மெர்சல் பட பாணியில் தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு விலை பேசிய புரோக்கர்!
கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயன்ற புரோக்கரை போலீஸார் கைது செய்தனர்.
தீபாவளிக்கு, வெளியான மெர்சல் படம் மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்கள் குறித்து விமர்சனம் செய்திருந்தது. இந்தப் படத்தில் ஒரு காட்சி வரும், விபத்தில் சிக்கிய ஒருவரை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க விலை பேசுவார்கள். தற்போது, இதே பாணியில், கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்றுவந்த ஒருவரை, தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக பேரம் பேசிய புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சந்திரசேகர்(40). விபத்து ஒன்றில் சிக்கிய இவர் நேற்று காலை, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜான் என்ற முருகன் (47) வந்தார். அவர் சந்திரசேகரிடம், வழக்கு நடத்தி காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் பணம் பெற்றுத் தருவதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்றும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு சந்திரசேகர் மறுத்துள்ளார். மேலும், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அங்குப் பணியில் இருந்த ரமேஷ்ராஜா என்ற மருத்துவருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக அவர் ஜானை அணுகி, 'எதற்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயற்சி செய்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். அதற்கு, தனக்குப் பின்னால் பெரிய அதிகாரிகள் இருப்பதாகவும், பகைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவரை ஜான் மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் ரமேஷ், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஜான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், வழக்கறிஞர்கள், மற்றும் காவல்துறையில் பணியாற்றும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment