Tuesday, February 27, 2018

பூமிக்கு வந்த தேவதை!

Published : 26 Feb 2018 08:39 IST

வெ.சந்திரமோகன்



கவுரி ஷிண்டே இயக்கிய ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ திரைப்படம் வெளியான சமயம். டெல்லி பிவிஆர் திரையரங்கின் வெளியே நல்ல கூட்டம். வந்திருந்தவர்களில் கணிசமானோர் 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடிக்க வந்திருந்த ஸ்ரீதேவியைத் திரையில் காணும் ஆர்வத்தில் வந்திருந்தவர்கள் என்பதை அவர்களுடைய பேச்சு சொன்னது. வரிசையில் நின்றிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண், ‘மிஸ்டர் இந்தியா’ படத்தின் ‘ஐ லவ் யூ’ பாடலில் ஸ்ரீதேவியின் நடனத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். நீலச் சேலை முழுவதும் தென்றலில் நெகிழ்ந்தாட, காதல் சொட்ட அவர் ஆடும் நடனம் அது. ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்திலும் ஒரு காட்சியில் ஸ்ரீதேவி யின் மகன் அவரை மைக்கேல் ஜாக்ஸன் நடனம் ஆடச் சொல்வான். அப்போது மிக எளிதாக அதேசமயம் ஒரு அமெச்சூர்போல அந்த நடனத்தை ஆடுவார் ஸ்ரீதேவி. அவர் ஆடாத நடனமா!

மிகச் சிறிய வயதில் நடிக்க வந்தவர். ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ (நம் நாடு) என்று எம்ஜிஆர் பாடும்போது மழலைச் சிரிப்புடன் தலையாட்டும் பையனாக வருவார். ‘துணைவன்’ (1969) படத்தில் ‘முருகக் கடவுள். சிவாஜியின் ‘பாபு’ படத்தில் அம்மு என்று குழந்தை நட்சத்திரமாகத் தொடர்ந்து நடித்துவந்தவர், தனது பதின்பருவத்தின் தொடக்கத்திலேயே நாயகியாகிவிட்டார். ஆம், பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ரஜினி, கமலுடன் போட்டி போட்டு நடித்தபோது, அவருக்கு வயது வெறும் 13. எத்தனை சவால்களைக் கடந்து இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்திருப்பார் என்பதை நினைத்துப் பார்த்தால், அவரது வெற்றியின் பிரம்மாண்டம் புரியும்.

நடிப்பில் அவருக்கு எதுவுமே சவால் இல்லை என்றே சொல்லலாம். எதையும் அநாயாசமாகச் செய்துவிடுவார். ‘ஜானி’ அர்ச்சனா பாத்திரம் ஒன்று மட்டுமே ஒரு நடிகையின் வாழ்நாளுக்குப் போதுமானது. ரஜினியிடம் தன் காதலை வெளிப்படுத்தி சங்கடப்படும் காட்சியில் அவர் காட்டியிருக்கும் நுட்பம் பிறவிக் கலைஞருக்கானது.

பெரிய அளவில் கவனிக்கப்படாத ‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ படத்தில் தன் மீது விழுந்த கறையைத் தாங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போடும் பாத்திரம். அந்த வைராக்கியம் படம் முழுவதும் உறுதியுடன் வெளிப்படும். தன்னைக் காதலிப்பதாகச் சொல்லும் நாயகனிடமிருந்து விலகிச் செல்ல நினைத்தாலும் மனம் கேட்காது. அந்த உணர்வை மிக நுட்பமாக வெளிப்படுத்துவார். ‘மழை தருமோ என் மேகம்?’ பாடலில் அவர் காட்டும் தவிப்பைக் கவனித்திருக்கிறீர்களா? கழிவிரக்கமும் காதலும் வைராக்கியமும் ஒன்றுடன் ஒன்று மோத, கண்கள் மூலம் அந்தக் கலவையை வெளிப்படுத்தும் அழகு, இயக்குநர் சொல்லித்தருவதையும் தாண்டி வெளிப்படும் கலைத்திறன் அல்லவா!

