Wednesday, February 28, 2018

பதற்றம் களைந்து, தேர்வு ‘சுவை’பட...

Published : 24 Feb 2018 11:15 IST

டாக்டர் திவ்யா புருஷோத்தமன்




மார்ச் மாதம் வந்தாலே பள்ளி மாணவர்களுக்கு தேர்வை நினைத்து பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்வது அறிவிக்கப்படாத நோயாகி வருகிறது. தேர்வுக் காலத்தில் இரவு முழுவதும் கண் விழித்துப் படிக்க நேரிடும். உணவையும் சரிவர எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அல்லது தவறான உணவுப் பழக்கத்தால் பசியின்மையுடன் இருப்பார்கள். தேர்வுக் காலத்தில் குறிப்பிட்ட சில உணவு வகைகளை உட்கொண்டால், பதற்றமின்றி இருக்கலாம். ஞாபகச் சக்தியுடனும் திகழலாம். அதற்கு உதவும் முக்கிய உணவு வகைகள்:

ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. பதற்றத்தைக் குறைக்க ஆப்பிள் உதவும். இதில் மிகுதியாக உள்ள அசிடைல்கோலின் (acetylcholine), அறிவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது.
பருப்புகள்

வேர்க்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை உணவு வகைகளில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதை சீராகச் சாப்பிட்டால் அறிவாற்றல் செயல்பாடு மேம்படும். பதற்றத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக அக்ரூட் பருப்புகள் எனப்படும் வால்நட்டில் ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்புச் சத்து நிறைவாக உள்ளது. இதற்கு அழற்சியை எதிர்க்கும் தன்மை இருக்கிறது. பதற்றத்திலிருந்து விடுபடவும் இது உதவுகிறது.

தயிர்

தேர்வுக் காலத்தில் தயிர் சாப்பிடுவதை நிறுத்திவிடாதீர்கள். இதில் கால்சியம் சத்தும் நல்ல பாக்டீரியாவும் அதிகம் உண்டு. தேர்வு நேரத்தில் செரிமானப் பிரச்சினைகள் வராமலும் வாயுத் தொந்தரவு இல்லாமலும் இது தடுக்கும். தயிரில் லேக்டோபாசிலஸ் மிகுதியாக இருப்பதால், உடலை கட்டுக்கோப்போடு வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

முட்டை

தேர்வு நேரத்தில் தினமும் முட்டையை அவித்துச் சாப்பிடுங்கள். முட்டையில் வைட்டமின் - பி12 நிறைந்திருக்கிறது. இது உடனடி சக்தி கிடைக்க உதவுகிறது. அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. இதில் புரதச் சத்தும் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு ஆற்றலை சீராக வைக்க உதவுகிறது.

கீரை வகைகள்

கீரைகளில் வைட்டமின் கே, பி6, பி12 நிறைந்துள்ளன. உடலுக்கு உடனடி சக்தி தரும் தன்மை கீரைகளுக்கு உண்டு. கீரை சாப்பிட்டால் ஞாபகச் சக்தியும் அதிகரிக்கும். எனவே தேர்வு நேரத்தில் கீரை சாப்பிட வாய்ப்புக் கிடைத்தால் தவறவிடாதீர்கள்.

எலும்பு சூப்

என்னதான் தேர்வாக இருந்தாலும், சீரான தூக்கமும் அவசியம். தேர்வு நேரத்தில் எலும்பு சூப்பைக் குடித்தால், பதற்றத்தைத் தவிர்த்து சீரான தூக்கத்தைத் தரும். எனவே, எலும்பு சூப்பை மறந்துவிடாதீர்கள்.


பரங்கிக்காய் விதை

பரங்கி விதை ‘பேக்’ செய்யப்பட்டு கிடைக்கிறது. நல்லக் கொழுப்புச் சத்து அதிகம் நிறைந்துள்ள காய்கறி விதைகளில் பரங்கி விதையும் ஒன்று. இது மூளை நலனைப் பாதுகாக்க உதவுகிறது.

அடர் சாக்லெட்டுகள்

தேர்வு நேரத்தில் அடர் நிறங்களில் கிடைக்கும் சர்க்கரை குறைவான சாக்லெட்டுகளை சாப்பிடலாம். ஏனென்றால், இந்த சாக்லெட்டுகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. ரத்த ஓட்டம் சீராக இருந்தால், இதயத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். மூளையின் செயல்பாடும் ஞாபகச் சக்தியும் மேம்படும். அடர் சாக்லெட்டுகளில் எண்டார்பின், டிரிப்டோபான் நிறைந்திருப்பதால் உடலை புத்துணர்ச்சியாக உணர வைத்து, எதிர்மறையான எண்ணங்களைக் குறைக்கும்.

பிரகோலி

இந்தக் காயை அதிகம் சாப்பிடலாம். நரம்பு செல்களைப் பாதுக்காக்கும் வல்லமை பிரகோலிக்கு உண்டு. மூளைக் காயங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட இது உதவுகிறது. நரம்பு செல்களை மேம்படுத்தி, அவற்றை நரம்பு மண்டலத்தோடு இணைப்பதிலும் இதன் ஆற்றல் அபரிமிதமானது. மூளைத் திறனைச் சிறப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும்.

சால்மன் (Salmon-காலா) மீன்

இந்த மீனில் ஒமேகா 3 சத்து நிறைந்திருக்கிறது. இது ஞாபகச் சக்தியை மேம்படுத்த உதவுவதோடு பதற்றத்தையும் தணிக்க உதவுகிறது. வாரம் 2 முறை இந்த மீனை உட்கொண்டால், இயற்கையாகவே ஒமேகா 3 சக்தி
 நமக்குக் கிடைத்துவிடும். கட்டுரையாளர், ஊட்டச்சத்து நிபுணர் தொகுப்பு: மிது கார்த்தி

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...