Wednesday, February 28, 2018

'நீட்' தேர்வுக்கு தகுதி : சி.பி.எஸ்.இ., விளக்கம்

Added : பிப் 28, 2018 01:01

புதுடில்லி: 'நீட் நுழைவுத் தேர்வுக்கான தகுதிகளை, எம்.சி.ஐ., எனப்படும் இந்திய மருத்துவக் கவுன்சில்தான் நிர்ணயிக்கிறது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, வரும், மே, 6ல் நடக்க உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, மார்ச் 9, கடைசி நாள். இந்நிலையில், 'தேசிய மற்றும் மாநில திறந்தநிலைப் பள்ளிகளில் படித்தோர் மற்றும் உயிரியல் பாடத்தை கூடுதல் பாடமாக படித்தோர், நீட் தேர்வு எழுத முடியாது' என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, பல்வேறு கேள்விகள், விளக்கங்கள் கோரப்பட்டு வருவதால், சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:நீட் நுழைவுத் தேர்வை மட்டுமே நாங்கள் நடத்துகிறோம். அதற்கான தகுதி உள்ளிட்டவற்றை, இந்திய மருத்துவக் கவுன்சிலே நிர்ணயிக்கிறது. நுழைவுத் தேர்வுக்கான தகுதி தொடர்பாக சந்தேகம் இருந்தால், எம்.சி.ஐ.,யிடம் கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, 'கடந்தாண்டு, 107 நகரங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது; இந்தாண்டு, 150 நகரங்களில் நடத்தப்படும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர், சமூகதளத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதலாக, இரண்டு மையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குளியல் தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்தது எப்படி?

Updated : பிப் 27, 2018 11:12 | Added : பிப் 27, 2018 10:51

துபாய்: பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாய் ஓட்டலில், 'பாத்டப்'எனப்படும் குளியல் தொட்டியில் மூழ்கி எப்படி இறக்க முடியும் என்று ரசிகர்களிடையே கேள்வி எழுப்பி உள்ளது. எனினும், துபாய் போலீசார்,' அவர் குளியல் தொட்டியில் இருந்த தண்ணீரில் மூழ்கி தான் உயிர் இழந்தார்; அவரது ரத்தத்தில் மது கலந்து இருந்தது' என்றே கூறியுள்ளனர். இது தவிர வேறு காரணம் இல்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:குளியல் தொட்டியில் மூழ்கி ஒரு நபர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. நுரையீரலில் புகுந்த ஒரு கிளாஸ் தண்ணீர் கூட ஒரு மனிதரை இறக்க செய்யும் என்பதை உணர வேண்டும். குறிப்பாக ஒரு மனிதர் நினைவை இழந்த சூழ்நிலையில் இருக்கும் போது இதற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு மனிதர் சுய நினைவு இழந்த நிலையில் இருக்கும் போது சுவாச குழாயில் நுழைந்த சிறிதளவு தண்ணீர் கூட, மரணம் ஏற்பட காரணமாகி விடும். நடிகை ஸ்ரீதேவி விஷயத்தில் அவர் குளியல் தொட்டியில் விழுந்த போது சுய நினைவை இழந்து இருக்கலாம்.

உணவு குழாய், சுவாச குழாய்

ஒரு மனிதர் தண்ணீர் குடிக்கும் போது, அந்த தண்ணீர் உணவு குழாய் வழியாக வயிற்றுக்கு செல்லும். அல்லது சுவாச குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்லும். இதில் இரண்டாவது விஷயம் மிகவும் அபாயகரமானது. எனினும் உடலின் தன்மை அதை தவிர்க்கும் திறமை கொண்டது. ஒரு மனிதர் தண்ணீர் குடிக்கும் போது, உணவு குழாய் விரிவடையும்; சுவாச குழாய் தானாகவே மூடிக் கொள்ளும். இது தான் உடல் உறுப்புகள் செயல்படும் விதம். நமக்கும் தெரியாமலேயே இந்த நிகழ்வுகள் நடைபெறும். எனினும் இந்த நிகழ்வுகள் நடக்க, மூளையின் செயல்பாடு முக்கியம். சுய நினைவு இழந்த ஒரு மனிதரின் வாய்க்குள் புகும் தண்ணீர் மூளையின் தூண்டுதல் இல்லாமல், சுவாச குழாய் வழியாக நுரையீரலுக்கு சென்று விடும்.

