ஆதார் குழப்பத்தில் இது புதுசு: 800 கிராமத்தினருக்கு ஒரே பிறந்த தேதி?!
By DIN | Published on : 28th October 2017 01:06 PM
ஹரித்வார்: ஆதார் அட்டையில், பொதுமக்களின் விவரங்களை பதிவு செய்ததில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தது ஊரறிந்த விஷயம்தான்.
இதேப்போன்று படுஜோரான விளம்பரத்தைத் தேடிக் கொண்டது நம்ம ஊர் ஸ்மார்ட் கார்டுகள். காஜல் அகர்வால் புகைப்படம் முதல், மாமனாரின் பெயரை கணவர் பெயராக மாற்றியது வரை தமிழக மக்களை அல்லோலப்படுத்தியது.
பல தடைகளைத் தாண்டி ஆதார் அட்டையை, முக்கிய சேவைகளுக்குக் கட்டாயமாக்கியது மத்திய அரசு. வெறும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் ரேஷனில் அரிசி, கோதுமை வழங்கப்படாமல் உயிரிழப்புகள் வேறு.
நிலைமை இப்படி இருக்க, உத்ராகண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்த கெய்ந்தி கடா கிராமத்தில் வாழும் 800 பேருக்கும் ஒரே பிறந்த தேதியை பதிவு செய்து அசத்தியுள்ளனர் அதிகாரிகள்.
அதாவது, பிறந்த தேதி தெரியாதவர்களுக்கு, ஜனவரி ஒன்று என்பதை பிறந்த தேதியாக பதிவு செய்யும் வகையில் ஆதார் அட்டையில் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால், ஒரு கிராமத்தில் வாழும் 800 பேருக்குமே பிறந்த தேதி தெரியாதா? தெரிந்தவர்களுக்கும் அப்படியே வழங்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை.
ஒவ்வொருவருக்கும் தனித்தனி எண் என்று சொன்னார்கள். ஆனால் இங்கு எல்லோருக்குமே ஒரே பிறந்த தேதியாக இருக்கிறதே? என்று கேட்கிறார் கிராம மக்களில் ஒருவர்.
ஒருவருக்கு தங்களது பிறந்த தேதி தெரிந்தால் அது பதிவு செய்யப்படும். தெரியாத பட்சத்தில், வயதைக் கணக்கெடுத்து அந்த ஆண்டில் ஜனவரி 1ம் தேதி பிறந்ததாக பதிவு செய்யப்படும்.
இந்த குளறுபடி குறித்து விளக்கம் அளித்திருக்கும் அதிகாரி, இது தற்போதுதான் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment