Monday, February 26, 2018

“பொம்மை மாதிரி ஆடை உடுத்துவதற்கா கல்லூரிக்கு வருகிறாய்...?” -ஜெயலலிதாவைச் சீண்டிய பேராசிரியை!
ஜெ.பிரகாஷ்


Chennai:

“உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா...” என்று சொல்லித் தன் அம்மாவைக் கட்டிப்பிடித்து அழவேண்டும் என்று ஆசைப்படுகிறார், அவர். அதற்காக, தன் அன்பை... பாசத்தை... ஏக்கத்தை என எல்லாவற்றையும் ‘என் அம்மா’ என்ற தலைப்பில் கடிதமாக எழுதுகிறார். எழுதிய கடிதத்தைத் தன் அம்மாவிடம் காட்டுவதற்காக இரவு முழுவதும் காத்திருக்கிறார். பொழுது புலர்கிறது... யாருக்காக அவர் காத்திருந்தாரோ, அவர் கடைசிவரை வரவில்லை. ஆனால், மனதை உருக்கும் நிலையில் அவர் எழுதியிருந்த கடிதம் மட்டும் பள்ளியில் பலராலும் பாராட்டப்படுகிறது. ஆனால், அவர் எதிர்பார்த்தது பாராட்டையோ... புகழையோ அல்ல... தாயின் உண்மையான அன்பை மட்டும்தான். அதுபோல் அன்பு கிடைக்காதவர்கள் இன்றும் உலகத்தில் பலபேர் இருக்கின்றனர். அதைத்தான் அவரும் அனுபவித்தார்.


“இதுபோல் நிகழாது!”

தாய்க்கு என்ன சூழ்நிலையோ? இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு வருகிறார். தன் மகள் ஒரு புத்தகத்தை அணைத்தபடி தூங்குவதைப் பார்க்கிறார்; அதை மெதுவாக எடுக்கிறார். புத்தகம் அசைவதைக் கண்டு எழுகிறார் மகள். ஆச்சர்யத்தில் அன்னையைப் பார்க்கிறார்; அழுது துடிக்கிறார் மகள். அப்படியே அவர் எழுதிய கடிதத்தைப் படித்து அதிர்ச்சியில் உறைகிறார் அன்னை. பின்னர், தன் மகளை இறுக அணைத்து, “இனி உன்னிடம் அதிக நேரம் செலவிடுகிறேன்... இனி எப்போதும் இதுபோல் நிகழாது” என்கிறார். மகளும் சந்தோஷம் தாங்காமல் அவர் மடிமீதே சாய்ந்து தூங்கிவிடுகிறார்.

ஆனால், துரதிர்ஷ்டமாக அதுதான் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. அவர் தன் அம்மாவுக்காகக் காத்திருப்பது தொடர்கதையாகிறது. அதேபோல், அவர் பள்ளிச் செல்லும் நாள்களில்கூடப் பல பிரச்னைகளை அனுபவிக்கிறார். இன்றும் பல குழந்தைகள், சில பள்ளிகளில் பிரச்னைகளை அனுபவித்துக்கொண்டுதானே இருக்கின்றனர். சிலர் வெளியில் சொல்கிறார்கள்; பலர் சொல்லாமல் சாகிறார்கள். நம் கட்டுரையின் நபரும், பள்ளி நாள்களில் வெகுநேரம் தன்னை அழைக்கவரும் வண்டிக்காகக் காத்திருந்திருக்கிறார். ஆம், அது எப்போதும் தாமதமாகத்தான் வந்திருக்கிறது. இன்றும் அப்படித்தான் சில பள்ளிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிலும், குறிப்பாக வாகன விதிகளை மீறி.



“எங்களுடன் வா...!”

பொதுத் தேர்வு எழுதுவதற்காகக் காத்திருக்கிறார் நம் நபர். வாகனம் வருவதாகத் தெரியவில்லை. ஆனால், கடிகார முட்கள் மட்டும் காலத்தை விரைவாகக் கடந்துகொண்டிருக்கிறது. அவருக்குத் துணையாக ஓர் உற்றத் தோழி இருக்கிறார். தோழியை அழைத்துச் செல்ல... அவரின் தந்தை வருகிறார். நிலைமையறிந்து அந்தத் தோழியின் தந்தை... நம் நபரிடம், “உன் வாகனம் வருவதுபோல் தெரியவில்லை... எங்களுடன் வா, உன்னைப் பள்ளியில் விட்டுவிடுகிறேன்” என்கிறார். ஆனால், அவருக்கோ தயக்கம். என்னதான் உற்றத் தோழி அருகில் இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருக்கத்தானே செய்யும்.

இன்று, தன் தோழியின் சகோதரனாக இருந்தாலும்... தந்தையாக இருந்தாலும் பெண் பிள்ளைகள் பயப்படத்தானே செய்கிறார்கள். இதுதான் அவருக்கும் இருந்தது. அதேபோன்று மற்றவர்களையும் தன் மகளாகவும், சகோதரியாகவும் நினைத்து அவர்களையும் உயர்த்திவிடுவதில் இன்றும் சில தந்தையர்களும், சகோதரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தோழியும், “இப்படியே நின்றுகொண்டிருந்தால், தேர்வைக் கோட்டைவிட்டுவிடுவாய். வா... அப்பாவுடன் செல்லலாம்” என்று நம்பிக்கை கொடுக்கிறார். நம்பிக்கை ஒருபோதும் பொய்ப்பதில்லை அல்லவா? அதனால், தோழமையுடன் தேர்வுக் களத்துக்குச் செல்கிறார். கவலையுடனும்,கண்ணீருடனும் அந்தத் தேர்வை எழுதுகிறார். ஆனால், இது எதுவும் அவர் வெற்றிக்குத் தடையாக இல்லை. ஆம், தேர்வில் பெரிய அளவில் ஜெயிக்கிறார்.