மாரடைப்பு காரணம் இல்லை

ஒரு மனிதர் திடீரென மாரடைப்புக்கு ஆளாகும் போது சுயநினைவை இழக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், ஸ்ரீதேவி விஷயத்தில் அது நடக்கவில்லை. அவரது தமனிகளில் எந்த அடைப்பும் இல்லை என்றே உடல் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

வலிப்பு நோய் இல்லை

வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர் திடீரென சுய நினைவை இழக்கலாம். அது போன்ற சூழ்நிலையில் குளியல் தொட்டியில் விழுந்து முட்டி அளவு தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கலாம். ஆனால், ஸ்ரீதேவிக்கு வலிப்பு நோய் பாதிப்பு இல்லை.

மது, தூக்க மாத்திரை

இதுதவிர, ஒரு மனிதர் மது அருந்தி இருந்தாலோ, தூக்க மாத்திரைகள் எடுத்து கொண்டிருந்தாலோ, முட்டி அளவு தண்ணீரில் மூழ்கினால் இறக்க வாய்ப்பு உள்ளது. ஒரு மனிதர் அரை மயக்க நிலையில் இருந்தால், உணவு குழாய், சுவாச குழாய் செயல்பாடு வழக்கம் போல் இருக்காது. சுவாச குழாய் வழியாக எதாவது நுழைந்தால் அதை இருமல் மூலம் வெளியேற்ற முயற்சிப்போம். ஆனால், சுய நினைவு இழந்த மனிதருக்கு இரும கூட முடியாது. சுய நினைவு இழந்த மனிதர் இரும முயற்சித்தால், பிராண வாயு தடைபட்டு அவர் முழுவதுமாக சுய நினைவை இழப்பார்.

தலையில் காயம் இல்லை

அதுபோல் குளியல் தொட்டியின் முனை பகுதியில் பலமாக மோதி இருந்தால் சுய நினைவு இழந்து குளியல் தொட்டியின் உள்ளே விழுந்து விடலாம். ஆனால் இதுபோன்ற நேரத்தில் அந்த நபர் தலையின் பின் பகுதியில் அடிபட்டதற்கான அடையாளம் இருக்கும். சில நேரங்களில் மூளையில் கூட பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். உடல் பரிசோதனை செய்யும் போது இது கண்டுபிடிக்கப்படும். ஆனால், ஸ்ரீதேவி விஷயத்தில் தலையில் அடிபட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை. எனினும் ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். குளியல் தொட்டியில் இருக்கும் முட்டி அளவு தண்ணீர் கூட, ஒருவர் மூழ்கி உயிர் இழக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
எச் - 1பி விசா விதிகள் குறித்து கவலைப்பட தேவையில்லை'

Added : பிப் 28, 2018 00:58




நாக்பூர் :'புதிய, எச் - 1பி விசா கொள்கை குறித்து, இந்தியர்கள் கவலைப்படத் தேவையில்லை' என, அமெரிக்க துாதர் கூறி உள்ளார்.

வெளிநாடுகளை சேர்ந்த, திறன் மிக்க ஊழியர்கள், அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற, எச் - 1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான, மென்பொருள் துறை ஊழியர்கள், அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த வாரம், எச் - 1பி விசா விதிகளை மேலும் கடுமையாக்கி, புதிய கொள்கையை, அமெரிக்க அரசு அறிவித்தது. இது, அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரில் நேற்று, அமெரிக்க துாதர், எட்கர்ட் டி. ககான், நிருபர்களிடம் கூறியதாவது:அமெரிக்க அரசு, எச் - 1பி விசா வழங்கும் விதிகளில் செய்து வரும் மாற்றங்கள், இந்தியர்களுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற மனநிலை, இந்தியாவில் காணப்படுகிறது. இதுதொடர்பாக, இந்திய அரசும், அமெரிக்க அரசுடன் பேசியுள்ளது.

