சாமானியர்களுக்கானதா வங்கிகள்?
By ஆர். வேல்முருகன் | Published on : 27th February 2018 01:29 AM
இப்போதெல்லாம் செல்லிடப்பேசிகளுக்கு வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை, உங்களுக்குக் கடன் அட்டை வேண்டுமா, தனிநபர் கடன் வேண்டுமா என்று கேட்டுத்தான். அழைக்கும் பெண்களோ தங்களது வசீகரப் பேச்சில், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், எவ்வளவு ஊதியம் என எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு எங்கள் அலுவலகத்தில் இருந்து ஆள்களை அனுப்புகிறோம். விண்ணப்பத்தில் மட்டும் கையெழுத்திடுங்கள் என்பார்கள்.
அந்த அலுவலகத்தில் இருந்து ஒருவர் வந்து விண்ணப்பத்தில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு சென்றுவிடுவார். அதன் பிறகு பத்திரிகையாளர், வழக்குரைஞர், போலீஸாருக்குக் கடனோ அல்லது கடன் அட்டைகளோ தருவதில்லை என்பார்கள். இதுதான் பொதுவாக நடப்பது.
சாதாரண மக்கள் யாராவது குறைந்தது ஒரு வாரமாவது சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் கெஞ்சிக் கூத்தாடி கடன் பெற்றுவிட்டால் அதற்குள் முதல் தவணை வந்துவிடும்!
எப்படியோ எல்லாவற்றையும் மீறிக் கடன் பெற்று, ஏதாவது ஒரு பிரச்னை காரணமாக ஒரு தவணை கடனைத் திரும்பச் செலுத்தாவிட்டால் அதற்கு அந்த வங்கியில் போன் செய்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்போம் பாருங்கள், அது மோசமான அனுபவம். தவணை தவறியதற்கு அபராதம், வட்டிக்கு வட்டி வேறு.
வங்கி அதிகாரிகள் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் கடன் கொடுக்க முடியும் என்ற நிலை உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வங்கிகள் என்று இருந்த நிலை மாற்றப்பட்டு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் காரணம் வங்கிச் சேவை சாதாரண மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
இன்றைய சூழ்நிலையில் வங்கிகளின் சேவை கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் தேவை. முன்பிருந்ததை விட இப்போது வங்கிச் சேவையை அனைவருமே பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
யாரோ ஒருவருக்குக் கொடுத்த பணத்தை வசூலிக்க இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ரூ.50, ரூ.100 செலுத்தும் வாடிக்கையாளர்கள் சராசரிக்கும் குறைவான தொகையைத் தங்கள் சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தார்கள் என்பதற்காக விதித்த அபராதக் கட்டணம் மூலம் ஈட்டிய தொகை கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை ரூ.1771 கோடி. இது வங்கியின் இரண்டாவது காலாண்டின் நிகர லாபத்தை விடக் கூடுதல் என்பது கசப்பான உண்மை.
சாமானிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூடக் கண்டுகொள்ளாத பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் தொழிலதிபர்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடனை அள்ளிக் கொடுத்திருக்கிறது என்று இப்போது தெரிய வருகிறது. ஒரு சாமானியனுக்கு சில ஆயிரங்கள் கடன் தரும்போதே உத்தரவாதம் அளிப்பவரும் நேரில் வங்கிக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று வற்புறுத்தும் வங்கி மேலாளர்கள், வங்கி அதிகாரியின் உத்தரவாதக் கடிதம் என்ற முறையை ஏற்றுக் கொண்டு பல நூறு கோடிகளை அள்ளி வீசியது எப்படி?
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றின் வேலூர் கிளையில் நண்பர் ஒருவர் வீட்டை அடமானம் வைத்துக் கடன் வாங்கியிருந்தார். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடனை ஒரு தவணை கூடத் தவறாமல் செலுத்தி வருகிறார். அவருக்கு திடீரென ரூ.50 ஆயிரம் கூடுதல் கடன் தேவைப்பட்டது.
வங்கிக்குச் சென்று கேட்டபோது, 'உங்களை விடக் கூடுதலாக ஊதியம் பெறுபவர் உத்தரவாதம் அளித்தால் கடன் தருவதாக' கூறினார். இத்தனைக்கும் பல லட்சம் மதிப்புள்ள வீடு சொற்பத் தொகைக்கு அந்த வங்கியில் அடமானத்தில் இருப்பது மேலாளருக்கும் தெரியும். அதை எடுத்துச் சொன்ன பிறகுதான் மேலாளர் கடன் தந்தாராம்.
நண்பரின் சொத்து அடமானத்தில் இருக்கும்போது கூடுதலாக ரூ.50 ஆயிரத்துக்கே இத்தனை பிரச்னை என்றால், ஆயிரக்கணக்கிலான கோடி முறைகேடு நடந்தது எப்படி என்பது அந்த அதிகாரிகளுக்குதான் வெளிச்சம்.
தேர்தல் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு ஊழல் அரசியல்வாதிகளுக்குக் கிடுக்கிப்பிடி போட சிறிய அளவிலாவது முயற்சி நடந்து வருகிறது. ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் தேர்தலில் போட்டியிடத் தடை, தேர்தலில் நிற்கும் வேட்பாளரின் உறவினர்களுடைய சொத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று புதிய பரிந்துரை - போன்ற முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு உள்ள விதிமுறைகள் போல, வங்கி அதிகாரிகளுக்கும் சொத்து தொடர்ôன விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும்.
வங்கிப் பணியில் சேரும் ஒவ்வொரு அதிகாரியின் சொத்து மதிப்புகளையும் பெற்றுக் கொண்டு அவர் பணியில் இருந்து விலகும்போது சொத்து மதிப்பைச் சரிபார்க்க வேண்டும்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து இருந்தால் அவரைப் பணி நீக்கம் செய்து கூடுதல் வருமானத்தில் வாங்கிய சொத்துகளையும் பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அப்போதுதான் தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயமும் அனைவருக்கும் இருக்கும்.
ஆனால் ஒன்று, சாதாரண மக்களுக்குத் தேவையான கடனுதவிகளை வங்கி நிர்வாகங்கள் தைரியமாகச் செய்யலாம். ஏனெனில் சாமானியர்கள் வெளிநாடுகளுக்குத் திட்டமிட்டுத் தப்பிப்பதில்லை. சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட சாமானியர்கள் யாரும் தாங்கள் கடனாளியாகச் சாவதை விரும்புவதில்லை என்பது உண்மை.
No comments:
Post a Comment