மக்களை கவர்ந்த மருத்துவர் சேஷகிரி: ஏழைகளின் தெய்வமாக விளங்கும் மாமனிதர்
தாம்பரம்
அரசு மருத்துவமனையைத் தவிர மற்ற தனியார் மருத்துவமனைகளில் ஏழைகள் செல்ல முடியாத அளவுக்கு மருத்துவக் கட்டணம் உயர்ந்து விட்ட தற்போதைய நிலையில், தாம்பரத்தில் ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வருகிறார் மருத்துவர் சேஷகிரி.
கடந்த, 40 வருடங்களாக ஏழை மக்கள் தெய்வமாக வணங்கி வரும் நிலையில் மருத்துவ சேவை செய்து வருகிறார், தாம்பரத்தைச் சேர்ந்த மருத்துவர், சேஷகிரி (79). கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சேஷகிரி, 50 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் குடியேறினார். தாம்பரம் நெஞ்சக நோய் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர், தாம்பரம் காந்தி சாலையில் தன்னுடைய வீட்டில், 40 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் செய்தார். இரண்டு ரூபா மருத்துவர் என்று மக்களால் அன்போடு அவர் அழைக்கப்பட்டார்.
தற்போது பெரிய நகரமாக வளர்ந்து விட்ட தாம்பரத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு குடிசைகள், ஏழை மக்கள் நிறைந்த ரங்கநாதபுரம், கைலாசபுரம், கடப்பேரி, மாந்தோப்பு ஆகிய பகுதிகளில், சாலையோர வியாபாரிகள், ஏழை கூலி தொழிலாளிகள் வசித்து வந்துள்ளனர். அந்த நேரத்தில் உடல் நலம் இல்லாமல் தன் கிளினிக்குக்கு வரும் ஏழை தொழிலாளிகள் அனைவருக்கும், இலவசமாகவே மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். கட்ட ணம் கொடுக்க விரும்பும் நோயாளிகளிடம் 2 ரூபாய் மட்டும் கட்டணம் வாங்கத் தொடங்கினார்.
அப்போது தாம்பரத்தில் மருத்துவர்களும் குறைவு, மருத்துவமனைகளும் குறைவு. எனவே மருத்துவர் சேஷகிரியை சந்தித்து மருத்துவ சிகிச்சை பெற கூட்டம் குவிந்திருக்கும். கூட்டம் குவிந்தாலும் அவர் வசூலிக்கும் கட்டணம் கூடவில்லை. மருத்துவமனை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே சொத்துகளை வாங்கிக் குவிக்கும் மருத்துவர்கள் இருக்கும் இக்காலத்தில், தன் குடும்பத் தேவைக்காக தன்னுடைய தோட்டம், வீட்டின் ஒரு பகுதியை விற்றவர் மருத்துவர் சேஷகிரி.
எதிர்ப்புகள் - இடையூறுகள்
மருத்துவ சேவையை காசாக்கும் முனைப்பில் உள்ள பிற மருத்துவர்களின் எதிர்ப்பு களையும், இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் அவர் தனது சேவையைத் தொடர்ந்தார். கால ஓட்டத்தில் விலைவாசி உயர்ந்தபோதும், இவருடைய இரண்டு ரூபாய் கட்டணம், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என மனிதாபிமானத்தோடு காலத்தைக் கடந்து, கடந்த இரண்டு வருட காலமாய் இருபது ரூபாய் என நிலை கொண்டுள்ளது. அதுவும், 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளாக கொடுத்தால்தான் வாங்குவார். மருந்துகளும், 10 ரூபாய், 12 ரூபாய் என மிகக்குறைந்த விலைதான்.
வியாதியுடன் ஏழ்மை நிலையில், கிழிந்த ஆடைகளில் பணம் முடிந்துகொண்டு வருகிற நோயாளிகளுக்கு சிகிச்சையும், ஊசி, மருந்துகளும் இலவசம். தேவையில்லாமல் மருந்துகளை பரிந்துரைக்க மாட்டார்.
பலதரப்பு மக்களும் வசதியுடையவர்களும் கூட இவரை நாடி வருகின்றனர். இவருடைய சேவையும், அன்பும், அரவணைப்பும் எவ்வித விளம்பரமும், பிரச்சாரமும் இன்றி இன்றும் தொடர்கிறது. நெஞ்சக நோய் மருத்துவமனையில் பணியாற்றியதால் தாம்பரத்தில் சளி மற்றும் டி.பி. நோய்களால் அவரிடம் செல்லும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார். குறைந்த செலவில் ரத்தப் பரிசோதனை மையம் நடத்தி, மற்ற பரிசோதனை மையங்களை திகைக்கச் செய்தவர். தற்போது சரிவர ஆட்கள் கிடைக்காததால் ரத்தப் பரிசோதனை மையத்தை மூடி விட்டார்.
மருத்துவர்களுக்கு முன்னோடி
சாதாரண தலைவலி என்றாலே இருக்கின்ற எல்லா பரிசோதனைகளையும் செய்யச் சொல்கிற மருத்துவர்கள் மத்தியில், அந்த பரிசோதனைகளை பெரும்பாலும் தவிர்த்து, அனுபவ ரீதியாக என்ன நோய் என்பதை அறிந்து மருந்து கொடுப்பதில் மருத்துவர் சேஷகிரி மற்ற மருத்துவர்களுக்கு முன்னோடி என் கிறார்கள், அவரால் பயன் பெற்றவர்கள்.
விளம்பரத்தை விரும்பாதவர்
இதுகுறித்து தாம்பரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், முன்னாள் கவுன்சிலருமான, செல்வகுமார் கூறியதாவது: ‘தன்னுடைய இருப்பு என்பதே மக்களுக்கான மருத்துவ சேவைக்காகவே’ என்ற உறுதியை மருத்துவர் சேஷகிரி என்றுமே தளர்த்தியதில்லை. கடந்த 40 ஆண்டுகளில் ஒருநாள் கூட அவர் கிளினிக்குக்கு வராமல் இருந்ததில்லை. பலமுறை ஊடகங்கள் அவரின் சேவையை செய்தியாக்க முனைந்தபோது விளம்பரங்கள் எதுவும் தேவையில்லை என்பார். இரண்டு நாள் மருந்து, மாத்திரை சாப்பிட்டால் போதும்; உடம்பு சரியாகிவிடும். தேவைப்பட்டால் மட்டுமே வெளியே ஊசி, மருந்து வாங்கி வரச் சொல்வார்.
நலமோடு வாழ வேண்டும்
மாதம் ஒருமுறை தாம்பரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள குவாரி, கிரஷர் பகுதிகளுக்குச் சென்று, அங்கு பணிபுரியும் கூலி தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் சிகிச்சை அளிப்பார். கடவுளை நேரில் பார்த்ததில்லை. மருத்துவர் சேஷகிரியின் ரூபத்தில்தான் பார்க்கிறோம். இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமோடு வாழ வேண்டும் என தெய்வத்தை தினம் தினம் வேண்டுகிறோம்.
என்னைப் போலவே தாம்பரத்தின் மக்கள் அனைவரும் அவர் நீண்ட ஆயுளுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து தங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்கள். தாம்பரம் நகரம், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா போன்ற பல தலைவர்களைக் கண்டுள்ளது. அந்த வகையில் தாம்பரத்தின் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்தவர்தான் மருத்துவர் சேஷகிரி.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment