Wednesday, February 28, 2018

 நாளை!   பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு துவக்கம்

தமிழகம் மற்றும், புதுச்சேரியில், பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை துவங்குகின்றன. 2,794 மையங்களில், 8.67 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, காப்பி அடித்தால், ஐந்து ஆண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பிளஸ் 2 பொது தேர்வு, தமிழகம் மற்றும், புதுச்சேரியில், நாளை துவங்குகிறது; ஏப்., 6ல், முடிகிறது. தேர்வின் முடிவுகள், மே, 16ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2,756; புதுச்சேரியில், 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 278 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில், 6,754 மற்றும் புதுச்சேரியில், 147 என, மொத்தம், 6,901 பள்ளிகளை சேர்ந்த, 4.63 லட்சம் மாணவியர் உட்பட, 8.67 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில் மட்டும், 8,215 மாணவியர் உட்பட, 15 ஆயிரத்து, 140 பேர் தேர்வு எழுதுகின்றனர். கணிதம், இயற்பியல், வேதியியல் அடங்கிய பாட பிரிவில், 4.28 லட்சம்; உயிரியல் பிரிவில், 2.97 லட்சம்; வணிகவியலில், 2.42 லட்சம்; தொழிற்கல்வியில், 62 ஆயிரம்; வரலாறு பிரிவில், 14 ஆயிரம் பேர், தேர்வில் பங்கேற்கின்றனர்.

சிறப்பு கண்காணிப்பு

தேர்வை முறைகேடு இன்றி, அமைதியாக நடத்தி முடிக்க, 30 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், அந்தந்த மாவட்டங்களில், மேற்பார்வை பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர். தேர்வை சுமூகமாக நடத்த, 6,402 முதன்மை கண்காணிப்பாளர்களும், 937 கூடுதல் கண்காணிப்பாளர்களும், 94 ஆயிரத்து, 880 ஆசிரியர்களும், தேர்வு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் முறைகேடுகளை கண்டுபிடிக்க, 1,700 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன; இவற்றில் இடம் பெற்றுள்ள, 8,500 ஆசிரியர்கள், தேர்வு அறைகளில் திடீர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேர்வில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆள் மாறாட்டம் செய்வது, காப்பி அடிப்பது, வினாத்தாளை, 'லீக்' செய்வது போன்றமுறைகேடுகளில் ஈடுபட்டால், அந்த மாணவருக்கு, 5 ஆண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, கடுமையாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

3 மணி நேரம் தேர்வு

பிளஸ் 2 தேர்வு, காலை, 10:00 மணிக்கு துவங்க உள்ளது. முதல், 10 நிமிடங்கள், வினாத்தாளை வாசித்து பார்க்கலாம். அடுத்த, ஐந்து நிமிடங்கள், மாணவர்களின், சுயவிபரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் விபரங்கள் சரிபார்க்கப்படும். ஹால் டிக்கெட்டில், புகைப்படம் மாறியிருந்தால், அவர்கள், தங்களுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை எடுத்து செல்வது நல்லது.

இதுகுறித்து, தலைமை ஆசிரியரிடம், முன்கூட்டியே ஆலோசனை பெற வேண்டும். காலை, 10:15 முதல், மதியம், 1:15 மணி வரை, மூன்று மணி நேரம், தேர்வு எழுதலாம். அதன்பின், விடைத்தாள்கள் பெறப்பட்டு, மாணவர்கள் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்படுவர்.

'காப்பி' , பிட் வேண்டாம்

'பொது தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால், அதிக பட்சம், ஐந்தாண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும்' என, அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.* தேர்வறையில், 'பிட்' வைத்திருந்து, அதை பயன்படுத்தாமல், கண்காணிப்பாளர் சோதனை செய்யும் முன்பே கொடுத்து விட்டால், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், அதே தவறை மீண்டும் செய்தால், தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவர்; அந்த மாணவர், இரண்டு தேர்வுகளை எழுத தடை விதிக்கப்படும்* மற்ற மாணவரை பார்த்து எழுதியது
கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு ஆண்டு தேர்வு எழுத முடியாது. 'காப்பி' அடிக்க, கண்காணிப்பாளரிடம் பேரம் பேசினால், அந்த மாணவர், இந்த பொது தேர்வு முழுவதும் எழுத முடியாது

* ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த மாணவர் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். அதிக மதிப்பெண் தரும்படி, விடைத்தாளில் எழுதுவது, வேண்டுகோள் விடுப்பது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், விடைத்தாள்கள் ரத்து செய்யப்படும்

* கண்காணிப்பாளரை மிரட்டுவது, தாக்குவது, கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால், நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். விடைத்தாள்களை திருப்பி தராமல் எடுத்து செல்வது, கிழித்து சேதப்படுத்துவது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால், அந்த மாணவரின் தேர்வு, ரத்து செய்யப்படும்

* வினாத்தாளை, 'லீக்' செய்தால், மூன்று ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும். முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர், விளக்கம் எழுதி தர மறுத்தால், அந்த தேர்வு மட்டுமின்றி, எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும்

* விடைத்தாள்களை மற்ற மாணவர்களிடம் மாற்றி, எழுதி வாங்கினால், ஐந்து ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. விடைத்தாள்களில் பெயர், 'இனிஷியல்' அல்லது சிறப்பு குறியீடுகள் கண்டறியப்பட்டால், அந்த விடைத்தாள்களின் மதிப்பீடு நிறுத்தப்படும்.

கட்டுப்பாட்டு அறை அமைப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்கும் நிலையில், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இது, சென்னையில், தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் செயல்படும் என, இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்து உள்ளார்.

காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, கட்டுப்பாட்டு அறையை, தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள், பெற்றோர், தங்கள் சந்தேகம் மற்றும் குறைகளை, கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம். அதற்காக, 80125 94105, 80125 94115, 80125 94120 மற்றும் 80125 94125 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...