நலம் தரும் நான்கெழுத்து 23: பெருந்துயில் தரும் பேராபத்து!
Published : 24 Feb 2018 11:11 IST
டாக்டர் ஜி. ராமானுஜம்
காலையிலேயே ஒரு மணி நேரத்தைத் தவறவிட்டால், நாள் முழுதும் அதைத் தேடிக்கொண்டே இருப்பீர்கள்.
– ரிச்சர்ட் வார்ட்லி
மனித உடலுக்குத் தூக்கம் மிக முக்கியம்தான். ஆனால், அதே அளவு முக்கியம் எழுந்துகொள்வதும். சென்ற வாரக் கட்டுரையில் பார்த்ததுபோல் சூரியன் மறைந்த பின்பு எவ்வளவு சீக்கிரம் தூங்கச் செல்வது நல்லதோ, அவ்வளவு நல்லது சூரியன் உதித்தவுடன் விழிப்பது.
வின்ஸ்டன் சர்ச்சில், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் தொடங்கி பராக் ஒபாமாவரை, வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் பலரிடம் இருக்கும் குணங்களை ஆராய்ந்ததில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பல ஆய்வுகளும் வெளிப்படுத்தின. காலையிலேயே எழுந்துகொள்வதுதான் அது. தினமும் ஒரு மணிநேரம் முன்னதாகவே எழுந்தால், ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ஒரு முழுநாள் நமக்குக் கிடைக்கிறது.
உடற்பயிற்சி செய்வதற்கு, வாசிக்காமல் விட்டவற்றை வாசிப்பதற்கு, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு, பல நாட்களாகச் செய்யாமல் தள்ளிப் போட்ட செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு எனத் தினமும் காலைப் பொழுதைக் கையகப்படுத்தினால் நமக்கு நிச்சய வெற்றி கிடைக்கும். பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவைப் பற்றிப் பல விஷயங்கள் அறிந்த நம்மில் எத்தனை பேருக்குப் பல ஆண்டுகளாக அதிகாலை நான்கு மணிக்கு எழுபவர் அவர் என்ற தகவல் தெரியும்?
பெரும் பசி… பெருந்துயில்…
அளவுக்கு அதிகமாகத் தூங்குவது சில நேரம் நோய்களின் பாதிப்பால்கூட நிகழலாம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆங்கிலத்தில் ‘ஹைப்பர் சாம்னியா’ என்றழைக்கப்படுகிறது இப்பெருந்துயில். ‘சோம்னஸ்’ என்பது ரோமானியர்களின் தூக்கத்துக்கான கடவுள். ‘ஹிப்னோஸ்’ கிரேக்க தூக்கக் கடவுள்.
அதிகாலையிலேயே எழுந்திருப்பது நம் சமூகத்தில் தொன்றுதொட்டு மதிப்புக்குரிய பழக்கமாகக் கருதப்படுகிறது. பாவை நோன்பிருக்கும் பூவையரை எழுப்பும் ஆண்டாளும், அவர்களைக் கிண்டல் செய்ய ‘உனக்குக் கும்பகர்ணன் பெருந்துயில்தான் தந்தானோ?’ எனக் கேட்கிறாள்.
கும்பர்கணன்போல சிலருக்கு அதீதப் பசியும் பெருந்துயிலும் மூளையில் ஏற்படும் சில பாதிப்புகளால் வரக்கூடும். குறிப்பாக, மூளையிலே ஹைப்போதலாமஸ் என்னும் பகுதி பசி, தூக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இந்தப் பகுதி பாதிக்கப்பட்டால் அதீதத் தூக்கமும் அதிபயங்கரப் பசியும் ஏற்படும். ‘கிளைன் லெவின் சின்ட்ரோம்’ என அழைக்கப்படுகிறது, இந்த வகைப் பாதிப்பு.
‘அமுக்கும்’ தூக்கம்
பல அபூர்வமான நோய்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. அப்படித் தமிழ் கூறும் நல்லுலகம் தெரிந்துகொண்ட நோய்களில் ஒன்று ‘நார்கோலெப்ஸி’. இது விஷால் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் மூலம் பிரபலமானது. அதாவது அதீதத் தூக்கம். பேசிக்கொண்டே இருக்கும்போது, படித்துக்கொண்டிருக்கும்போது ஏன் சில நேரம் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதுகூடத் தூங்கி விழுந்துவிடுவார்கள். இப்பெருந்தூக்கம் மட்டுமன்றி உணர்ச்சி வசப்படும்போது அப்படியே நெடுஞ்சாண்கிடையாக தொபுக்கடீர் எனக் கீழே விழுவதும் இந்த நோயில் அடங்கும்.
‘அமுக்குவான்’ என பாட்டிகள் சொல்வார்கள். அதாவது தூக்கத்தில் இருக்கும்போது நமக்கு விழிப்பு ஏற்படும். ஆனால், நமது கை கால்களை அசைக்க முடியாது. யாரோ அமுக்குவதுபோல் தோன்றும். மூளையில் விழிப்புணர்வுக்கு உரிய இடங்கள் செயல்படத் தொடங்கி, ஆனால் கை கால் அசைவுகளுக்குரிய இடங்கள் செயல்பட ஆரம்பிக்காமல் போன சில நொடித் தாமதமே இந்த அமுக்குவானுக்குக் காரணம்.
ஆனால், பல வருடங்களுக்கு முன்பு பாயசம் சாப்பிட முடியாமல் அற்ப ஆசையுடன் மடிந்த பாட்டியின் ஆவிதான் இதற்குக் காரணம் எனக் கூறிப் பரிகாரம் சொல்பவர்களும் உண்டு. எப்போதாவது இதுபோல் அமுக்குவான் ஏற்படுவது இயல்பானதே. ஆனால், மேற்படி நார்கோலெப்ஸி நோயில் அடிக்கடி இதுபோன்ற அமுக்குவான் தாக்குதல் ஏற்படும்.
விழிப்புக்கு அலாரம் வேண்டாம்
‘குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்’ என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியதுபோல் அதீத உடல்பருமன், தொண்டை, மூச்சுக் குழாயில் ஏற்படும் பாதிப்புகளாலும் மூச்சுத்திணறலும் குறட்டையும் ஏற்பட்டு இரவில் தூங்க முடியாமல் பகலெல்லாம் தூக்கக் கலக்கத்தில் கழிக்கும் நோய்க்கு ‘ஸ்லீப் ஏப்னியா’ என்ற பெயருண்டு.
அதிகாலையில் விழிக்க வேண்டும் என்பதற்காக அலாரம் வைத்து எழுவதும் நல்ல பழக்கம் அன்று. நம் உடலின் தேவைக்கான தூக்கத்தைப் பெறாமல் இடையிலேயே அலாரம் வைத்துத் தொந்தரவுசெய்வது காலப் போக்கில் உடலுக்கு ஊறுவிளைவிக்கவே செய்யும். சீக்கிரம் எழுவதற்கான ஒரே ஆரோக்கியமான வழி சீக்கிரம் தூங்கச் செல்வதே. இந்தச் சமநிலையே நலம் தரும் நான்கெழுத்து.
கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
No comments:
Post a Comment