Tuesday, February 27, 2018

தொடர்பு எல்லைக்கு அப்பால்...

Published : 26 Feb 2018 10:29 IST
 
வாசு கார்த்திkarthikeyan.v@thehindutamil.co.in
வாசு கார்த்தி





எதிரி முழு பலத்துடன் விளையாடும் பட்சத்தில், ராஜா மற்றும் சில சிப்பாய்களுடன் ஒருவர் செஸ் விளையாடினால் அந்த ஆட்டம் எவ்வளவு கடினமாக, நெருக்கடியாக இருக்குமோ அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஏர்செல் இருக்கிறது. அனைத்து பக்கமும் நெருக்கடி இருக்கும் சூழலில் ஆட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டத்தில் ஏர்செல் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இருந்து வந்த நிதி நெருக்கடி தற்போது உச்சத்தை அடைந்திருக்கிறது.

இதன் காரணமாக அதன் சேவை முடங்கும் அளவுக்கு சென்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் சேவை முடங்கியது. இதன் காரணமாக மக்கள் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிடும் அளவுக்கு நிலைமை கைமீறி சென்றது. கடந்த சில நாட்களில் 10 லட்சம் பேர் மொபைல் சேவை நிறுவனத்தை மாற்றுவதற்கு விண்ணப்பித்திருக்கின்றனர்.

காரணங்கள் என்ன?

நிறுவனத்தின் தற்போதைய நிலைமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதல் முக்கியமான காரணம் ரிலையன்ஸ் ஜியோ. 2016 ஜூலை காலாண்டில் ஏர்செல் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூ.120 கோடியாக இருந்தது. ஆனால் 2017-ம் ஆண்டு ஜூலை காலாண்டில் ரூ. 5 கோடியாக குறைந்தது. 2017-டிசம்பர் காலாண்டில் ரூ.120 கோடி அளவுக்கு செயல்பாட்டு நஷ்டம் இருந்தது.

ஏற்கெனவே கடன் சுமையில் இருக்கும் நிறுவனத்துக்கு செயல்பாட்டு அளவிலே நஷ்டம் இருந்ததால் கடன் தொகை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடன் தொகையை வங்கிகளுக்கு செலுத்த முடியாத சூழல் உருவானது.

கடன் செலுத்த முடியாத சூழலில் கடந்த நவம்பர் மாதம், கடனை மறு சீரமைப்பு செய்வதற்கு வங்கிகளில் விண்ணப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மறுசீரமைப்பு குறித்து வங்கிகள் பிப்ரவரி வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் கடந்த 12-ம் தேதி ரிசர்வ் வங்கி புதிய உத்தரவினை வெளியிட்டது. ஆறு மாதங்களுக்கு மேல் கடனை செலுத்தாத நிறுவனங்கள் கடனை மறுசீரமைப்பு செய்ய முடியாது. ஆறு மாதங்களுக்கு மேல் கடனை செலுத்தாத நிறுவனங்கள் தேசிய சட்ட நிறுவன தீர்ப்பாயத்தை(என்சிஎல்டி) நாடவேண்டும். இவர்கள் மூலமாகவே அடுத்த கட்ட தீர்வுகள் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது.

என்சிஎல்டி அமைப்பை ஏர்செல் உடன் சம்பந்தப்பட்டவர்கள் (வங்கிகள், வர்த்தக உறவு வைத்திருப்பவர்கள்) யார் வேண்டுமானாலும் அணுகலாம். ஆனால் இங்கு ஏர்செல் நிறுவனமே இன்னும் சில நாட்களில் என்சிஎல்டி-யை அணுக இருக்கிறது என்னும் தகவல் வெளியாகி இருக்கிறது. என்சிஎல்டிக்கு சென்றால் என்ன நடக்கும் என்பதற்கு முன்பு ஏர்செல் வசம் இருக்கும் வேறு சில பிரச்சினைகளை பார்த்துவிடலாம்.

ஏர்செல் நிறுவனத்துக்கு வங்கிகளில் கடன் இருப்பது நீண்ட கால பிரச்சினை. சில காலாண்டுகளுக்கு முன்பு செயல்பாட்டு அளவில் லாபம் இருந்து வந்ததால், நிறுவனத்தின் சேவையில் பிரச்சினை இல்லாமல் இருந்தது. தற்போது செயல்பாட்டு அளவிலே நஷ்டம் ஏற்பட்டிருப்பதால் டவர் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை மூன்று மாதங்களாக செலுத்தவில்லை.

இதனால் மொத்தமுள்ள 8,000-க்கும் மேற்பட்ட டவர்களில் 6,500-க்கும் மேற்பட்ட டவர்கள் செயல்படவில்லை. டவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டது எங்களுக்கே அதிர்ச்சியான தகவல் என ஏர்செல் நிறுவனத்தின் தமிழகப் பிரிவு (strategic business unit)தலைவர் சங்கரநாராயணன் நம்மிடம் கூறினார்.