எச் - 1பி விசா விதி மாற்றங்கள் குறித்து, இந்திய தொழிலாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. இது, இந்தியா - அமெரிக்கா நாடுகள் இடையிலான நட்புறவு தொடர்பான விஷயம். எனவே, இதில் உள்ள பிரச்னைகள் சரி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விருதுநகரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு: மக்களுக்கான சேவைகள் அருகிலேயே கிடைக்க அரசு நடவடிக்கை




பொதுமக்களுக்கான அரசு சேவைகள் அருகிலேயே கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக விருதுநகர் எம்.பி. கூறினார்.

பிப்ரவரி 28, 2018, 03:30 AM
விருதுநகர்,

விருதுநகர் தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தென்மண்டல தபால் துறை இயக்குனர் பவன்குமார்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் விருதுநகர் தொகுதி எம்.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

இதற்கு முன்னர் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் விருதுநகர் மாவட்ட மக்கள் மதுரைக்கோ அல்லது நெல்லைக்கோ செல்ல வேண்டி இருந்தது. தற்போது அவர்களுக்கு இந்த சேவை விருதுநகரிலேயே கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ராமநாதபுரம் மாவட்டத்தை மூன்றாக பிரித்தார். விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் என்ற மூன்று மாவட்டங்களானது. இதன் மூலம் அந்தந்த மாவட்ட மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் எளிதில் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் நோக்கமே பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும், சேவைகளும் அவர்களுக்கு அருகிலேயே கிடைக்க வேண்டும் என்பது தான். அந்த வகையில் விருதுநகரில் இந்த பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தபால்துறை தென்மண்டல இயக்குனர் பவன்குமார்சிங் பேசியதாவது:-

தமிழகத்தில் வேலூர், சேலம் ஆகிய ஊர்களில் தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தென்மண்டலத்தில் முதன்முதலாக விருதுநகர் தலைமை தபால் அலுவலகத்தில் இந்த மண்டலம் தொடங்கப்படுகிறது. இங்கு இந்த மையம் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ராதாகிருஷ்ணன் எம்.பி.யின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் ஆத்திப்பட்டி, சாமிநத்தம் ஆகிய ஊர்களில் தபால் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விருதுநகரில் தபால்துறையின் வங்கி செயல்படுவதற்காக வங்கி மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாவட்டத்தில் உள்ள 285 தபால் அலுவலகங்களும் இந்த வங்கியின் கிளைகளாக செயல்படும். மாவட்டத்தில் இதுவரை தபால் அலுவலகங்களில் 55 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அதிக சேமிப்பு கணக்குகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பாஸ்போர்ட் பெறுவதற்கான முதல் விண்ணப்பத்தை ராதாகிருஷ்ணன் எம்.பி.யிடம் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் சண்முகமூர்த்தி வழங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.பி.க்கு தபால்துறையின் சார்பில், என் தபால்தலை என்ற ஆல்பம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் வரவேற்றார். விருதுநகர் தபால் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் நிரஞ்சளாதேவி நன்றி கூறினார்.

Tuesday, February 27, 2018

மயிலு... மயிலு..!

Published : 25 Feb 2018 11:31 IST

வி.ராம்ஜி











இந்தியாவின் கனவுக்கன்னி எனும் பெயரும் புகழும் பெற்ற நடிகைகள் இரண்டுபேர். ஹேமமாலினி, ஸ்ரீதேவி. இருவருமே தமிழகத்தின் தேவதைகள் என்பது, நமக்கெல்லாம் கூடுதல் பெருமையும் மகிழ்வும்! இதில் ஸ்ரீதேவி எனும் தேவதையின் மரணம் ஆறாத துக்கம்!

குழந்தை நட்சத்திரமாக வந்து நம் மனதில் புகுந்தவர் ஸ்ரீதேவி. இதில் ஆச்சரியம்... இன்றைக்கும் அதே முகம்... அதே சிரிப்பு... அதே வசீகரம். கமல், ரஜினிக்களின் ஹீரோயினாக வலம் வரும் போதே, இன்னொன்றும் நடந்தது. அதாவது தமிழ் சினிமாவின் மொத்த ரசிகர்களும் தங்களின் நாயகியாகவேப் பார்த்தார்கள்.


