Monday, February 26, 2018

”மோடி தொடங்கிவைத்ததால் அம்மா திட்டத்துக்கே பெருமை!” - புகழ்ந்த முதல்வர் முகம் சுளித்த தொண்டர்கள் 

 VIKATAN
 
MUTHUKRISHNAN S



முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளில் அவர் பெயரில் அறிவிக்கப்பட்ட ‘அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தை’ சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அ.தி.மு.க. கட்சிக்குள் தொடர்ந்து சலசலப்புகள் இருந்துவந்தாலும் பிரதமர் மோடி பங்கெடுத்த விழாவில் வேற்றுமையிலும் ஒற்றுமைபோல கட்சியின் அனைத்து தரப்பினர்களையுமே காணமுடிந்தது. ஜெயலலிதாவுக்காக நடத்தப்பட்டாலும் அது பிரதமர் மோடி புகழார விழாவாக அமைந்துவிட்டதாக தங்களது அதிருப்தியைப் பகிர்ந்துகொண்டுள்ளனர் தினகரன் தரப்பினர்.

அவர்கள் கூறுகையில்,”தமிழக சட்டமன்றத்துக்கான 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனத் திட்டம் மானிய விலையில் தரப்படும் என்று அறிவித்தார். டிசம்பர் 5 ஆம் தேதி, ஜெயலலிதா இறந்த பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். பின்னர், எடப்பாடி பழனிசாமி 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது, ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதல் கோப்பு, அம்மா இரு சக்கர வாகன திட்டம். அவர் போட்ட முதல் கையெழுத்தை நிறைவேற்ற ஓராண்டு ஆகியிருக்கிறது. இதைப் பிரதமர் மோடி முன்னிலையிலேயே எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.

மேலும், ஜெயலலிதா பெயரிலான அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் குறித்து அவர் பேசுகையில், பிரதமர் மோடியைப் புகழ்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை மோடி தொடங்கி வைத்ததால் அத்திட்டதுக்கே பெருமை என்று ஏகத்துக்குப் பேசி முகம் சுளிக்க வைத்தார். ஆனால் தமிழகத்துக்கு மத்திய அரசு தராமல் இருக்கும் நிதி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவது, தமிழக மீனவர்களை இலங்கை சுட்டுத்தள்ளுவது குறித்தெல்லாம் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை”.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''16.2.2018 அன்று டெல்லியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பள்ளி மாணவ –மாணவியரின் தேர்வுகள் தொடர்பான விவாதத்தின் போது, தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது, அதனை நான் கற்றுக்கொள்ளாதது எனக்கு வருத்தமளிக்கிறது எனவும், தமிழ் மொழி பல சிறப்புகளை கொண்டது என தமிழ் மொழியை பாராட்டிப் பேசிய பிரதமருக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.. ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இந்த ஆண்டு முழுவதும், 70 லட்சம் மரக்கன்றுகளை நடுவது என்ற இலக்கோடு இன்று கலைவாணர் அரங்க வளாகத்தில் முதலில் மரக்கன்றினை பிரதமர் மோடியின் கரங்களால் நட்டு வைத்து திட்டத்தை தொடங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.



 ஜெயலலிதாவின் ஆசியோடும், அருளோடும் 16.2.2017அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நான் அன்றைய தினமே ஜெயலலிதாவினால் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில்தான் முதலில் கையெழுத்திட்டேன். நான் முதன்முதலில் கையெழுத்திட்ட அந்த ஐந்து திட்டங்களில் முதல் திட்டமான, 'அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்' தமிழ்நாட்டின் தலைமகளாகவும், தமிழ்த்தாயின் தவப்புதல்வியாகவும் திகழ்ந்த ஜெயலலிதா பிறந்த இந்த நன்நாளில் பிரதமரின் கரங்களால் தொடங்கி வைப்பதன் மூலம், இத்திட்டத்திற்கு மேலும் பெருமை. பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டதால் அம்மா இரு சக்கர வாகனத் திட்ட விழாவும், வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அதற்காக பிரதமருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். ஆனால் அடுத்து அவர், “உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும், 'காவேரி மேலாண்மை வாரியம்' 'காவேரி நீர் முறைப்படுத்தும் குழு'ஆகியவற்றை உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அன்போடுவேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறினார். அதற்குப் பிரதமரின் தரப்பிலிருந்து மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைத்தது” என்று தனது அதிருப்தியைப் பகிர்ந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...