திரைக் கலைஞர்கள் எல்லா விதமான பாத்திரங்களிலும் நடிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், எந்தப் பாத்திரத்திலும் ஒன்றி நடிக்க முடியும், பரிமளிக்க முடியும் என்று நிரூபித்தவர்கள் சிலரே. மடிசார் முதல் மாடர்ன் உடை வரை எந்த வகையான உடையும் பொருந்தும் கச்சிதமான உடலமைப்பையும் அவர் பெற்றிருந்தார்.

நடித்த அத்தனைப் பாத்திரங்களிலும் தோற்றம், உடல்மொழி, உச்சரிப்பு என்று எல்லா வகைமையிலும் பொருந்திப்போனவர் ஸ்ரீதேவி. ‘மூன்றாம் பிறை’யில் குழந்தைமை வெளிப்படும் காட்சிகளில் அத்தனை வெகுளியாக இருக்கும் ஸ்ரீதேவி, கமலைக் கதறவைத்துவிட்டு ரயிலில் புறப்படும்போது எப்படி மாறியிருப்பார்? வெறுமனே ஒப்பனை மாற்றத்தில் செய்துகாட்டக்கூடிய விஷயமா அது! ‘மீண்டும் கோகிலா’வில் “விஷமம் பண்ணாதேள்” என்று கமலைக் கண்டித்துக்கொண்டே வெட்கப்படுவார். அந்தப் படத்தின் ‘சின்னஞ்சிறு வயதில்’ பாடலில், குழந்தை சிறுநீர் கழித்துவிட அவஸ்தையில் நெளியும் கமலை ஓரக்கண்ணால் பார்த்தபடி குறும்புடன் பாடும் ஸ்ரீதேவி வெறும் நடிகை மட்டும்தானா?

ஸ்ரீதேவியைப் பற்றிக் குறிப்பிடும்போது வைஜெயந்திமாலா, ஹேமமாலினிபோல் தமிழகத்திலிருந்து பாலிவுட் சென்று வெற்றி பெற்றவர் என்பார்கள். உண்மையில், தமிழ்ப் படங்கள், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னக மொழிப் படங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்ற பின்னர், 1980-களின் தொடக்கத்தில் பாலிவுட் சென்று மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டவர் என்பது ஸ்ரீதேவியின் தனிச்சிறப்பு. 1980-களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரானார். ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப் பச்சன், ரிஷிகபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் என்று பாலிவுட்டில் அவர் ஜோடி சேராத பெரும் நாயகன்கள் இல்லை. மிக நீண்ட காலம் பாலிவுட்டை அவர் கட்டியாண்டார்.

ரஜினியுடன் நடித்த ‘நான் அடிமை இல்லை’ படம்தான் தமிழில் கதாநாயகியாக அவர் நடித்த கடைசிப் படம். அதன் பிறகு, தொடர்ந்து இந்திப் படங்களில்தான் கவனம் செலுத்தினார். ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘புலி’ போன்ற படங்கள் மூலம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ்த் திரையில் தோன்றினாலும் அவர் பெயர் சொல்லத்தக்க ஒரு படம் மீண்டும் வரவில்லை என்ற வருத்தம் தமிழ் மக்களிடம் தொடர்ந்து இருந்தது. இதோ, அவரது மறைவுச் செய்தி கேட்டுத் தமிழகமே அதிர்ந்து நிற்கிறது.

சிரஞ்சீவியுடன் அவர் நடித்த ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ படத்தில் பூவுலகில் தனது மோதிரத்தைத் தொலைத்துவிட்டு, அதைத் தேடித் திரியும் தேவ கன்னிகையாக நடித்திருப்பார். தேவதைக்கு மோதிரம் கிடைத்திருக்க வேண்டும். நம்மை விட்டு மறைந்துவிட்டார்!

-வெ.சந்திரமோகன்,

தொடர்புக்கு:

chandramohan.v@thehindutamil.co.in

படம்: ஸ்டில்ஸ் ரவி

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...