குழந்தையில் இருந்தே நடித்தாலும் குமரியாக பாலசந்தர் மூலம் அறிமுகம் கிடைத்தது. காதலனைப் பறிகொடுத்துவிட்டு, காதலனின் நண்பனே தன்னை அடைய நினைக்கும் வேளையில், அவனின் தந்தையை திருமணம் செய்து கொண்டு, அவனுக்கு சித்தியாகிற கதை பாலசந்தருக்குப் புதிதல்ல. ஆனால் நாயகியாய் வலம் வந்த முதல் படத்திலேயே அப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று, தைரியமாய் நடித்ததுதான், ஸ்ரீதேவி எனும் நடிகையின் முதல் வெற்றி!

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த இன்னொரு வாசல் என்று இன்றைக்கும் சொல்லப்படுகிற, கொண்டாடப்படுகிற ‘16 வயதினிலே’ மயில்..., ஸ்ரீதேவி தேவதையாக ஒளிரத் தொடங்கிய தருணம் அதுதான்.

கமல், ரஜினி, விஜயகுமார், ஜெய்கணேஷ் என பாரபட்சமே இல்லாமல், எல்லோருடனும் நடித்தார். அவ்வளவு ஏன்... நம்பர் ஒன் இடத்தில் இருந்த போது, சிவாஜிக்கு மகளாகவும் நடித்தார். ஜோடியாகவும் நடித்தார். எப்படி இருந்தால் என்ன... ஸ்ரீதேவியை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். தங்கள் வீட்டுப் பெண்ணாகவே அவரை நினைத்தார்கள். காரணம்... அந்த முகம்... வெள்ளந்தியான முகம். கண்களும் உதடுகளும் பேசிச் சிரிக்கிற பாந்தமான முகம்.

சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி வலம் வந்தார். காயத்ரி, வாழ்வே மாயம் , போக்கிரி ராஜா, வறுமையின் நிறம் சிவப்பு என ஒவ்வொரு படத்திலும் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்த ஸ்ரீதேவிக்கு... மிகப்பெரிய உயரமும் கெளரவமும் தந்தாள் விஜி. மூன்றாம் பிறை விஜியின் உடல்மொழியும் குரல்பாவனையும் குழந்தை போலான செய்கைகளும் எல்லா நடிகைகளுக்குமான தேவிபாடம்.

அண்ணன் தங்கை பாசமென்றால் பெரிய பாசமலர் சிவாஜி சாவித்திரி என்று சொல்லுவது போல, ஏதேனும் ஜோடியைச் சொல்ல... கமல் ஸ்ரீதேவி ஜோடி என்று எல்லோரும் கொண்டாடுகிற அளவுக்கு பாந்தமான ஜோதியாகவே பார்த்தார்கள் ரசிகர்கள்.

தமிழ்ப் படங்களைக் குறைத்துக் கொண்டு, ஹிந்தியில் கவனம் செலுத்தும் போது, எண்பதுகளின் இளைஞர்கள், பசிதூக்கம் மறந்த கதையெல்லாம் உண்டு. எத்தனையோ படங்கள், பட்டங்கள், வெற்றிகள், கிரீடங்கள் என்று புகழின் உச்சியில் வீறுநடை போட்டாலும், இம்மியளவு கூட கர்வத்தை தலைக்குள் ஏற்றிக் கொள்ளாமல், வாழ்ந்ததே ஸ்ரீதேவியின் அழகான வாழ்வியலுக்கு உதாரணம்.

குரு, மீண்டும் கோகிலா மாமி, ராணுவவீரன் என வந்தாலும் ஜானியில் அந்தப் பாடகி கேரக்டர்... ஸ்ரீதேவிக்கு அதாவது மயிலுக்கு கிடைத்த கிரிடத்தின் மற்றொரு இறகு. மிகப்பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இங்கிலீஷ் விங்கிலீஷ் ஸ்ரீதேவியின் இன்னொரு பரிமாணம்... பரிபாலனம். புலியில் வந்த மகாராணி வேஷமும் அதீத மேக்கப்பும் ஸ்ரீதேவியை மன்னித்து, மற்றவர்களைத் திட்டும் அளவுக்கு இருந்தனர் ரசிகர்கள். அதாவது, ஸ்ரீதேவி... ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்ரீதேவிதான்.

பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேன்... என்று சொல்லும்போது ஒரு எக்ஸ்பிரஷன். கோழிக்கு உடம்பு சரியில்லை எனும் போது, உடலில் டாக்டர் சில்மிஷம் பண்ண... அப்போது இன்னொரு எக்ஸ்பிரஷன். குருவம்மா இறந்ததும் பொறுப்புடனும் ஒருவித பயத்துடனும் நிதானத்துடனும் அணுகுகிற வேளையில் வேறொரு எக்ஸ்பிரஷன்... ’சந்தைக்குப் போ, தாலி வாங்கு. என்னையே நினைச்சிட்டிருக்கிற உனக்கு, என்னையே கொடுக்கப்போறேன்’ என்று சப்பாணியிடம் சொல்லும் போது, பக்குவமும் தெளிவுமான அட்டகாச எக்ஸ்பிரஷன்...

இன்னும் எத்தனையோ கனவுக்கன்னிகள் வரலாம். ஆனால், மயிலிறகென வருடிய அந்த முகம்... மயிலின் இடம்... எவராலும் நிரப்ப முடியாத இடம்.

ஸ்ரீதேவி... நின்று, நிதானித்து, மெதுமெதுவாய் வெற்றி சாம்ராஜ்ஜியம் கொண்ட பேரரசி. மரணம் மட்டும் அவசம் அவசரமாய்!

இந்த வயதிலேயே ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு. ரசிகர்களுக்குத்தான் நெஞ்சில் வலி!

மயிலின் ஆத்மா அமைதிபெறட்டும்.
கடும் வறட்சியினால் உணவின்மை எனும் கொடுந்துயரை நோக்கி தெற்கு சூடான்; உதவியில்லாத கொடூரம்

Published : 26 Feb 2018 15:20 IST

ஜூபா (தெற்கு சூடான்)




எங்கே உணவு? உணவு எங்கே? பலமைல்கள் நடந்து உணவைத்தேடி செல்லும் தெற்கு சூடான் ஏழை மக்கள். - படம். | ஏ.பி.

ஐ.நா. உலக உணவுத் திட்டத்தைச் சேர்ந்த ராஸ் ஸ்மித், “முன்னெப்போதும் இல்லாத அளவில் உணவுப்பாதுகாப்பின்மை”யை நோக்கி இந்த கிழக்கு ஆப்பிரிக்க நாடு (தெற்கு சூடான்) சென்று கொண்டிருக்கிறது என்றார்.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் முதல் நீரற்ற நகராக மாறுவது பற்றி செய்திகளும் எச்சரிக்கைகளும் வந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது தெற்கு சூடான் உணவற்ற நிலை என்ற அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.


தெற்கு சூடான் ‘வறட்சி’ என்று அறிவித்த ஓராண்டுக்குப் பிறகு உலகின் மிக இளம் நாடு என்று அறியப்படும் தெற்கு சூடான் நாட்டு மகக்ள் தொகையில் முக்கால்வாசிப்பேர் தீவிர பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் சிவில் யுத்தம் வேறு ஒருபுறம்.

இது குறித்து ஐநா அறிக்கை ஒன்று கூறும்போது, சுமார் 60 லட்சம் மக்கள் எந்தவித உதவியுமின்றி பட்டினியில் வாட நேரிடும் அபாயமிருக்கிறது என்று எச்சரித்துள்ளது. பட்டினிச்சாவை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 40% அதிகரித்துள்ளது என்கிறது இந்த அறிக்கை.

மேலும் ஒரு 11 ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 1,50,000 மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்கின்றனர்.

இது குறித்து ஐநா உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைச் சேர்ந்த ராஸ் ஸ்மித் கூறும்போது, “இதுவரை இல்லாத அளவு உணவின்மை நிலையாகும் இது” என்றார்.

மேலும் சிவில் யுத்தத்தினால் நாட்டில் உணவு தானிய உற்பத்தி படுமோசமாகச் செல்ல தெற்கு சூடானில் 3-ல் ஒரு நபர் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்கு சூடானில் உள்ள உணவு மற்றும் வேளாண் ஒழுங்குமுறை அமைப்பின் ஐ.நா. பிரதிநிதி, செர்ஜ் திசோ கூறும்போது, “நிலைமை குறித்த கணிப்புகள் பயங்கரமாக உள்ளன. இப்போது நாம் புறக்கணித்தால் ஒரு பெரிய துயரத்தை எதிர்கொள்ள நேரிடும்” என்று எச்சரித்தார்

அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் இது குறித்து கூறிய சோல் முகி என்ற தெற்கு சூடானில் மிகப்பாதிப்படைந்த அயோத் கவுண்ட்டியைச் சேர்ந்தவர் கூறும்போது, ‘உணவைத்தேடி ஓரிடம் விட்டு ஓரிடம் சென்று தேடிக்கொண்டிருக்கிறென்’ என்றார்.

மக்கள் கும்பல் கும்பலாக உணவுக்காக பல மைல்கள் குழந்தைக் குட்டிகளுடன் ஓரிடம் விட்டு ஓரிடம் செல்லும் கொடுமை இதில் அடங்கும்.

கடுமையாக ஊட்டச்சத்துக் குறைந்த தன் 1 வயது குழந்தைக்காக கிராமம் கிராமமாகச் சென்று இவர் ரேஷன் பொருட்கள் பெற்றவர்களிடம் பிச்சை எடுத்து வருகிறார்.

உதவிப்பணியாளர்கள் விடுக்கும் எச்சரிக்கையில், உணவு உதவி கிடைத்தாலும் கூட வரும் மே மாதம் முதல் தெற்கு சூடானில் 30 கவுண்ட்டிகளில் கடுமையான பட்டினிச்சாவுகள் ஏற்படும்.

அரசுப்படைகள் மற்றும் எதிர்ப்படைகள் மக்களுக்கு உணவுப்பொருட்களை அண்ட விடாமல் தாங்களே கொள்ளை அடித்து வருவதும் நடக்கிறது.
தொடர்பு எல்லைக்கு அப்பால்...

Published : 26 Feb 2018 10:29 IST
 
வாசு கார்த்திkarthikeyan.v@thehindutamil.co.in
வாசு கார்த்தி





எதிரி முழு பலத்துடன் விளையாடும் பட்சத்தில், ராஜா மற்றும் சில சிப்பாய்களுடன் ஒருவர் செஸ் விளையாடினால் அந்த ஆட்டம் எவ்வளவு கடினமாக, நெருக்கடியாக இருக்குமோ அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஏர்செல் இருக்கிறது. அனைத்து பக்கமும் நெருக்கடி இருக்கும் சூழலில் ஆட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டத்தில் ஏர்செல் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இருந்து வந்த நிதி நெருக்கடி தற்போது உச்சத்தை அடைந்திருக்கிறது.

இதன் காரணமாக அதன் சேவை முடங்கும் அளவுக்கு சென்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் சேவை முடங்கியது. இதன் காரணமாக மக்கள் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிடும் அளவுக்கு நிலைமை கைமீறி சென்றது. கடந்த சில நாட்களில் 10 லட்சம் பேர் மொபைல் சேவை நிறுவனத்தை மாற்றுவதற்கு விண்ணப்பித்திருக்கின்றனர்.

காரணங்கள் என்ன?

நிறுவனத்தின் தற்போதைய நிலைமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதல் முக்கியமான காரணம் ரிலையன்ஸ் ஜியோ. 2016 ஜூலை காலாண்டில் ஏர்செல் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூ.120 கோடியாக இருந்தது. ஆனால் 2017-ம் ஆண்டு ஜூலை காலாண்டில் ரூ. 5 கோடியாக குறைந்தது. 2017-டிசம்பர் காலாண்டில் ரூ.120 கோடி அளவுக்கு செயல்பாட்டு நஷ்டம் இருந்தது.

ஏற்கெனவே கடன் சுமையில் இருக்கும் நிறுவனத்துக்கு செயல்பாட்டு அளவிலே நஷ்டம் இருந்ததால் கடன் தொகை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடன் தொகையை வங்கிகளுக்கு செலுத்த முடியாத சூழல் உருவானது.