தோழி செய்த உதவி!

அது, அவருக்கு ஒரு மாற்றத்தையே நிகழ்த்துகிறது. இதற்கு யார் காரணம்? நான் மட்டும் அன்று சரியான நேரத்துக்குத் தேர்வுக் களத்துக்குச் சென்றிருக்காவிட்டால், இன்று என் நிலை என்னவாகியிருக்கும் என்று சிந்தித்தப்படியே தன் தோழியைப் பார்த்து நன்றி சொல்லியிருக்கிறார். அதுவும், ஒருமுறை... இருமுறை அல்ல... அவரைச் சந்திக்கும்போதெல்லாம். இதுகுறித்து அவருடைய தோழி, “அன்று நாங்கள் செய்தது சிறு உதவி மட்டும்தான். ஆனால், அதற்கு அவர், ‘உன் அப்பா மட்டும் என்னை அழைத்துச் செல்லவில்லை என்றால், என்னால் தேர்வெழுதி இருக்கவே முடியாது’ என்று என்னைப் பார்க்கும்போதெல்லாம் சொல்லி அந்த நினைவை ஞாபகப்படுத்துவார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையான நட்பும், துரோகமில்லாத உதவியும் என்றும் ஏற்றம்பெற்றவர்களின் வாழ்வில் நிலைத்து இருக்கும் என்பதற்கு இதுவே பெரிய உதாரணம். இந்த நன்றிப் பழக்கத்தைச் சிறுவயதிலேயே நன்கு கற்றறிந்த நம் நபர், பிற்காலத்திலும் அதைத் தொடர்ந்தார்.

பள்ளி முடிந்தது... அடுத்து கல்லூரி? அதற்கான தேடலை ஆரம்பிக்கிறார் நம் நபர். அதுகூட அதே பள்ளியின் தோழிமூலம். அவரிடம், “எனக்காக விண்ணப்பம் வாங்கி, நீ என்ன பாடத்தைத் தேர்வு செய்கிறாயோ... அதே பாடத்தை எனக்கும் தேர்வுசெய்து விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து கல்லூரியில் கொடுத்துவிட முடியுமா...” என்று கேட்கிறார். தோழி எப்படி மறுப்பு தெரிவிப்பார்? அப்படி, அவர் ஒருவேளை மறுப்பு தெரிவித்திருந்தால் நட்புக்கே மரியாதை இல்லாமல் போயிருக்குமே? தோழியின் உதவியால் கல்லூரிக்குள் நுழைகிறார், நம் நபர். ஒருநாள் பாடம் நடத்துவதற்காகப் பேராசிரியை ஒருவர் வகுப்புக்குள் நுழைகிறார். அப்போது நம் நபரிடம் எந்தப் புத்தகமும் இல்லை; பெரிய அளவில் ஜெயித்த நம் நபர் குறித்த விவரமும் அவருக்குத் தெரியவில்லை. கோபத்துடன் கேள்விகளை அடுக்குகிறார் பேராசிரியை. மெளனம் காக்கிறார் நம் நபர்.



ஜெ.-வைச் சீண்டிய பேராசிரியை!

இறுதியாக, “பொம்மை மாதிரி ஆடை உடுத்துவதற்கா கல்லூரிக்கு வருகிறாய்...” என்று எரிந்து விழுகிறார். இப்படிப்பட்டக் கேள்வியை எந்த இதயம்தான் தாங்கும்? அதுவும், பல பேருக்கு முன்னால். ஆனால், இன்று அப்படியில்லையே... கேள்வி கேட்ட அடுத்த நொடி, கத்திக்குத்தே விழுந்திருக்குமே. நம் நபர் அப்படி எதுவும் செய்யவில்லை. அதற்குக் காரணம், அன்று ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைத்திருந்த மரியாதை. இன்று, ஆசிரியர்கள் மீது மாணவர்களும் மரியாதை வைப்பதில்லை; மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் நல்ல மதிப்பு வைப்பதில்லை. அந்தத் தர்மசங்கடமான கேள்விக்குப் பிறகும், அமைதியாகவே இருந்தார் நம் நபர். அடுத்த, சிறிதுநேரத்தில் மதிய உணவு இடைவேளை வருகிறது. அப்போது வீட்டுக்குச் செல்கிறார்... பின் எப்போதும் கல்லூரிக்குத் திரும்பி வரப்போவதில்லை என்ற முடிவுடன்.

கல்லூரிக்கு அவர் மீண்டும் வராதபோதும் வாழ்வில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திச் சரித்திரத்தில் இடம்பெற்றார். கல்லூரிக்கு எப்படி அவரால் திரும்ப முடியாமல் போனதோ... அதேபோல், காலனிடமிருந்தும் திரும்பி வரமுடியாத அளவுக்குச் சென்றுவிட்டார். அவர் வேறு யாருமல்ல... மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவருடைய பிறந்த தினம் இன்று.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...