தவிர எவ்வளவு தொகை செலுத்த வேண்டி இருக்கிறது என்பதில் ஏர்செல் மற்றும் டவர் நிறுவனங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு சில வட்டாரங்களில் இருந்து ஏர்செல் விலகியது. அதனால் விலகிய வட்டாரங்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என டவர் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. முடியாது என ஏர்செல் கூறுகிறது. இந்த பிரச்சினையில் நெட்வொர்க் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பாக ஏர்செல் மொபைலில் இருந்து ஐடியா மற்றும் வோடபோனுக்கு அழைக்க முடியாத நிலை இருந்தது. ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்குக்கு அழைக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான கட்டணம்தான். ஆனால் செல்போன் நிறுவனங்கள் இந்த பரிமாற்றத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து ஐடியா நெட்வொர்க்குக்கு நாம் பேசுகிறோம் என்றால் நமக்கு வழக்கமான கட்டணம்தான்.

ஆனால் ஏர்செல் நிறுவனம் ஐடியாவுக்கு ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கொடுக்க வேண்டும். இதுபோல ஐடியாவில் இருந்து ஏர்செலுக்கு வந்தாலும் இதே கட்டணம்தான். இந்த கட்டணத்தை ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு ஏர்செல் செலுத்தவில்லை. (ஐடியாவுக்கு சுமார் ரூ.60 கோடி வரை செலுத்த வேண்டி இருக்கிறது) அதனால் ஏர்செல்லில் இருந்து இந்த நெட்வொர்க்களுக்கு அழைக்க முடியாத சூழல் உருவாகி வந்த நிலையில்தான் டவர் பிரச்சினை வெடித்தது.

சி.இ.ஓ. கடிதம்

இந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கைஸாட் ஹீர்ஜீ உயர் நிலை பணியாளார்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார். அதில் `வரும் காலத்தில் கடினமான சூழலை சந்திக்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறோம். தற்போதைய சூழலில் நிறுவனத்துக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்’ என்று கூறியிருக்கிறார். இந்த கடிதம் ஊழியர்களிடையே மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிறுவனத்தில் பணியாற்றும் 5,000 பணியாளர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி இருக்கிறது.

என்சிஎல்டி - வாய்ப்புகள் என்ன?

அதிக கடன், போட்டி நிறுவனங்களால் நஷ்டம். இதனால் வங்கி கடனையும் அடைக்க முடியவில்லை, டவர் நிறுவனங்களுக்கும் பணம் செலுத்தவில்லை. டவர் நிறுவனங்களுக்கு செலுத்தாததால் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. வங்கிகளுக்கு செலுத்தாததால் என்சிஎல்டிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. என்சிஎல்டிக்கு செல்லும்பட்சத்தில் நிறுவனத்தின் இயக்குநர் குழு கலைக்கப்பட்டு புதிய இயக்குநர் குழு (insolvency professional) உருவாக்கப்படும்.

இந்த குழு நிறுவனத்துக்கு இருக்கும் வாய்ப்புகளை ஆராயும். நிறுவனத்தை நடத்த முடியுமா, கடனை அடைப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை ஆராய்ந்து இந்தக் குழு தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும். ரூ.15,500 கோடி கடன் இருப்பதால் சொத்துகளை விற்று கடனை அடைக்கலாம் என்று முடிவெடுக்கலாம்.

அடுத்த வாய்ப்பு, ஏர்செல் நிறுனத்தின் கூற்றுப்படி தமிழ்நாடு, சென்னை, வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் ஆகிய வட்டாரங்களில் அதிக வாடிக்கையாளர்களுடன் முக்கியமான பிராண்டாக இருக்கிறது. இந்த பகுதிக்கான கடன் மற்றும் சொத்துகளை தனியாக பிரித்து நிறுவனத்தை நடத்துவதற்கான ஒரு வாய்ப்பும் இருக்கிறது. (மற்ற சொத்துகளை விற்று கடனை அடைக்க வேண்டும்).

குறிப்பிட்ட வட்டாரங்களை மட்டும் தனியாக பிரித்து நிறுவனத்தை நடத்தலாம் என்று நாங்கள் முடிவு எடுக்க முடியாது. ஆனால் இந்த முடிவை புதிய இயக்குநர் குழு எடுக்க முடியும் என சங்கரநாராயணன் கூறினார். ஆனால் அதுவரை வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனத்தில் தொடர்வார்களா என்பது அடுத்த பிரச்சினை. ஏற்கெனவே லட்சக்கணக்கானவர்கள் வேறு நிறுவனத்தை நாட ஆரம்பித்திருக்கும் நிலையில் இதுவும் சவால்தான். ஏர்செல் இன்னும் என்சிஎல்டியை அணுகவில்லை.

அதன் பிறகுதான் insolvency professional நியமனம் செய்யப்படுவார்கள். நியமனம் செய்து 270 நாட்களுக்குள் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுவிதியாகும். இல்லை எனில் சொத்துகளை விற்கும் பணி ஆரம்பமாகும்.

இந்த எல்லையில் சிப்பாய்களை அடுத்த எல்லைக்கு கொண்டு செல்லும்பட்சத்தில் ராணி, கோட்டையை மீட்பதற்கான வாய்ப்பு இருந்தாலும், அந்த வாய்ப்பு நிறைவேறுவதற்கு இருக்கும் சாத்தியங்கள் குறைவே. ஏதாவது அதிசயம் நடக்க வேண்டும். ஏர்செல் விஷயத்தில் அப்படிப்பட்ட அதிசயம் நடக்குமா?

karthikeyan.v@thehindutamil.co.in

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...