கடன் செலுத்த முடியாத சூழலில் கடந்த நவம்பர் மாதம், கடனை மறு சீரமைப்பு செய்வதற்கு வங்கிகளில் விண்ணப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மறுசீரமைப்பு குறித்து வங்கிகள் பிப்ரவரி வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் கடந்த 12-ம் தேதி ரிசர்வ் வங்கி புதிய உத்தரவினை வெளியிட்டது. ஆறு மாதங்களுக்கு மேல் கடனை செலுத்தாத நிறுவனங்கள் கடனை மறுசீரமைப்பு செய்ய முடியாது. ஆறு மாதங்களுக்கு மேல் கடனை செலுத்தாத நிறுவனங்கள் தேசிய சட்ட நிறுவன தீர்ப்பாயத்தை(என்சிஎல்டி) நாடவேண்டும். இவர்கள் மூலமாகவே அடுத்த கட்ட தீர்வுகள் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது.

என்சிஎல்டி அமைப்பை ஏர்செல் உடன் சம்பந்தப்பட்டவர்கள் (வங்கிகள், வர்த்தக உறவு வைத்திருப்பவர்கள்) யார் வேண்டுமானாலும் அணுகலாம். ஆனால் இங்கு ஏர்செல் நிறுவனமே இன்னும் சில நாட்களில் என்சிஎல்டி-யை அணுக இருக்கிறது என்னும் தகவல் வெளியாகி இருக்கிறது. என்சிஎல்டிக்கு சென்றால் என்ன நடக்கும் என்பதற்கு முன்பு ஏர்செல் வசம் இருக்கும் வேறு சில பிரச்சினைகளை பார்த்துவிடலாம்.

ஏர்செல் நிறுவனத்துக்கு வங்கிகளில் கடன் இருப்பது நீண்ட கால பிரச்சினை. சில காலாண்டுகளுக்கு முன்பு செயல்பாட்டு அளவில் லாபம் இருந்து வந்ததால், நிறுவனத்தின் சேவையில் பிரச்சினை இல்லாமல் இருந்தது. தற்போது செயல்பாட்டு அளவிலே நஷ்டம் ஏற்பட்டிருப்பதால் டவர் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை மூன்று மாதங்களாக செலுத்தவில்லை.

இதனால் மொத்தமுள்ள 8,000-க்கும் மேற்பட்ட டவர்களில் 6,500-க்கும் மேற்பட்ட டவர்கள் செயல்படவில்லை. டவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டது எங்களுக்கே அதிர்ச்சியான தகவல் என ஏர்செல் நிறுவனத்தின் தமிழகப் பிரிவு (strategic business unit)தலைவர் சங்கரநாராயணன் நம்மிடம் கூறினார்.

தவிர எவ்வளவு தொகை செலுத்த வேண்டி இருக்கிறது என்பதில் ஏர்செல் மற்றும் டவர் நிறுவனங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு சில வட்டாரங்களில் இருந்து ஏர்செல் விலகியது. அதனால் விலகிய வட்டாரங்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என டவர் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. முடியாது என ஏர்செல் கூறுகிறது. இந்த பிரச்சினையில் நெட்வொர்க் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பாக ஏர்செல் மொபைலில் இருந்து ஐடியா மற்றும் வோடபோனுக்கு அழைக்க முடியாத நிலை இருந்தது. ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்குக்கு அழைக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான கட்டணம்தான். ஆனால் செல்போன் நிறுவனங்கள் இந்த பரிமாற்றத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து ஐடியா நெட்வொர்க்குக்கு நாம் பேசுகிறோம் என்றால் நமக்கு வழக்கமான கட்டணம்தான்.

ஆனால் ஏர்செல் நிறுவனம் ஐடியாவுக்கு ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கொடுக்க வேண்டும். இதுபோல ஐடியாவில் இருந்து ஏர்செலுக்கு வந்தாலும் இதே கட்டணம்தான். இந்த கட்டணத்தை ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு ஏர்செல் செலுத்தவில்லை. (ஐடியாவுக்கு சுமார் ரூ.60 கோடி வரை செலுத்த வேண்டி இருக்கிறது) அதனால் ஏர்செல்லில் இருந்து இந்த நெட்வொர்க்களுக்கு அழைக்க முடியாத சூழல் உருவாகி வந்த நிலையில்தான் டவர் பிரச்சினை வெடித்தது.

