Tuesday, February 27, 2018

மயிலு... மயிலு..!

Published : 25 Feb 2018 11:31 IST

வி.ராம்ஜி











இந்தியாவின் கனவுக்கன்னி எனும் பெயரும் புகழும் பெற்ற நடிகைகள் இரண்டுபேர். ஹேமமாலினி, ஸ்ரீதேவி. இருவருமே தமிழகத்தின் தேவதைகள் என்பது, நமக்கெல்லாம் கூடுதல் பெருமையும் மகிழ்வும்! இதில் ஸ்ரீதேவி எனும் தேவதையின் மரணம் ஆறாத துக்கம்!

குழந்தை நட்சத்திரமாக வந்து நம் மனதில் புகுந்தவர் ஸ்ரீதேவி. இதில் ஆச்சரியம்... இன்றைக்கும் அதே முகம்... அதே சிரிப்பு... அதே வசீகரம். கமல், ரஜினிக்களின் ஹீரோயினாக வலம் வரும் போதே, இன்னொன்றும் நடந்தது. அதாவது தமிழ் சினிமாவின் மொத்த ரசிகர்களும் தங்களின் நாயகியாகவேப் பார்த்தார்கள்.


குழந்தையில் இருந்தே நடித்தாலும் குமரியாக பாலசந்தர் மூலம் அறிமுகம் கிடைத்தது. காதலனைப் பறிகொடுத்துவிட்டு, காதலனின் நண்பனே தன்னை அடைய நினைக்கும் வேளையில், அவனின் தந்தையை திருமணம் செய்து கொண்டு, அவனுக்கு சித்தியாகிற கதை பாலசந்தருக்குப் புதிதல்ல. ஆனால் நாயகியாய் வலம் வந்த முதல் படத்திலேயே அப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று, தைரியமாய் நடித்ததுதான், ஸ்ரீதேவி எனும் நடிகையின் முதல் வெற்றி!

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த இன்னொரு வாசல் என்று இன்றைக்கும் சொல்லப்படுகிற, கொண்டாடப்படுகிற ‘16 வயதினிலே’ மயில்..., ஸ்ரீதேவி தேவதையாக ஒளிரத் தொடங்கிய தருணம் அதுதான்.

கமல், ரஜினி, விஜயகுமார், ஜெய்கணேஷ் என பாரபட்சமே இல்லாமல், எல்லோருடனும் நடித்தார். அவ்வளவு ஏன்... நம்பர் ஒன் இடத்தில் இருந்த போது, சிவாஜிக்கு மகளாகவும் நடித்தார். ஜோடியாகவும் நடித்தார். எப்படி இருந்தால் என்ன... ஸ்ரீதேவியை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். தங்கள் வீட்டுப் பெண்ணாகவே அவரை நினைத்தார்கள். காரணம்... அந்த முகம்... வெள்ளந்தியான முகம். கண்களும் உதடுகளும் பேசிச் சிரிக்கிற பாந்தமான முகம்.

சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி வலம் வந்தார். காயத்ரி, வாழ்வே மாயம் , போக்கிரி ராஜா, வறுமையின் நிறம் சிவப்பு என ஒவ்வொரு படத்திலும் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்த ஸ்ரீதேவிக்கு... மிகப்பெரிய உயரமும் கெளரவமும் தந்தாள் விஜி. மூன்றாம் பிறை விஜியின் உடல்மொழியும் குரல்பாவனையும் குழந்தை போலான செய்கைகளும் எல்லா நடிகைகளுக்குமான தேவிபாடம்.

அண்ணன் தங்கை பாசமென்றால் பெரிய பாசமலர் சிவாஜி சாவித்திரி என்று சொல்லுவது போல, ஏதேனும் ஜோடியைச் சொல்ல... கமல் ஸ்ரீதேவி ஜோடி என்று எல்லோரும் கொண்டாடுகிற அளவுக்கு பாந்தமான ஜோதியாகவே பார்த்தார்கள் ரசிகர்கள்.

தமிழ்ப் படங்களைக் குறைத்துக் கொண்டு, ஹிந்தியில் கவனம் செலுத்தும் போது, எண்பதுகளின் இளைஞர்கள், பசிதூக்கம் மறந்த கதையெல்லாம் உண்டு. எத்தனையோ படங்கள், பட்டங்கள், வெற்றிகள், கிரீடங்கள் என்று புகழின் உச்சியில் வீறுநடை போட்டாலும், இம்மியளவு கூட கர்வத்தை தலைக்குள் ஏற்றிக் கொள்ளாமல், வாழ்ந்ததே ஸ்ரீதேவியின் அழகான வாழ்வியலுக்கு உதாரணம்.

குரு, மீண்டும் கோகிலா மாமி, ராணுவவீரன் என வந்தாலும் ஜானியில் அந்தப் பாடகி கேரக்டர்... ஸ்ரீதேவிக்கு அதாவது மயிலுக்கு கிடைத்த கிரிடத்தின் மற்றொரு இறகு. மிகப்பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இங்கிலீஷ் விங்கிலீஷ் ஸ்ரீதேவியின் இன்னொரு பரிமாணம்... பரிபாலனம். புலியில் வந்த மகாராணி வேஷமும் அதீத மேக்கப்பும் ஸ்ரீதேவியை மன்னித்து, மற்றவர்களைத் திட்டும் அளவுக்கு இருந்தனர் ரசிகர்கள். அதாவது, ஸ்ரீதேவி... ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்ரீதேவிதான்.

பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேன்... என்று சொல்லும்போது ஒரு எக்ஸ்பிரஷன். கோழிக்கு உடம்பு சரியில்லை எனும் போது, உடலில் டாக்டர் சில்மிஷம் பண்ண... அப்போது இன்னொரு எக்ஸ்பிரஷன். குருவம்மா இறந்ததும் பொறுப்புடனும் ஒருவித பயத்துடனும் நிதானத்துடனும் அணுகுகிற வேளையில் வேறொரு எக்ஸ்பிரஷன்... ’சந்தைக்குப் போ, தாலி வாங்கு. என்னையே நினைச்சிட்டிருக்கிற உனக்கு, என்னையே கொடுக்கப்போறேன்’ என்று சப்பாணியிடம் சொல்லும் போது, பக்குவமும் தெளிவுமான அட்டகாச எக்ஸ்பிரஷன்...

இன்னும் எத்தனையோ கனவுக்கன்னிகள் வரலாம். ஆனால், மயிலிறகென வருடிய அந்த முகம்... மயிலின் இடம்... எவராலும் நிரப்ப முடியாத இடம்.

ஸ்ரீதேவி... நின்று, நிதானித்து, மெதுமெதுவாய் வெற்றி சாம்ராஜ்ஜியம் கொண்ட பேரரசி. மரணம் மட்டும் அவசம் அவசரமாய்!

இந்த வயதிலேயே ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு. ரசிகர்களுக்குத்தான் நெஞ்சில் வலி!

மயிலின் ஆத்மா அமைதிபெறட்டும்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...