Wednesday, February 28, 2018

கவுதமி புகார்: கமல் பதிலடி!

Added : பிப் 28, 2018 00:59




சென்னை: கமல் பட நிறுவனம், தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக கூறிய, நடிகை கவுதமிக்கு, 'அந்த விவகாரத்தை பட நிறுவனம் பார்த்துக் கொள்ளும்' என, நடிகர் கமல் பதில் அளித்துள்ளார்.

கமலை பிரிந்து வாழும் நடிகை கவுதமி, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கமல் நடித்த, 'தசாவதாரம், விஸ்வரூபம்' படங்களில், ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய வகையில், தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக, கவுதமி புகார் தெரிவித்திருந்தார். மேலும், கமலுடன் தற்போது, தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ, எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் கூறியிருந்தார். அரசியலில், கமலுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் நோக்கில், கவுதமி செயல்படுவதாக, கமல் தரப்பில் விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து, கவுதமி, மீண்டும், 'டுவிட்டர்' பக்கத்தில், நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: எனக்கும், கமலுக்கும், எந்த தொடர்பும் இல்லை. யாரிடமும், நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம், நான் உழைத்த படங்களுக்கு, உரிய சம்பளத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை. இது தெரியாமல், என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர்.இது, எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நான், தற்போது என் சொந்த முயற்சியில், எனக்காகவும், என் மகளுக்காகவும் உழைக்கிறேன். காரணம் இல்லாமல், நான் எதுவும் பேசமாட்டேன். தகுந்த ஆதாரத்தோடு தான், பேசுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளர்கள், கமலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''கவுதமி புகார் விவகாரத்தை, சம்பந்தப்பட்ட பட நிறுவனம் பார்த்துக் கொள்ளும்; அதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள், அந்த நிறுவனத்தில் உள்ளனர்,'' என்றார்.

உயர்மட்டக் குழு : நடிகர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் நீதி மையம் கட்சியின் நடவடிக்கைகளை உறுதி செய்யவும், செய்ய வைக்கவும் உருவாக்கப்பட்டுள்ள, உயர் நிலைக் குழு உறுப்பினர்களின், ஒரு பகுதியினரின் பட்டியலை வெளியிட்டுள்ளோம். அதில், வழக்கறிஞர்கள் அருணாசலம், ராஜசேகரன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஆர்.ரங்கராஜன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி, ஏ.ஜி.மவுரியா, எழுத்தாளர்கள், ப.ராஜநாராயணன், பாரதி கிருஷ்ணகுமார். தொழிலதிபர்கள், சி.கே. குமரவேல், சிவராம், சவுரிராஜன், திரைப்பட தயாரிப்பாளர், கமீலா நாசர், பேராசிரியர், கு.ஞானசம்பந்தன், ராஜ்கமல் தயாரிப்பு நிர்வாகி, மூர்த்தி. நடிகை ஸ்ரீபிரியா, நற்பணி இயக்க அகில இந்திய பொறுப்பாளர், ஆர்.தங்கவேலு மற்றும் திரைப்பட இயக்குனர், சுகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு பாதிப்பு : சென்னை விமான நிலையத்தில், கமல் கூறியதாவது:சென்னை, ஐ.ஐ.டி., நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது கண்டனத்திற்கு உரியது. ஆந்திராவில், தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு, விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில், 14 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்முறை, அவரது தம்பி கொலை சம்பவத்தை பார்க்கும் போது, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளதையே காட்டுகிறது. மொழி பிரச்னை காரணமாக, தமிழக மாணவர்கள், வெளி மாநிலங்களில் தற்கொலை செய்யக் கூடாது. வெளிமாநில மாணவர்கள், தமிழகத்தில் சவுகரியமாக படிப்பதை போல், தமிழக மாணவர்கள், இந்தியாவில் எந்த மூலையில் படித்தாலும், பாதுகாப்பு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...