சி.இ.ஓ. கடிதம்

இந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கைஸாட் ஹீர்ஜீ உயர் நிலை பணியாளார்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார். அதில் `வரும் காலத்தில் கடினமான சூழலை சந்திக்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறோம். தற்போதைய சூழலில் நிறுவனத்துக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்’ என்று கூறியிருக்கிறார். இந்த கடிதம் ஊழியர்களிடையே மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிறுவனத்தில் பணியாற்றும் 5,000 பணியாளர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி இருக்கிறது.

என்சிஎல்டி - வாய்ப்புகள் என்ன?

அதிக கடன், போட்டி நிறுவனங்களால் நஷ்டம். இதனால் வங்கி கடனையும் அடைக்க முடியவில்லை, டவர் நிறுவனங்களுக்கும் பணம் செலுத்தவில்லை. டவர் நிறுவனங்களுக்கு செலுத்தாததால் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. வங்கிகளுக்கு செலுத்தாததால் என்சிஎல்டிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. என்சிஎல்டிக்கு செல்லும்பட்சத்தில் நிறுவனத்தின் இயக்குநர் குழு கலைக்கப்பட்டு புதிய இயக்குநர் குழு (insolvency professional) உருவாக்கப்படும்.

இந்த குழு நிறுவனத்துக்கு இருக்கும் வாய்ப்புகளை ஆராயும். நிறுவனத்தை நடத்த முடியுமா, கடனை அடைப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை ஆராய்ந்து இந்தக் குழு தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும். ரூ.15,500 கோடி கடன் இருப்பதால் சொத்துகளை விற்று கடனை அடைக்கலாம் என்று முடிவெடுக்கலாம்.

அடுத்த வாய்ப்பு, ஏர்செல் நிறுனத்தின் கூற்றுப்படி தமிழ்நாடு, சென்னை, வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் ஆகிய வட்டாரங்களில் அதிக வாடிக்கையாளர்களுடன் முக்கியமான பிராண்டாக இருக்கிறது. இந்த பகுதிக்கான கடன் மற்றும் சொத்துகளை தனியாக பிரித்து நிறுவனத்தை நடத்துவதற்கான ஒரு வாய்ப்பும் இருக்கிறது. (மற்ற சொத்துகளை விற்று கடனை அடைக்க வேண்டும்).

குறிப்பிட்ட வட்டாரங்களை மட்டும் தனியாக பிரித்து நிறுவனத்தை நடத்தலாம் என்று நாங்கள் முடிவு எடுக்க முடியாது. ஆனால் இந்த முடிவை புதிய இயக்குநர் குழு எடுக்க முடியும் என சங்கரநாராயணன் கூறினார். ஆனால் அதுவரை வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனத்தில் தொடர்வார்களா என்பது அடுத்த பிரச்சினை. ஏற்கெனவே லட்சக்கணக்கானவர்கள் வேறு நிறுவனத்தை நாட ஆரம்பித்திருக்கும் நிலையில் இதுவும் சவால்தான். ஏர்செல் இன்னும் என்சிஎல்டியை அணுகவில்லை.

அதன் பிறகுதான் insolvency professional நியமனம் செய்யப்படுவார்கள். நியமனம் செய்து 270 நாட்களுக்குள் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுவிதியாகும். இல்லை எனில் சொத்துகளை விற்கும் பணி ஆரம்பமாகும்.

இந்த எல்லையில் சிப்பாய்களை அடுத்த எல்லைக்கு கொண்டு செல்லும்பட்சத்தில் ராணி, கோட்டையை மீட்பதற்கான வாய்ப்பு இருந்தாலும், அந்த வாய்ப்பு நிறைவேறுவதற்கு இருக்கும் சாத்தியங்கள் குறைவே. ஏதாவது அதிசயம் நடக்க வேண்டும். ஏர்செல் விஷயத்தில் அப்படிப்பட்ட அதிசயம் நடக்குமா?

karthikeyan.v@thehindutamil.co.in

NEWS TODAY 2.5.2024