Wednesday, February 28, 2018

 vikatan.com

`துபாய் அரசு கற்றுக்கொடுத்த பாடம் இது!' - ஸ்ரீதேவி மரணமும் ஜெயலலிதா எம்பாமிங்கும்

பிரதீப்.த.ரே

Chennai:

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம், திரையுலகத்தினரை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய மறைவு திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம், அவருடைய மரணத்தில் எழும் சர்ச்சைகள் விவாதப் பொருளாகியிருக்கின்றன.

துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 25-ம் தேதி அதிகாலை மாரடைப்பில் இறந்ததாகத் தகவல் வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் பிரேதப் பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை நேற்று வெளியானது. அதில், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும் அவரது மரணத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் இல்லை' எனவும் தகவல்கள் வெளியாகின. இன்று, அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு, மும்பைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தின் புகழேந்தி, " ஸ்ரீதேவியின் மரணத்துக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கும் பிறகு எழுந்த மர்மங்களிலும் கேள்விகளிலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால், இந்த இரு மரணங்களும் அரசு என்னும் அமைப்பால் எப்படிக் கையாளப்பட்டன என்பதில் பெரிய வேற்றுமைகள் இருக்கின்றன. ஸ்ரீதேவி இறந்தபின்னர் அந்த இறப்பை துபாய் அரசு எப்படிக் கையாண்டது?; விசாரணை நடைமுறைகள் எவ்வளவு கடுமையாக இருந்தன என்பதில் தமிழக ஆட்சியாளர்களுக்கான செய்தி ஒன்றும் இருக்கிறது. ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் நன்றாக இருப்பதாகச் சொன்ன நேரம் திடீரென மாரடைப்பு வந்ததாகச் சொல்லப்பட்டது. அதன்பிறகு அவருடைய உடல் எம்பாமிங் செய்யப்பட்டது. அதற்கு முன்னரே ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வெளியே சந்தேகங்கள் நிலவி வந்தன. பொதுவாக, மற்ற நாடுகளில் மரணத்தில் சின்ன சந்தேகம் இருந்தால்கூட உடலை எம்பாமிங் செய்வதில்லை. ஏனென்றால், எம்பாமிங் மூலம் உடலில் செலுத்தப்படும் ரசாயன திரவம் இறப்புக்கான காரணம் குறித்து தெரியாமல் செய்துவிடும். ஸ்ரீதேவி விஷயத்தில் எம்பாமிங் நடவடிக்கைகள் தாமதமானதற்கும் இதுதான் காரணம்.



அடுத்ததாக, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் உள்பட அனைவரிடமும் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அறையிலிருந்த சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஜெயலலிதா விஷயத்தில் சி.சி.டி.வி காட்சிகள் மாயமாகி விட்டன. ஜெயலலிதாவுக்கு வீனஸ் ப்ளட் சாம்பிள் என்னும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. அப்போது அவருடைய ரத்தத்தில் 6.2 என்ற அளவுக்கு பொட்டாசியம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக ஒருவரின் ரத்தத்தில் 6 என்ற அளவில் பொட்டாசியம் கலந்திருந்தாலே ஆபத்துதான். ஜெயலலிதாவுக்கு இது முன்னரே இருந்ததா? அப்படியிருந்தது எனில், அதை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், ஜெயலலிதாவுக்கு எதற்கு எம்பாமிங் செய்தார்கள் என்றே தெரியவில்லை.

ஏனெனில், அவருடைய உடல் 19 மணிநேரம்தான் வெளியே இருந்தது. அதற்கு எம்பாமிங் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இறப்புக்குப்பின் அவருக்கு ரத்த மாதிரியும் எடுக்கப்படவில்லை. சில விஷயங்களை மூடி மறைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால்தான் மரணம் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும் மர்மங்கள் தொடர்கின்றன. ஒரு மாநில முதல்வரின் உண்மையான உடல்நிலை குறித்து அம்மாநில மக்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு ஆளும் அரசுக்கு உள்ளது. ஆனால், அது ஜெயலலிதா விஷயத்தில் பின்பற்றப்படவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஸ்ரீதேவி மரணத்தில் துபாய் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் நமக்கெல்லாம் பாடங்கள். எதிர்காலத்தில் இங்கும் இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்” என்கிறார் புகழேந்தி.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...