Tuesday, February 27, 2018

1,000 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவமனையாகவும் செயல்பட்ட கோயில் - திருமுக்கூடல் அதிசயம்!

முன்னூர் ரமேஷ் தே.அசோக்குமார்

'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது ஔவையின் அறிவுரை. கடவுளை தினமும் வழிபடுவதற்காக மட்டுமே ஔவை அப்படிக் கூறவில்லை. மேலும் ஒரு காரணமும் இருக்கவே செய்தது. பொதுவாகவே அந்தக் காலத்தில், பெரும்பாலான ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் மையங்களாகவும் இருந்தன. இவற்றையும் கருத்தில் கொண்டே ஔவையார் அப்படிக் கூறியிருக்கிறார். இறைவழிபாட்டுடன், மக்கள் நலன் சார்ந்த பணிகளையும் மேற்கொண்டிருந்த திருமுக்கூடல் திருக்கோயிலில் அமைந்திருந்த மருத்துவமனை பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.




அந்தத் தலத்தின் மகிமை திருமலைக்கு நிகரானது. ஆம், தன் பக்தனுக்கு ஏற்பட்ட இன்னலை, திருமலை வேங்கடவன் போக்கி அருளிய திருத்தலம் அது.

கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் நிலைக்களனாகத் திகழ்ந்த திருக்கோயில் அது.

அனைத்துக்கும் மேலாக, மக்களின் நோய்களைத் தீர்க்கும் மருத்துவமனையாகவும் செயல்பட்ட ஆலயம் அது.

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் அமைந்திருக்கும் திருமுக்கூடல் அப்பன் வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் ஒரு மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது.



இந்தத் திருக்கோயிலில் சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கல்லூரி, நாட்டியசாலை மற்றும் மருத்துவமனை அமைந்திருந்த செய்திகளை, கி.பி.1068-ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறியமுடிகிறது.

வீரராஜேந்திர சோழ மன்னனின் இந்தக் கல்வெட்டில், இந்த மருத்துவமனை 'வீரசோழன் மருத்துவமனை' என்று அழைக்கப்பட்டது பற்றியும், பதினைந்து நபா்கள் இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகளாக (In patient) தங்கி சிகிச்சை பெறும் வசதியோடு விளங்கியது பற்றியும் விரிவான செய்திகள் காணப்படுகின்றன.



இந்த மருத்துவமனையில் நாடிபார்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவா், அறுவைசிகிச்சை செய்பவா், மருந்து சேகரிப்பவா், பெண் செவிலியா்கள், நாவிதா் மற்றும் உதவியாளா்கள் பணிபுரிந்த விவரமும், அவா்களின் ஊதிய விவரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு குறித்தும், ஓர் ஆண்டுக்குத் தேவையான மருந்துகள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது பற்றியும் கோயிலின் கிழக்குப் பிராகாரத்தில் உள்ள 55 வரிகள் கொண்ட மிக நீண்ட கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கீழ்க்கண்ட மருந்துகளின் பெயா்கள், இந்தத் திருக்கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.



1.பிராஹமியம் கடும்பூரி 2.வாஸாஹரிதகி 3.கோமூத்ர ஹரிதகி 4.தஸமூல ஹரிதகி 5.பல்லாதக ஹரிதகி 6.கண்டிரம் 7.பலாகேரண்ட தைலம் 8.பஞ்சாக தைலம் 9.லசுநாகயேரண்ட தைலம் 10.உத்தம கா்ணாபி தைலம் 11.ஸுக்ல ஸகிரிதம் 12.பில்வாதி கிரிதம் 13.மண்டுகரவடிகம் 14.த்ரவத்தி 15.விமலை 16.ஸுநோரி 17.தாம்ராதி 18.வஜ்ரகல்பம் 19.கல்யாணலவனம் 20.புராணகிரிதம்
இந்த மருந்துகளில் ஒன்றிரண்டு நீங்கலாக மீதமுள்ள அனைத்தும் தற்காலத்திலும் பயன்பாட்டில் இருந்துவருகின்றன என்பதுதான் இதில் இருக்கும் ஆச்சர்யமான செய்தி. இந்த மருந்துகளைப் பற்றிய விரிவான குறிப்புகளும், அவை தீா்க்கும் நோய் பற்றிய விவரங்களும் 'சரஹ சம்ஹிதை' என்னும் ஆயுா்வேத நூலில் காணப்படுகின்றன.

'பிராமி' (Brahmi) என்னும் மருந்து நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும் நினைவாற்றல் பெருகவும், கல்யாண லவனம் (Kalyana lavanam) வலிப்பு மற்றும் மனநல மருத்துவத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சோழா் காலத்திலேயே மக்களின் மனநலம் காக்கப் பயன்படுத்தப்பட்ட இந்த மருந்துகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை நவீனகால மனநல மருத்துவா்களே (Psychiatrist) வெளியிட்டு தங்கள் வியப்பைப் பதிவுசெய்துள்ளனா்.

திருமுக்கூடல் கோயிலில் நடனசாலையும் இருந்துள்ளது. திருவிழாக்காலங்களில் நாட்டியமாடும் பெண்களுக்கு மானியமாக நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன.

வேதம் பயிற்றுவிக்கும் கல்லூரியும் அதில் தங்கிப் படிக்கும் மாணவா்களுக்கு உணவு வசதியுடன் தங்குமிடமும் அளிக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் உடல் சூட்டைத் தணிக்க வாரம் ஒரு நாள் தலைமுழுக எண்ணெய் வழங்கப்பட்ட குறிப்பும் இந்தக் கல்வெட்டில் காணப்படுகிறது.

 இந்தக் கோயில் பற்றி மேலும் விவரங்கள் அறிய 27-2-18 அன்று வெளியாகும் சக்தி விகடன் இதழைப் பாருங்கள்....

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...