Sunday, October 29, 2017


90% மக்களைப் பாதிக்கும் சர்க்கரை விலை உயர்வு... சாதாரணமானது தானா அமைச்சர்களே?

vikatan 
ச.ஜெ.ரவி





'சீனி சர்க்கரை சித்தப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா!' என்று கிராமத்தில் சொலவடை ஒன்று உண்டு. ஏழை, எளிய மக்களின் இந்தக் கிராமிய மொழியை உண்மையாக்க முயன்றிருக்கிறது அரசின் புதிய அறிவிப்பு. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்தி, 'இனி எல்லோருக்கும் ரேஷன் பொருள்கள் கிடைக்காது' என்ற அச்சத்தை சாதாரண மக்களிடம் விதைத்த ஆளும் அரசுகள், இப்போது ரேஷனில் வினியோகிக்கப்படும் சர்க்கரை விலையைக் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தி, ஏழை, எளிய மக்கள்மீது இன்னுமொரு தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே பொது விநியோகத்திட்டமான ரேஷன் விநியோகத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மாநிலங்களில் முதலிடம் தமிழகத்துக்குத்தான். தி.மு.க., அ.தி.மு.க. என ஆட்சி மாறினாலும், இந்தக் காட்சி மட்டும் மாறாமலே இருந்தது. தற்போது இந்தப் பாதையிலிருந்து தமிழகம் திசைமாறத் தொடங்கியிருக்கிறது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்ட அறிவிப்பைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதன் மூலம், 'மாதம் 8,333 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள குடும்பத்திற்கு இனி ரேஷன் பொருள்கள் கிடைக்காது' என்ற அச்சத்தை, மக்களிடம் விதைத்த தமிழக அரசு, இப்போது சர்க்கரை விலையை இருமடங்காக உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது.

தமிழகத்தில் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகம் ஏற்றால் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தவரை இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தே வந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எந்தக் கேள்வியும் இல்லாமல் அ.தி.மு.க. அரசு உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்தியது.



மறுபுறம், மற்றுமொரு தாக்குதலாக சர்க்கரைக்கு வழங்கப்படும் வரும் மானியத்தை ரத்து செய்வதாக அறிவித்தது மத்திய அரசு. தமிழகத்தில் அனைவருக்குமான பொது விநியோகத்திட்டத்தை, கடுமையாகப் பாதிக்கும் இந்த அறிவிப்புக்குத் தமிழக அரசு அழுத்தமான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. இதனால் மானிய ரத்து அமலானது. 'சர்க்கரைக்கான மத்திய அரசின் மானியம் ரத்தானாலும் சர்க்கரை விலையை உயர்த்தப்போவதில்லை' என அப்போது அமைச்சர்கள் சொன்னார்கள். ஆனால், அதை மீறி இப்போது சர்க்கரை விலையை இருமடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி, வரும் நவம்பர் 1ம் தேதி முதல் சர்க்கரை விலை ரூ.13.50 -ல் இருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ், அரிசி கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சம் 2 கிலோ சர்க்கரையும், சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்களுக்கு 5 கிலோ சர்க்கரையும், கிலோ ரூ.13.50 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 37 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 10 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் சர்க்கரைக்கான மானியத்தொகையை மத்திய அரசு வழங்கி வந்தது. அதாவது ஒருகிலோ சர்க்கரைக்கு 18.50 காசுகள் வீதம், 10,800 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு ஆண்டுக்கு 240 கோடி ரூபாய் மானியமாக வழங்கி வந்தது. இந்த மானியத்தை மத்திய அரசு நிறுத்தியது. இதையடுத்து தற்போது சர்க்கரை விலையை ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தியுள்ளது தமிழக அரசு.



இதனால் ஏழை, எளிய மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாவர்கள். தமிழகத்தில் 1.98 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 'அந்தயோதயா அன்ன யோஜனா' திட்டத்தில் அரிசி பெறும் 18.64 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும், பழைய விலையான ரூ.13.50 விலையிலேயே தொடர்ந்து சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி., தமிழகத்தில் உள்ள 91 சதவீத ரேஷன் கார்டுதாரர்களுக்குச் சர்க்கரை விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களைப் பாதிக்கும் அறிவிப்பு என்பது நிச்சயம் மக்களைப் பெரிதும் பாதிக்கும்.

90 சதவீதம் பேரை பாதிக்கும் ஒரு விலை உயர்வைச் சர்வசாதாரணமாக அறிவித்து விட்டு, 'இது யாரையும் பாதிக்காது. 9 சதவீதம் பேருக்கு பழைய விலையிலேயே சர்க்கரை வழங்குகிறோம்' என்ற பெருமையாக அறிவிக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். 'சர்க்கரை விலையேற்றம் சாதாரணமானதுதான்' எனச்சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை எதிர்த்து, சர்க்கரை மானியம் ரத்தை எதிர்த்தும் மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையாகப் போராடியிருக்க வேண்டிய தமிழக அரசு, மத்திய அரசை எதிர்த்து எதுவும் பேசாமல், மத்திய அரசிடம் எதையும் கேட்காமல் ஏழை எளிய மக்கள்மீது போர் தொடுப்பது என்பது சரியானதல்ல. 'உணவுப்பாதுகாப்புத் திட்டத்தைக் கண்டு பயப்பட வேண்டாம். சர்க்கரை மானியம் ரத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம். மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என வாக்குறுதி கொடுத்த அமைச்சர்கள், இப்போது விலையேற்றம் சாதாரணமானதுதான் எனக் கடந்து செல்வதுதான் கொடுமை.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024