Monday, October 30, 2017

ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ஆண் குழந்தைக்கு ரூ.1,000, பெண் குழந்தைக்கு ரூ.500: குழந்தை பிறந்ததை பெற்றோரிடம் தெரிவிக்க பணம் வசூல் - புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் உறுதி
ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ஆண் குழந்தைக்கு ரூ.1,000, பெண் குழந்தைக்கு ரூ.500: குழந்தை பிறந்ததை பெற்றோரிடம் தெரிவிக்க பணம் வசூல்  புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் உறுதி
ராயபுரம் அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் குழந்தை பிறந்ததை சொல்வதற்கு கட்டாயமாக பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம் தெரிவித்தார்.
வடசென்னையின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை உள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் 510 படுக்கை வசதிகளுடன் செயல்படும் இந்த மருத்துவமனைக்கு வடசென்னை மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் பிரசவத்துக்காக பெண்கள் அதிக அளவில் வருகின்றனர். படுக்கை வசதி கிடைக்காத கர்ப்பிணிகள் தரையில் படுத்திருக்க வேண்டியுள்ளது. இங்குள்ள ஊழியர்களுக்கு பணம் கொடுத்தால்தான் குழந்தை பிறந்ததையே சொல்கின்றனர். ஆண் குழந்தைக்கு ரூ.1,000, பெண் குழந்தைக்கு ரூ.500 என வசூலிக்கின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லை
இவை தவிர மருத்துவமனையின் பின்பக்கம் உள்ள ஜன்னல் வழியாக குழந்தையை காட்டுவதற்கும், உணவு, துணிகள் போன்றவற்றை உள்ளே கொடுப்பதற்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. காலை, மதியம், மாலையில் பார்வையாளர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த நேரத்தில் முறையான ஒழுங்குபடுத்துதல் இல்லாததால் தள்ளு முள்ளு ஏற்படுகிறது. தண்ணீர் வசதி, இருக்கை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத தால் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் குழந்தை திருட்டு சம்பவங்களும் நடைபெற்று வருவதால், பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் பெண்கள் அச்சத்துடன் உள்ளனர்.
பிரசவ வார்டுக்குள் உறவினர்கள் அனுமதிக்கப்படாததால் குழந்தையை ஜன்னல் வழியாக உறவினர்களுக்குக் காட்டும் பெண்.   -  படங்கள்: ம.பிரபு
இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறும்போது, “மருத்துவமனையில் அடிப்படை வசதி கள் இல்லை. தண்ணீர் குடிக்கக்கூட வெளியே செல்ல வேண்டியுள்ளது. டாக்டர்களும் சரியாக வருவதில்லை. தனியார் மருத்துவமனைக்கு போக வசதி இல்லாததால்தான் இங்கு வருகிறோம். ஆனால் இங்கு எதற்கெடுத்தாலும் பணம் கேட்கின்றனர். பிறந்த குழந்தையை பார்க்கக் கூட அனுமதிப்பதில்லை.
கருவிகள் பழுதானதால் இங்கு பரிசோதனை வசதிகளும் இல்லை. பரிசோதனைகளுக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்லுமாறு சொல்கின்றனர். கர்ப்பிணிகளை அழைத்துக் கொண்டு அவ்வளவு தூரம் செல்வது மிகவும் கஷ்ட மாக உள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்” என்றனர்.
குறையும் நோயாளிகள்
பிரசவத்துக்காக அதிக அளவில் பெண்கள் அனுமதிக்கப்படும் அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 20 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். அவர்களும் சரியாக பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த மருத்துவமனையில் 2015-16-ம் ஆண்டில் உள்நோயாளிகளாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 28 பேர் சிகிச்சைப் பெற்ற நிலையில், 2016-17-ம் ஆண்டில் இது 1 லட்சத்து 96 ஆயிரத்து 791 ஆக குறைந்துள்ளது. அதேபோல் உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் 566-ல் இருந்து 539 ஆக குறையத் தொடங்கியுள்ளது. 2015-16-ம் ஆண்டில் வெளிநோயாளிகளாக 89,992 பேர் சிகிச்சை பெற்ற நிலையில், 2016-17-ம் ஆண்டில் 84,004 ஆக குறைந்துள்ளது.
புகார் கொடுத்தால் நடவடிக்கை
இதுதொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் பொன்னம்பல நமச்சிவாயத்திடம் கேட்டபோது, “ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும். 90 சதவீதம் பெண்களுக்கு தேவை யான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. வலிப்பு நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள பெண்கள் மட்டும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி எத்தனை டாக்டர்கள் இருக்க வேண்டுமோ அத்தனை டாக்டர்கள் உள்ளனர். குழந்தை திருட்டைத் தடுக்க மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
குழந்தை பிறந்ததை சொல்வதற்கு பணம் வசூலிப்பதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், யாரும் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுப்பதில்லை. அப்படி யாராவது புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...