Wednesday, August 1, 2018


சமூகவலைதளத்தில் பொது மக்கள் ஆதார் எண்ணை வெளியிடக் கூடாது: யுஐடிஏஐ எச்சரிக்கை

By DIN | Published on : 01st August 2018 02:30 AM |

சமூகவலைதளம் மற்றும் இணையதளத்தில் பொது மக்கள் தங்களது ஆதார் எண்ணை வெளியிடக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) எச்சரித்துள்ளது.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் ஆர்.எஸ். ஷர்மா, சுட்டுரையில் அண்மையில் தனது ஆதார் எண்ணை வெளிப்படையாக வெளியிட்டு, அதன்மூலம் தனக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். இதை சவாலாக எடுத்துக் கொண்ட சிலர், ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து, அவரது செல்லிடப் பேசி எண், பான் எண், வங்கி கணக்கு எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை வெளியிட்டனர். ஆனால், இது உண்மையில்லை என்று ஷர்மா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆதார் தகவலை பராமரித்து வரும் இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் செவ்வாய்க்கிழமை ஒர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பொது மக்கள் தங்களது ஆதார் எண்ணையோ, பிறரின் ஆதார் எண்களையோ இணையதளம் மற்றும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு, பிறருக்கு சவால் விடுப்பதை தவிர்க்கவும். இது சட்டத்துக்கு எதிரான செயலாகும்.
இதேபோல், பிறரின் ஆதார் தகவலை மற்றவர்கள் ஏதேனும் நோக்கத்துக்கு பயன்படுத்துவதும் ஆதார் சட்டம், இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின்கீழ் குற்றமாகும்.

இது மோசடி நடவடிக்கையாக கருதப்படும். இதை மீறி, பிறரின் ஆதார் தகவலை யாரேனும் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்டரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இம்ரான் பதவியேற்பு விழா: பிரதமர் மோடியை அழைக்கத் திட்டம்


By DIN | Published on : 01st August 2018 04:25 AM |



பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவருடன் சார்க் நாடுகளைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் அழைப்பு விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -ஏ - இன்சாஃப் கட்சி (பிடிஐ) விரைவில் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேவேளையில், இம்ரானின் பிடிஐ கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. மறுபுறம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (பிஎம்எல்-என்) 64 இடங்களையும், பிலாவால் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 43 இடங்களையும் கைப்பற்றின. இதைத் தவிர சுயேச்சை வேட்பாளர்கள் 13 பேர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகியுள்ளனர்.

இதையடுத்து சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கேற்ப வரும் 11-ஆம் தேதி பிரதமராக தாம் பொறுப்பேற்பேன் என்று இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், பதவியேற்பு விழாவுக்கு சர்வதேசத் தலைவர்கள் யார் யாரை அழைக்கலாம் என்பது குறித்து பிடிஐ கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

அதன்படி, பிரதமர் மோடி உள்பட இலங்கை, பூடான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மாலத் தீவுகள்ஆகிய சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
குருவாயூர் ரயில் தாமதம்

Added : ஆக 01, 2018 00:10 | 

  நாகர்கோவில்: கேரள மாநிலம், குருவாயூரில் இருந்து, சென்னை செல்லும் விரைவு ரயில் நேற்று காலை, ஐந்து மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணியர் சிரமப்பட்டனர்.குருவாயூர் -- சென்னை இடையே ஓடும் விரைவு ரயில், நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு தினமும் அதிகாலை, 5:30 மணிக்கு வந்து, 5:55 மணிக்கு புறப்படும். நேற்று காலை இந்த ரயில், 10:30 மணிக்கு வந்து, 11:00 மணிக்கு புறப்பட்டு சென்றது. காலை நேரத்தில் நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை செல்லும் பயணியரும், சென்னை செல்ல வேண்டிய பயணியரும் சிரமப்பட்டனர்.கேரளாவில் மழை மற்றும் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணத்தால் தாமதம் ஏற்பட்டதாக, ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு :
11,270 பேரை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., முடிவு 

 
1.8.2018

சென்னை,:'குரூப் - 4' தேர்வில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன், 2,000 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வின் வழியே, 11 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 9,351 பதவிகளுக்கு, குரூப் - 4 தேர்வு, இந்த ஆண்டு, பிப்., 11ல் நடத்தப்பட்டது. தேர்வில், மாநிலம் முழுவதும், 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள், ஐந்து மாதத்திற்குப்பின், நேற்று முன்தினம் வெளியாகின.முடிவுகள்,http://results.tnpsc.gov.in மற்றும், http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில், 15 லட்சத்து, ௨,௦௦௦ பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவு குறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் மற்றும் செயலர், நந்தகுமார் ஆகியோர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பிப்., 2018ல் நடத்தப்பட்ட, குரூப் - 4 தேர்வு, இந்தியாவிலேயே ஒரே நாள் தேர்வில், அதிக விண்ணப்பங்களை பெற்று, நடத்தப்பட்ட தேர்வு.

இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பதவிக்கு மூன்று பேர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவர். தற்போதைய நிலையில், தோராயமாக, 33 ஆயிரம்பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பட்டியல், விரைவில் அறிவிக்கப்படும்.ஆக.,16 முதல், 30 வரை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இ - சேவை மையங்களுக்கு சென்று, தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றை, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் ஆய்வு செய்த பின், அக்டோபரில் இட ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் நடக்கும்.இந்த தேர்வின் வழியே, வி.ஏ.ஓ., பதவியில், 494 காலியிடங்கள் உட்பட, பல்வேறு பதவிகளுக்கான, 9,351 இடங்கள் நிரப்பப்படும்; இடங்களின் எண்ணிக்கை, மாறுதலுக்குரியது என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, தற்போது கூடுதலாக, 1,929 இடங்கள் நியமன பட்டியலில் சேர்ந்துள்ளன.வி.ஏ.ஓ., - 1,107; பிணையமற்ற இளநிலை உதவியாளர் பதவி, 4,722; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர் பதவி, 226; வரிவசூலிப்பாளர், 52; தட்டச்சர், 3,974; சுருக்கெழுத்தர், 931; கள ஆய்வாளர், 102 மற்றும் வரைவாளர், 156 என, 11 ஆயிரத்து, 270க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த எண்ணிக்கையும், கவுன்சிலிங்

நடக்கும் வரை மாற வாய்ப்புள்ளது.

86 சதவீதம், 'பாஸ்'பெண்கள் அமோகம்

குரூப் - 4 தேர்வில், 17.53 லட்சம் பேர் பங்கேற்றதில், 15.02 லட்சம் பேர், அதாவது, 86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்களில், 7.97 லட்சம் பேரும்; ஆண்களில், 6.28 லட்சம் பேரும், மூன்றாம் வகை பாலினத்தில், 35; மாற்று திறனாளிகள், 17 ஆயிரம்; விதவைகள், 5,000 மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், 2,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தட்டச்சர் பதவிக்கு, 74 ஆயிரத்து, 555 பேரும்; சுருக்கெழுத்தர் பதவிக்கு, 1,446 பேரும் தேர்ச்சி பெற்றனர். வி.ஏ.ஓ., உள்ளிட்ட மற்ற ஆறு வகை பதவிகளுக்கு, 14.26 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.குரூப் - 4 தேர்வில், சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்தவர்களில், திருநாவுக்கரசு என்பவர், மாநில அளவில், 14வது இடம் பிடித்துள்ளார். செல்வகுமார், 33; கிருத்திகா, 114 மற்றும் கோபி, 731 ஆகிய இடங்களை பெற்றுள்ளனர்.
ஸ்ரீவி., ஆடிப்பூர விழா ஆக.5ல் கொடியேற்றம்

Added : ஆக 01, 2018 01:58

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா ஆக., 5ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆக., 13ல் தேரோட்டம் நடக்கிறது.ஆக.,5 காலை 9:00 மணிக்குமேல் கொடியேற்றம் நடக்கிறது. ஐந்தாம் நாளான ஆக.,9 காலை 10:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனம், இரவு 10:00 மணிக்கு ஐந்து கருடசேவை நடக்கிறது. ஆக.,11 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன்கோவிலில் ரெங்கமன்னார் சயன திருக்கோல உற்ஸவம் நடக்கிறது. ஆக.,13 காலை 7:20 மணிக்கு ஆண்டாள் தேரோட்டம் நடக்கிறது.12 நாள் விழாவில் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், இரவு 7:00 மணிக்கு வீதி உலா, மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 வரை சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, நாமசங்கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் பட்டர்கள், அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
காலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை கமிஷனர் தகவல்

Added : ஆக 01, 2018 00:50 |

மதுரை: ''கருவூல துறையில், காலையில் பில் தாக்கல் செய்தால், மாலையில் பணம் பட்டுவாடா செய்யும் வகையில், டிஜிட்டல் மயமாக்கும் பணி நடக்கிறது,'' என, கருவூல கணக்கு துறை கமிஷனர், ஜவஹர் தெரிவித்தார்.
மதுரையில், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் டில்லியில், 293 கருவூலங்கள், சார்நிலை கருவூல அலுவலகங்கள் செயல்படுகின்றன. திகார் சிறைடில்லி திகார் சிறையில் பணிபுரியும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 1,000 பேர், தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, டில்லியில் கருவூலம் செயல்படுகிறது.இத்துறை மூலம், ஒன்பது லட்சம் அரசு ஊழியர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது.முதியோர் உதவி தொகை உட்பட அரசு நலத் திட்டங்களும், இத்துறை மூலம் வழங்கப்படுகிறது.மேலும், 40 லட்சம் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடும், 12 லட்சம் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஓராண்டில் இத்துறை மூலம், 1.56 ஆயிரம் கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுக்கப்பட்டது. 1.70 ஆயிரம் கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.கடந்த, 1970ல் இத்துறை கம்ப்யூட்டர்மயமானது. 2003ல், முதல் முறையாக, 'இ - சேவை' மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், சம்பள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், 29 ஆயிரம் பேர் உள்ளனர்.

