நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வருமான வரித்துறையிடம் முறையாக கணக்கு தாக்கல் செய்வதில்லை. அதனால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வரித்துறை முடிவெடுத்துள்ளது. குறிப்பிட்ட கெடுவுக்குள் கணக்கு விபரங்களை தரா விட்டால் தீவிர சோதனைக்கும் ஆயத்தமாகி வருகிறது. வரும் டிசம்பருக்குள் 'அட்வான்ஸ் வரி' செலுத்தாதவர்களுக்கு சிக்கல் காத்திருக்கிறது. 'மெர்சல்' பட விவகாரத்திலும் வசூல் கணக்கு மறைக்கப்பட்டால் கடும் நடவடிக்கைகள் பாயும் என தெரிகிறது.
இது குறித்து தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
மற்ற துறைகளை விட திரைப்படத் துறையில் புரளும் பணத்தை கண்காணிப்பது மிகவும் கடினம். பெரும்பாலான தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு தரப்பட்ட உண்மையான சம்பளத்தை குறிப்பிடுவதில்லை. அவர்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடும் தொகைக்கும்
உண்மையில் கொடுத்த தொகைக்கும் வித்தியாசம் பன்மடங்கு இருக்கும்.
நடிகர்கள் சிலர் சினிமா வினியோக உரிமையை ஊதியமாக பெறுகின்றனர். அதில் அவர்களுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பதை கணிப்பது பெரிய சிரமம். திரைத்துறையில் புழங்கும் கணிசமான தொகை எங்கள் கண்களுக்கு தென்படுவதில்லை. அப்படி இருந்தும் வழக்கமாக தாக்கல் செய்ய வேண்டிய வருமான வரி கணக்கையும் குறித்த கெடுவிற்குள் பலர் தாக்கல் செய்வதில்லை.
ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் வருமான வரியை முறையாக செலுத்துவது இல்லை. உதாரணத்திற்கு நடிகர் விஷாலின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த பிரச்னையை கூறலாம். அவர் 2014 - 15; 2015 - 16 மற்றும் 2016 - 17ம் நிதியாண்டுகளுக்கு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வருமான வரியை எங்களிடம் கட்டவில்லை. ஒவ்வொரு காலாண்டிலும் அந்த கணக்கை தாக்கல் செய்தாக வேண்டும்.
இதேபோல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு படத்தை எடுத்து முடித்ததும் அதற்கான கணக்கை ஒரு மாதத்திற்குள் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். சில நிறுவனங்கள் மட்டுமே வரித்துறையின் விதிகளை பின்பற்றி நடக்கின்றன. பல நிறுவனங்கள் விதிகளை பின்பற்றாதது
ஆய்வில் தெரியவந்துள்ளது. அது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அந்நிறுவனங் களை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருக்க திட்டமிட்டுள்ளோம்.
நடிகர் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி., வரிவிதிப்புக்கு எதிராக வசனங்கள் இருப்பதாக கூறி பா.ஜ.,வினர் கொந்தளித்தனர். அதனால் பொது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியது. இது வரை 200 கோடி ரூபாய் வரை வசூலாகி
இருப்பதாக தெரிகிறது. வசூல் தொடருவதால் மேலும் பல கோடி ரூபாய் ஈட்டும் என தெரிகிறது.
திரைப்படத் துறையினர் மற்றும் நடிகர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் 'அட்வான்ஸ் வரி' என்ற பெயரில் முன்கூட்டியே உத்தேசமாக ஒரு குறிப்பிட்ட சதவீத வரியை கணக்கிட்டு செலுத்துவர். அதன்படி நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் வரும் டிச., மாதத்திற்குள் தங்கள் வருவாய்க்கு ஏற்றவாறு அட்வான்ஸ் வரி செலுத்த வேண்டும். அதனால் 'மெர்சல்' தயாரிப்பாளரும், விஜய்யும் எவ்வளவு வரி செலுத்துகின்றனர் என்பதை கண்காணித்து வருகிறோம். வசூலுக்கு ஏற்ப 'மெர்சல்' தயாரிப்பாளர் கணக்கு தாக்கல் செய்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -
No comments:
Post a Comment