தன் முதல் அரசியல் மேடையில் எம்.ஜி.ஆர் சிலை திறக்கும் ரஜினி..!
BALAKRISHNAN R
கடந்த 23 வருடங்களாக, தமிழக அரசியலுக்கு ரஜினி வர வேண்டும் என்று தூண்டில் போட்டுக்கொண்டிருப்பவர் ஏ.சி சண்முகம். எம்.ஜி.ஆரின் பக்தரான இவர், எம்.பி, எம்.எல்.ஏ - ஆக இருந்தவர். தற்போது, டாக்டர். எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கட்சியில் ஏற்பட்ட பிரச்னைகளின் போது, ஆர்.எம். வீரப்பன் அணியில் இருந்தவர் ஏ.சி.எஸ். தமிழக அரசியலில் ரஜினிக்குத் திருப்புமுனையாக அமைந்த பாட்ஷா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.ம்.வீ. அந்த வகையில், ஆர்.எம்.வீ. அணியில் இருந்த ஏ.சி சண்முகத்துடன் ரஜினி நெருக்கம் அதிகமானது. 1991-96 காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக டெல்லியில் பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். அதே காலகட்டத்தில், தமிழகத்தில் முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ஆட்சி அலங்கோலங்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த ரஜினி டெல்லிக்குப்போய் பிரதமர் நரசிம்மராவை இரண்டு முறை சந்தித்தார். அப்போது அவருடன் இருந்தவர்களில் முக்கியமானவர் ஏ.சி.சண்முகம். கடவுள் வழி சொல்லட்டும் என்று சாக்குப்போக்கு சொல்லி வந்த ரஜினி, முழுமையாக அரசியலில் குதித்துவிட்டார். சந்தோஷமான ஏ.சி சண்முகம், உடனே போய் ரஜினியைச் சந்தித்து வாழ்த்து சொன்னார். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வளாகத்தில் மார்ச் 5-ம் தேதியன்று நூற்றாண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர். வெங்கலச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அரசியல் ரீதியாக நீங்கள் காலடி எடுத்து வைக்கும் முதல் அரசியல் மேடை என்னுடைய விழாவாக இருக்க வேண்டும் என்று ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் வைக்க.. ஓ.கே. நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.
இதுபற்றி ஏ.சி. சண்முகத்திடம் பேசியபோது, " சென்னை அடுத்த வேலப்பன் சாவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. விழாவில் மொரீஷியஸ் நாட்டு குடியரசு துணைத் தலைவர் பரமசிவம்பிள்ளை வையாபுரி கலந்துகொண்டு நூற்றாண்டு விழா கட்டடத்தை திறந்துவைக்கப்போகிறார். இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியைத் திறந்துவைக்கப்போகிறார். ரஜினி, எம்.ஜி.ஆரின் வெங்கலச் சிலையைத் திறந்துவைக்கப் போகிறார். அவரின் கையில், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள்...அப்போது பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எம்.ஜி.ஆருடன் நடத்த நடிகர், நடிகைகள், எம்.ஜி.ஆரின் உறவினர்கள்...என்று முக்கியமானவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருதுகளை வழங்கப்போகிறார். அரசியல் வானில் ஜொலிக்கப்போகும் ரஜினிக்கு இந்த விழா ஒரு மகுடமாக இருக்கப்போகிறது " என்றார்.
இதே நேரத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் வட மாவட்ட நிர்வாகிகளை ராகவேந்திரா மண்டபத்துக்கு வரச் சொல்லி, ஆலோசனை கூட்டம் நடந்தது. ரஜினிக்குச் சிறப்பான வரவேற்பு தருவது குறித்து அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
விழாவில், எம்.ஜி.ஆர். பற்றிய தனது பசுமையான நினைவுகளை மனம்திறந்து பேசவிருக்கிறார் ரஜினி. அதேநேரம், தற்போதைய அ.தி.மு.க ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரல்கொடுக்கப்போகிறார் என்றும் மன்ற நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள். " தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க-வின் ஊழல்கள் பற்றியெல்லாம் எங்களிடம் நிறைய கேட்டு தெரிந்துகொண்டார். மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை நிறைவேற்றாமல், விளம்பரத்தை மையமாக வைத்து விழாக்களை நடத்தும் எடப்பாடி ஆட்சியை கொஞ்ச காலமாக எங்கள் தலைவர் கவனித்து வருகிறார். நடக்கிற ஊழல் கூத்துகளைக் கேட்டு, டென்ஷன் ஆகிவிட்டார். கடுங்கோபத்தில் இருக்கும் எங்கள் தலைவர், எடப்பாடி அரசை கடுமையாக விமர்சனம் செய்யப்போகும் மேடையாக எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா அமையப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள் " என்கிறார்கள்.
மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் மின்னல்வேகத்தில் நடந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், ரஜினி மேடை ஏறப்போகும் முதல் களம் என்பதால், தமிழகம் முழுவதுமிருந்து அவரது மன்ற நிர்வாகிகள் சென்னைக்குப் படையெடுக்கப்போகிறார்கள்.
ரஜினி என்ன பேசுவாரோ? என்கிற பீதியில் எடப்பாடி அரசு இருக்கிறது.
No comments:
Post a Comment