டிஜிட்டல் மயம் : ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஊழியர்களின் பணிப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடக்கிறது. இது குறித்து, 42 ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.தற்போது, பில் தாக்கல் செய்த சில நாட்களில், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கம் மூலம், காலையில் பில் தாக்கல் செய்தால், மாலையில், வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
7 ஆண்டு சிறை! அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்தால்..
 புதிய சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் 


1.8.2018

புதுடில்லி,: அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிப்போருக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.



நியாயமான வகையில் செயல்படும் அரசு ஊழியர்கள் மீது, உண்மைக்கு மாறாக, லஞ்சப் புகார்கள் அளிப்பதை தடுக்கும் வகையில், ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை

இதுதொடர்பாக, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி சமீபத்தில் கூறியிருந்ததாவது:ஊழல் ஒழிப்பு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம், நியாயமான அரசு ஊழியர்கள் பாதுகாக்கப்படுவர். பொய் வழக்குகள் தொடுக்கப்படுவதால், நேர்மையாக செயல்படும் அரசு ஊழியர்கள் பயப்படும் சூழ்நிலை நிலவியது.இதனால், முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் முடிவு எடுக்காமல் தள்ளிப்போட்டு, பின் வரும் அதிகாரி, அந்த முடிவை எடுக்கட்டும் என்ற மனப்பான்மை, அதிகாரிகள் மத்தியில் நிலவியது. இதனால், நியாயமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இந்நிலையில், புதிய ஊழல் ஒழிப்பு சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
அளித்துள்ளதாக, அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த சட்டம், ஜூலை, 26 முதல் அமலுக்கு வந்து உள்ளதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை

அரசுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:புதிய சட்டப்படி, அரசு ஊழியர் அல்லது அதிகாரி எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக, எத்தகைய குற்றச்சாட்டு கூறப்பட்டாலும், அவர் சார்ந்த துறையின் முன் அனுமதி இன்றி, போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தக்கூடாது. இந்த பாதுகாப்பு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.அதேசமயம், தனக்காக அல்லது வேறு ஒருவருக்காக, ஏதாவது பிரதிபலனை ஒரு அதிகாரி பெற்றாலோ, பெற முயற்சி செய்தாலோ, அதற்காக கைது செய்யப்படும் வழக்குகளில், போலீசார் விசாரணை நடத்த, முன் அனுமதி பெறத் தேவை இல்லை.புதிய சட்டப்படி, அரசு ஊழியருக்கு பிரதிபலன் அளிப்பவர் மற்றும் அளிப்பதாக வாக்குறுதி தருபவருக்கு, ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப் படலாம்.

தீர்ப்பு

ஊழல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு வழங்க, அதிகபட்சம், இரண்டு ஆண்டுகாலக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புதிய, ஊழல் ஒழிப்புசட்டத்தில், அரசு ஊழியர்கள் தவிர, அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், வங்கி துறையை சேர்ந்தோர் ஆகியோருக்கும், சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குஎதிராக புகார் தரப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆணையத்திடம், முன் அனுமதி பெற்ற
பின்பே, சி.பி.ஐ., போன்ற அமைப்புகள், விசாரணை நடத்த முடியும்.லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கும் சட்டம், ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

7 நாளில் புகார் செய்யணும்!

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால், லஞ்சம் தர நிர்ப்பந்தம் செய்யப்படும் பொதுமக்களை பாதுகாக்க, புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, அரசு அதிகாரிகள் லஞ்சம் தரும்படி, யாரையாவது கட்டாயப்படுத்தினால், அது பற்றி, ஏழு நாட்களுக்குள், சம்பந்தப்பட்டோர், விசாரணை அதிகாரியிடம் அல்லது போலீசில் புகார் செய்ய வேண்டும்.லஞ்சம் வாங்குவோருக்கு, புதிய சட்டத்தின் கீழ், குறைந்தபட்சம், மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த தண்டனையை, ஏழு ஆண்டு வரை நீட்டிக்கவும், சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.லஞ்சம் தரும் வர்த்தக நிறுவனங்களும், புதிய சட்ட வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, வர்த்தக நிறுவனத்துடன் தொடர்புள்ள நபர், அரசு அதிகாரிக்கு லஞ்சம் தந்தாலோ, தருவதாக வாக்குறுதி அளித்தாலோ, அபராதம் விதிக்கப்படும்.

NEWS TODAY 22.04.2024