நீட் தேர்வுக்கான தகுதியை முடிவு செய்வதில் எங்களுக்குத் தொடர்பில்லை: சிபிஎஸ்இ
By DIN | Published on : 28th February 2018 12:52 AM |
நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான தகுதியை முடிவு செய்வதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு எழுதுவதற்கு தேசிய திறந்த நிலைப் பள்ளி மற்றும் மாநில திறந்த நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும், 12-ஆம் வகுப்பில் உயிரியல்அல்லது உயிரி தொழில்நுட்பத்தை கூடுதல் பாடமாகப் படித்த மாணவர்களுக்கும் தகுதி இல்லை என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையை சிபிஎஸ்இ அமைப்புதான் வகுத்துள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக அந்த அமைப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் 'நீட் தேர்வை நடத்துவது மட்டுமே எங்கள் பொறுப்பாகும். இந்திய மருத்துவ கவுன்சில் (ஐஎம்சி) வகுத்துள்ள தகுதி தொடர்பான நடைமுறைகளின்படி இத்தேர்வை நாங்கள் நடத்துகிறோம். இத்தேர்வு தொடர்பாக ஏதாவது குறை இருந்தால் இந்திய மருத்துவ கவுன்சிலை அணுக வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நீட் தேர்வானது வரும் மே 6-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இத்தேர்வுக்கு பதிவு செய்து கொள்வதற்கான கடைசித் தேதி மார்ச் 9 ஆகும். தேர்வுக் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 10 நள்ளிரவு 11.50 மணி.இதனிடையே மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு நீட் தேர்வு 150 இடங்களில் நடத்தப்படும். கடந்த ஆண்டு இத்தேர்வு 107 இடங்களில் நடத்தப்பட்டது. இம்முறை கூடுதலாக 43 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 4,000 அல்லது அதற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ள நகரங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, புதிய மையங்கள் ஆந்திரப் பிரதேசம் (5), அஸ்ஸாம் (2), குஜராத் (3), மகாராஷ்டிரம் (6), ஒடிஸா (4), தமிழ்நாடு (2), கேரளம் (5), தெலங்கானா (2), மேற்கு வங்கம் (3), உத்தரப் பிரதேசம் (3) ஆகிய மாநிலங்களில் அமைக்கப்படுகின்றன.
சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட உள்ள தலா ஒரு மையமும் புதிய மையங்களில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment