Wednesday, February 28, 2018

குளியல் தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்தது எப்படி?

Updated : பிப் 27, 2018 11:12 | Added : பிப் 27, 2018 10:51

துபாய்: பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாய் ஓட்டலில், 'பாத்டப்'எனப்படும் குளியல் தொட்டியில் மூழ்கி எப்படி இறக்க முடியும் என்று ரசிகர்களிடையே கேள்வி எழுப்பி உள்ளது. எனினும், துபாய் போலீசார்,' அவர் குளியல் தொட்டியில் இருந்த தண்ணீரில் மூழ்கி தான் உயிர் இழந்தார்; அவரது ரத்தத்தில் மது கலந்து இருந்தது' என்றே கூறியுள்ளனர். இது தவிர வேறு காரணம் இல்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:குளியல் தொட்டியில் மூழ்கி ஒரு நபர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. நுரையீரலில் புகுந்த ஒரு கிளாஸ் தண்ணீர் கூட ஒரு மனிதரை இறக்க செய்யும் என்பதை உணர வேண்டும். குறிப்பாக ஒரு மனிதர் நினைவை இழந்த சூழ்நிலையில் இருக்கும் போது இதற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு மனிதர் சுய நினைவு இழந்த நிலையில் இருக்கும் போது சுவாச குழாயில் நுழைந்த சிறிதளவு தண்ணீர் கூட, மரணம் ஏற்பட காரணமாகி விடும். நடிகை ஸ்ரீதேவி விஷயத்தில் அவர் குளியல் தொட்டியில் விழுந்த போது சுய நினைவை இழந்து இருக்கலாம்.

உணவு குழாய், சுவாச குழாய்

ஒரு மனிதர் தண்ணீர் குடிக்கும் போது, அந்த தண்ணீர் உணவு குழாய் வழியாக வயிற்றுக்கு செல்லும். அல்லது சுவாச குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்லும். இதில் இரண்டாவது விஷயம் மிகவும் அபாயகரமானது. எனினும் உடலின் தன்மை அதை தவிர்க்கும் திறமை கொண்டது. ஒரு மனிதர் தண்ணீர் குடிக்கும் போது, உணவு குழாய் விரிவடையும்; சுவாச குழாய் தானாகவே மூடிக் கொள்ளும். இது தான் உடல் உறுப்புகள் செயல்படும் விதம். நமக்கும் தெரியாமலேயே இந்த நிகழ்வுகள் நடைபெறும். எனினும் இந்த நிகழ்வுகள் நடக்க, மூளையின் செயல்பாடு முக்கியம். சுய நினைவு இழந்த ஒரு மனிதரின் வாய்க்குள் புகும் தண்ணீர் மூளையின் தூண்டுதல் இல்லாமல், சுவாச குழாய் வழியாக நுரையீரலுக்கு சென்று விடும்.

மாரடைப்பு காரணம் இல்லை

ஒரு மனிதர் திடீரென மாரடைப்புக்கு ஆளாகும் போது சுயநினைவை இழக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், ஸ்ரீதேவி விஷயத்தில் அது நடக்கவில்லை. அவரது தமனிகளில் எந்த அடைப்பும் இல்லை என்றே உடல் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

வலிப்பு நோய் இல்லை

வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர் திடீரென சுய நினைவை இழக்கலாம். அது போன்ற சூழ்நிலையில் குளியல் தொட்டியில் விழுந்து முட்டி அளவு தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கலாம். ஆனால், ஸ்ரீதேவிக்கு வலிப்பு நோய் பாதிப்பு இல்லை.

மது, தூக்க மாத்திரை

இதுதவிர, ஒரு மனிதர் மது அருந்தி இருந்தாலோ, தூக்க மாத்திரைகள் எடுத்து கொண்டிருந்தாலோ, முட்டி அளவு தண்ணீரில் மூழ்கினால் இறக்க வாய்ப்பு உள்ளது. ஒரு மனிதர் அரை மயக்க நிலையில் இருந்தால், உணவு குழாய், சுவாச குழாய் செயல்பாடு வழக்கம் போல் இருக்காது. சுவாச குழாய் வழியாக எதாவது நுழைந்தால் அதை இருமல் மூலம் வெளியேற்ற முயற்சிப்போம். ஆனால், சுய நினைவு இழந்த மனிதருக்கு இரும கூட முடியாது. சுய நினைவு இழந்த மனிதர் இரும முயற்சித்தால், பிராண வாயு தடைபட்டு அவர் முழுவதுமாக சுய நினைவை இழப்பார்.

தலையில் காயம் இல்லை

அதுபோல் குளியல் தொட்டியின் முனை பகுதியில் பலமாக மோதி இருந்தால் சுய நினைவு இழந்து குளியல் தொட்டியின் உள்ளே விழுந்து விடலாம். ஆனால் இதுபோன்ற நேரத்தில் அந்த நபர் தலையின் பின் பகுதியில் அடிபட்டதற்கான அடையாளம் இருக்கும். சில நேரங்களில் மூளையில் கூட பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். உடல் பரிசோதனை செய்யும் போது இது கண்டுபிடிக்கப்படும். ஆனால், ஸ்ரீதேவி விஷயத்தில் தலையில் அடிபட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை. எனினும் ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். குளியல் தொட்டியில் இருக்கும் முட்டி அளவு தண்ணீர் கூட, ஒருவர் மூழ்கி உயிர் இழக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...