இம்ரான் பதவியேற்பு விழா: பிரதமர் மோடியை அழைக்கத் திட்டம்
By DIN | Published on : 01st August 2018 04:25 AM |
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவருடன் சார்க் நாடுகளைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் அழைப்பு விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -ஏ - இன்சாஃப் கட்சி (பிடிஐ) விரைவில் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேவேளையில், இம்ரானின் பிடிஐ கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. மறுபுறம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (பிஎம்எல்-என்) 64 இடங்களையும், பிலாவால் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 43 இடங்களையும் கைப்பற்றின. இதைத் தவிர சுயேச்சை வேட்பாளர்கள் 13 பேர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகியுள்ளனர்.
இதையடுத்து சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கேற்ப வரும் 11-ஆம் தேதி பிரதமராக தாம் பொறுப்பேற்பேன் என்று இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், பதவியேற்பு விழாவுக்கு சர்வதேசத் தலைவர்கள் யார் யாரை அழைக்கலாம் என்பது குறித்து பிடிஐ கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
அதன்படி, பிரதமர் மோடி உள்பட இலங்கை, பூடான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மாலத் தீவுகள்ஆகிய சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment