சனிக்கிழமை இரவு நடந்தது என்ன?: ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள்!
By எழில் | Published on : 26th February 2018 12:45 PM
இந்தியத் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி (54) , மாரடைப்பால் சனிக்கிழமை நள்ளிரவு துபையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி 50 ஆண்டுகளைக் கடந்து இந்திய சினிமாவில் கோலோச்சினார்.
இந்தியத் திரையுலகில் தனி இடத்தைத் தக்க வைத்திருந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவிக்கு கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோர், துபையில் நடந்த உறவினர் மோஹித் மார்வா இல்லத் திருமண விழாவுக்குச் சென்றிருந்தனர். அந்தத் திருமண நிகழ்வில் ஸ்ரீதேவி பச்சை நிற உடையில் ஜொலித்தார். இதுவே ஸ்ரீதேவி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாக மாறிவிட்டது. திருமண நிகழ்ச்சி முடிந்து, ஹோட்டல் அறைக்குச் சென்ற ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. துபை நேரப்படி இரவு 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீதேவி மரணமடைந்த தினத்தன்று நடந்த சம்பவங்கள் குறித்து 'khaleejtimes' ஊடகத்தில் வெளியான செய்தியின் தொகுப்பு:
சனிக்கிழமை இரவு தன் கணவருடன் டின்னருக்குச் செல்ல ஸ்ரீதேவி தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஸ்ரீதேவி, போனி கபூர், இளைய மகள் குஷி ஆகிய மூவரும் கடந்த வாரம் திருமண நிகழ்வுக்காக துபை சென்றுள்ளார்கள். திருமணம் முடிந்தபிறகு போனி கபூர் உடனடியாக மும்பைக்குத் திரும்பிவிட்டார். பிறகு மனைவிக்கு இன்பதிர்ச்சி அளிப்பதற்காக மீண்டும் துபை சென்றுள்ளார் போனி கபூர்.
மும்பையிலிருந்து துபை சென்ற போனி கபூர் மாலை 5.30 மணிக்கு ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் உள்ள ஸ்ரீதேவியின் அறைக்குச் சென்றுள்ளார். அவர் ஸ்ரீதேவியை எழுப்பி டின்னர் திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். 15 நிமிடங்கள் கணவருடைய உரையாடிய ஸ்ரீதேவி, பிறகு கழிப்பறைக்குச் சென்றுள்ளார். ஆனால் 15 நிமிடங்களாகியும் வெளியே வராததால் துணுக்குற்ற போனி கபூர் கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு பாத்டப்பில் அசைவின்றி இருந்துள்ளார் ஸ்ரீதேவி. அவரை எழுப்ப முயன்றுள்ளார் போனி கபூர். ஆனால் அசைவே இல்லாததால் உதவிக்குத் தன் நண்பரை அழைத்துள்ளார். அதன்பிறகு தகவல் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையும் மருத்துவக்குழுவும் அவ்விடத்துக்கு விரைந்துள்ளார்கள். ஆனால் ஸ்ரீதேவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதன்பின்பு பிரேதப் பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் அந்த ஊடகத்தில் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment