Tuesday, October 31, 2017

பாரிவேந்தர் மீதான வழக்கு: ரத்து செய்தது ஐகோர்ட்


சென்னை: எஸ்.ஆர்.எம்., குரூப் கல்வி நிறுவனங்களின் தலைவர், பாரிவேந்தருக்கு எதிரான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னையை அடுத்த, காட்டாங்குளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவப் பல்கலையில், மருத்துவப் படிப்புக்கு இடம் பெற்று தருவதாக, கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக, 'வேந்தர் மூவிஸ்' நிர்வாகி மதன் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பல்கலையின் நிர்வாகி பாரிவேந்தர் மீதும், புகார் கூறப்பட்டது; மதன், தலைமறைவானார்.
சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், 75 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டதை தொடர்ந்து, பாரிவேந்தருக்கு,
நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. தலைமறைவாக இருந்த மதன், பல மாதங்களுக்கு பின், திருப்பூரில் பிடிபட்டார். தற்போது, ஜாமினில் உள்ளார்.
வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாரிவேந்தர் மனு தாக்கல் செய்தார். வழக்கை ரத்து செய்ய மறுத்த,
நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 'மாணவர்கள், பெற்றோருக்கு பணத்தை திருப்பி தர, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், கமிஷனராக நியமிக்கப்படுகிறார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், டிபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையை, 136 பேருக்கும் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை 
எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பாரிவேந்தர் மனு தாக்கல் செய்தார். 
மனுவை விசாரித்த, நீதிபதிகள்
ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட, குற்ற நடவடிக்கையை ரத்து செய்ய, தங்களுக்கு ஆட்சேபனையில்லை என, உயர் நீதிமன்றத்தை அணுகி, பணம் கோரும் அனைவரும் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், மனுதாரருக்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
இதையடுத்து, பணம் கொடுத்தவர்கள் தரப்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பாரிவேந்தர் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் வி.டி.கோபாலன், பி.குமார், வழக்கறிஞர் வி.வெங்கடேசன், மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகினர்.
இவ்வழக்கில், நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவு:
பணம் கோரியவர்கள் அனைவரும், ஒப்புதல் தெரிவித்து, மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மனுதாரர் தரப்பிலும் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் எல்லாம் சரியான நபர்கள் தான் என, உறுதி அளிக்கப்பட்டது. ௧௩௬ பேரில், ௧௧ பேர், மேற்கொண்டு விசாரணைக்காக, கூடுதல் துணை ஆணையரை அணுகலாம்.
மருத்துவ, 'சீட்' தொடர்பாக, யார் பணம் கொடுத்திருந்தாலும், அதை உறுதி செய்யும் விதத்தில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையரை அணுகலாம். அதிகாரியும், ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, ஒரு வாரத்தில், நீதிமன்றம் நியமித்த கமிஷனரிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பச்சமுத்துவுக்கு எதிரான வழக்கு, ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்ற ஆணையரின் அறிக்கையை பதிவு செய்வதற்காக, விசாரணை, நவ., ௩௦க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024