மேலும் 5 நகரங்களில் பாஸ்போர்ட் சேவை மையம்: தலைமை தபால் நிலையங்களில் திறக்கப்படுகிறது
By DIN | Published on : 27th February 2018 03:24 AM |
தமிழகத்தில் விழுப்புரம், விருதுநகர், கடலூர்,நாகர்கோவில்,திருவண்ணாமலை ஆகிய 5 நகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
இது குறித்து தபால்துறை சென்னை மண்டலத் தலைவர் ஆர்.ஆனந்த் கூறியது:
தபால்துறையின் சென்னை நகர மண்டலத்துக்கு உள்பட்ட விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதியும் திருவண்ணாமலையில் மார்ச் 1-ஆம் தேதியும் இந்த சேவை மையம் தொடங்கப்படுகிறது.
இதேபோல கடலூர், விருதுநகரில் செவ்வாய்க்கிழமை, நாகர்கோவிலில் புதன்கிழமை, பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் தமிழக தபால்துறை வட்டத்தில் சேவை மையங்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்கிறது.
இந்த மையங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்த்தல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறும். பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடக்கும் அனைத்து நடைமுறைகளும் இங்கு நடைபெறும்.
இதற்காக வெளியுறவுத் துறையினரும், தபால் துறையினரும் இணைந்து பணியாற்றுவார்கள். இந்த மையங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்கள் தொலைவில் செல்லாமல் அருகிலேயே அணுகலாம். அவர்களின் நேரம் சேமிக்கப்படும்.
இங்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டது. இந்த சேவை மையங்கள் மூலமாக, சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயன் பெறலாம்.
இது தவிர, பாஸ்போர்ட் சேவை மையங்கள் திண்டுக்கல், சிவகாசி, ராமநாதபும், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய நகரங்களில் பாஸ்போர்ட் மையங்கள் அமைப்பதற்கு தபால்துறையினரும், வெளியுறவுத்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment