Tuesday, October 31, 2017

பாரதியத்துக்கு இழுக்கு!


By ஆசிரியர்  |   Published on : 30th October 2017 03:52 AM  |
உத்தரப் பிரதேசத்திலுள்ள சர்வதேச கலாசாரச் சின்னமான பதேபூர் சிக்ரிக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதி தாக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த அந்த சுவிஸ் தம்பதி ஆக்ராவுக்கு சென்றிருக்கிறார்கள். தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டு ஆக்ராவை அடுத்துள்ள பதேபூர் சிக்ரி சென்ற அவர்களை சில இளைஞர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்டனர். தங்களைப் புகைப்படம் எடுப்பதை விரும்பாத சுவிஸ் தம்பதியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள், எலும்புகள் முறியும் அளவுக்கு அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால், அதை என்னவென்பது?
 பதேபூர் சிக்ரி ஒரு மிக முக்கியமான, வரலாற்றுச் சின்னம். உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் அமைந்திருக்கும், மொகலாய சக்கரவர்த்தி அக்பரால் எழுப்பப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்துக்கு, தாஜ்மஹாலை பார்க்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தவறாமல் விஜயம் செய்வார்கள்.
 ஆக்ராவிலிருந்து 39 கி.மீ. தொலைவிலுள்ள பதேபூர் சிக்ரி நகரம், 1569-இல் எழுப்பப்பட்டு 1571 முதல் 1585 வரை மொகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகராகத் திகழ்ந்தது. சித்தூர், ரத்தன்போர் ஆகிய இடங்களைக் கைப்பற்றியதன் வெற்றிச் சின்னமாக ஒரு புதிய தலைநகரை உருவாக்க விரும்பிய அக்பர், ஆக்ராவிலிருந்து பதேபூர் சிக்ரிக்குத் தனது தலைநகரை மாற்றினார். பதேபூர் சிக்ரி என்கிற இடத்தில் அக்பரின் வழிகாட்டியான சுஃபி மகான் சலிம் சிஷ்டியின் நினைவாக அந்தத் தலைநகர் அமைக்கப்பட்டதால், அதற்கு பதேபூர் சிக்ரி என்று பெயர் சூட்டப்பட்டது. அக்பரின் காலத்திற்குப் பிறகு பதேபூர் சிக்ரி புறக்கணிக்கப்பட்டது.
 கடந்த பல ஆண்டுகளாகவே பதேபூர் சிக்ரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வழிகாட்டிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இளைஞர்களும், தெருவோர வியாபாரிகளும் சூழ்ந்து கொள்வதும், அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதும் வழக்கமாக இருந்து வரு
 கிறது. யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக கலாசாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பதேபூர் சிக்ரிக்கும் வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த இளைஞர்களின் இலக்கு.
 பதேபூர் சிக்ரி நகருக்குள் நுழையும்போதே, அங்கே கூட்டம் கூட்டமாக அங்கீகாரம் பெறாத வழிகாட்டிகள் வாகனங்களைச் சூழ்ந்துகொள்கிறார்கள். கையை ஆட்டியும், வாகனங்கள் நிற்காவிட்டால் அதன் முன்னால் போய் நின்று தடுத்தும் நிறுத்துகிறார்கள். தங்கள் உதவி இல்லாமல் பதேபூருக்குள் நுழைந்தால் வாகனங்களை நிறுத்துவதிலும், பதேபூர் சிக்ரியை அடைவதிலும் பிரச்னைகள் உண்டு என்று அச்சுறுத்துகிறார்கள்.
 சமீபத்தில் பதேபூர் சிக்ரிக்கு விஜயம் செய்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் தனது முகநூலில், அங்கே தனக்கு நேர்ந்த பிரச்னைகளையும் அச்சுறுத்தல்களையும் விவரமாகப் பதிவு செய்திருக்கிறார். பதேபூர் சிக்ரியில் நுழைந்த சில நிமிடங்களில் தனது வாகனத்தை, மோட்டார் சைக்கிளில் சில இளைஞர்கள் துரத்தி வந்ததாகவும், வாகனத்தின் கண்ணாடியை இறக்கும்படி வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவிக்கிறார். அவர்களிடம் தங்களுக்கு வழிகாட்டி யாரும் தேவையில்லை என்று தெரிவித்தும்கூட விடாப்பிடியாக வற்புறுத்திப் பணம் பிடுங்கிய பிறகுதான் வாகனத்தைத் தொடர்ந்து செல்ல அனுமதித்தாக கூறுகிறது அவரது பதிவு.
 ஆக்ராவில் அதிகாரபூர்வமற்ற வழிகாட்டிகளை "லப்கஸ்' என்று அழைக்கிறார்கள். சுற்றுலாப் பயணி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களுக்குப் பணம் கொடுத்தாக வேண்டும். லப்கஸ் என்பவர்கள் இருபது வயதுக்குக் கீழேயுள்ள இளைஞர்கள். வழிகாட்டுகிறோம் என்கிற பெயரில் அங்கிருக்கும் கடைகளில் அதிக விலைக்குப் பொருள்களை வாங்கப் பயணிகள் இவர்களால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
 பதேபூர் சிக்ரியில் இருக்கும் ஜாமா மஸ்ஜித்தில் சுற்றுலாப் பயணிகளின் அனுபவம், அதிலும் வெளிநாட்டவராக இருந்தால், இன்னும் மோசம். அங்கிருக்கும் ஷேக் சலிம் சிஷ்டி என்கிற சுஃபியின் தர்காவில் நுழையும்போதே, தங்களை தர்கா ஊழியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் சுற்றிவளைத்துப் பணம் பிடுங்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதில் சில வழிகாட்டிகள் 10 வயது, 11 வயது சிறுவர்கள் என்பதுதான் வேடிக்கை. இவர்களும் தரக்குறைவாகவும், முரட்டுத்தனமாகவும் வெளிநாட்டுப் பயணிகளிடம் நடந்துகொள்வதுதான் வாடிக்கை.
 2016-இல் இந்தியாவுக்கு 88 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்திருக்கிறார்கள். அவர்கள் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் அந்நியச் செலாவணி ரூ.1.5 லட்சம் கோடி. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டில் 49 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு ரூ.87,096 கோடி அந்நியச் செலாவணியை வழங்கியிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டின் முதல் அரையாண்டைவிட 22.3% அதிகம்.
 பதேபூர் சிக்ரியில் சுவிஸ் தம்பதிக்கு நடந்ததைப்போல் இந்தியாவின் வேறு பல பாகங்களிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன, நடந்துவருகின்றன. பாலியல் வன்முறைகூட இதில் அடக்கம். அதனால்தான் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்று வெளிநாட்டினர் பலர் இந்தியாவைக் குறிப்பிடுகின்றனர். விருந்தினர்களை வரவேற்பது இந்தியாவின் பொதுக்கலாசாரமாகக் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், நமது தேசத்தின் பெருமைகளையும் வரலாற்றுச் சுவடு
 களையும் தெரிந்து கொள்ள வரும் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்காக தலைகுனிய வேண்டும்!

No comments:

Post a Comment

Retd prof sues firm for faulty car, wins ₹12 lakh refund

Retd prof sues firm for faulty car, wins ₹12 lakh refund  TIMES NEWS NETWORK 25.11.2024 Bengaluru : An automaker and its dealer in Yelahanka...