசைபோட்டபடியே ரயிலில் இருந்து இறங்கி அலுவலகம் செல்லும் பேருந்தை பிடிக்க வேகமாக விரைந்தேன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024