Wednesday, February 28, 2018

எச் - 1பி விசா விதிகள் குறித்து கவலைப்பட தேவையில்லை'

Added : பிப் 28, 2018 00:58




நாக்பூர் :'புதிய, எச் - 1பி விசா கொள்கை குறித்து, இந்தியர்கள் கவலைப்படத் தேவையில்லை' என, அமெரிக்க துாதர் கூறி உள்ளார்.

வெளிநாடுகளை சேர்ந்த, திறன் மிக்க ஊழியர்கள், அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற, எச் - 1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான, மென்பொருள் துறை ஊழியர்கள், அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த வாரம், எச் - 1பி விசா விதிகளை மேலும் கடுமையாக்கி, புதிய கொள்கையை, அமெரிக்க அரசு அறிவித்தது. இது, அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரில் நேற்று, அமெரிக்க துாதர், எட்கர்ட் டி. ககான், நிருபர்களிடம் கூறியதாவது:அமெரிக்க அரசு, எச் - 1பி விசா வழங்கும் விதிகளில் செய்து வரும் மாற்றங்கள், இந்தியர்களுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற மனநிலை, இந்தியாவில் காணப்படுகிறது. இதுதொடர்பாக, இந்திய அரசும், அமெரிக்க அரசுடன் பேசியுள்ளது.

எச் - 1பி விசா விதி மாற்றங்கள் குறித்து, இந்திய தொழிலாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. இது, இந்தியா - அமெரிக்கா நாடுகள் இடையிலான நட்புறவு தொடர்பான விஷயம். எனவே, இதில் உள்ள பிரச்னைகள் சரி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...