Sunday, August 12, 2018

''நாங்க ஒட்டுற பேப்பரை தெய்வமா கும்பிடுறதைப் பாக்கறப்போ...!’’ - 2019 காலண்டர் தயாரிக்கும் சிவகாசி பெண்கள்

அருண் சின்னதுரை


ஆர்.எம்.முத்துராஜ்

சிவகாசியில் பட்டாசுக்கு அடுத்து, காலண்டரும் டைரியும்தான் நிறைய பேரின் வீட்டுல பசி தீர்க்கும் வேலையைக் கொடுக்குது.




''கைபேசியிலே பல ஆண்டுகளுக்கான தேதிகளைப் பார்க்கும் டிஜிட்டல் உலகத்திலும், காலண்டர் மீதான மக்களின் ஆர்வம் குறையவில்லை'' என்கின்றனர் காலண்டர் விற்பனையாளர்கள். ஆண்டுதோறும் காலண்டர் உற்சாகமாக விற்பனை செய்கின்றனர்.



தினமும் காபி , டீ குடிக்கும் முன்பு, காலண்டரின் முந்திய நாள் தாளைக் கிழித்துவிட்டு, ராசி பலன், நல்ல நேரம், தினம் ஒரு தத்துவம் எனப் படிக்கும் பழக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. என்னதான் கணிப்பொறி, எலக்ட்ரானிக் காலண்டர்கள் என வந்தாலும், பிள்ளையார், முருகன், இயேசு என தங்கள் இஷ்ட தெய்வங்களை படங்களாககொண்ட காலண்டரை, வீடுகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் சுவரில் மாட்டி அழகுப் பார்க்கும் ஆர்வம் குறையவில்லை. அதுதான் அந்த இடத்துக்கு நிறைவைக் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று காலண்டர் தயாரிப்பு தொடங்கிவிடும் சிவகாசியில் இதன் தயாரிப்பு ஜோராக இருக்கும். வரும் 2019-ம் ஆண்டுக்கான காலண்டர்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பெண்களை நேரில் சந்திக்க, சிவகாசியில் இருக்கும் கேலண்டர் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சென்றோம்.

 

தினசரி காலண்டருக்கான பிரதிகளை அடுக்கிக்கொண்டிருந்த பிரேமா, ‘'7 வருஷமா இந்தத் தொழிலில் இருக்கேன். மிஷினில் அடித்துத்தரும் பிரதிகளைத் தேதி மாறாமல் வேகமாவும் கவனமாகவும் அடுக்கணும். கொஞ்சம் கவனம் மாறினாலும், பார்த்த வேலையெல்லாம் வேஸ்ட் ஆகிரும். காலண்டரோட ஒரு தாள் மாறினாலும் மொத்த வேலையையும் திருப்பி பாக்கணும். நாம அடுக்கின பின்னாடி ஒருத்தர் சரிபார்ப்பாங்க. நான் ஒருமுறைகூட தப்பா அடுக்கினதில்லே. ஜூன் முதல் ஜனவரி வரைக்கும்தான் காலண்டர் வேலை இருக்கும். மற்ற மாதங்கள் பைண்டிங் ஒர்க் மாதிரி கிடைச்ச வேலையைச் செய்வோம். நாம வேகமாக அடுக்கும் பிரதிகளுக்கு தகுந்த மாதிரி சம்பளம் கையில் நிற்கும். காலையில 10 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணி வரை செய்வேன்.

வாரத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிருவேன். வீட்டில் சும்மா இருக்கிறதுக்கு இது பெரிய விஷயமில்லியா? வீட்டு கஷ்டத்தையும் கொஞ்சம் குறைக்க முடியுது. ரேடியோவில் பாட்டு ஓடவிட்டுட்டு விறுவிறுன்னு வேலை செய்ய ஆரம்பிச்சோம்ன்னா அலுப்பு தெரியாது. நாங்க தயாரிக்கும் காலண்டரைப் பல கடைகளில் சாமியா நினைச்சு கும்பிடறதைப் பார்க்கும்போது மனசுக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும். அதைவிட பெரிய சந்தோஷம், நீங்க பார்க்கிறதுக்கு முன்னாடி நாங்கதான் முதல் ஆளா காலண்டரை பார்ப்போம். இந்த ட்ஜிட்டல் யுகத்திலும் காலண்டர் வாங்குறது குறையலை'' எனப் புன்னகைக்கிறார்.



காலண்டர் சிலிப்களை ஒட்டிக்கொண்டிருந்த பாண்டிச்செல்வி, “சிவகாசியில் பட்டாசுக்கு அடுத்து, காலண்டரும் டைரியும்தான் நிறைய பேரின் வீட்டுல பசி தீர்க்கும் வேலையைக் கொடுக்குது. வெறும் சம்பளத்துகஆன் வேலையா மட்டுமே பார்க்காமல், புதுசு புதுசா டிசைன் டிசைனா வரும் காலண்டரை ரசிச்சு ஒட்டுவேன். புது காலண்டர் வாசனையும் எனக்குப் பிடிக்கும். இபப்டி ரசிச்சு செய்யறதால, எங்க வீட்டுல இருக்கும் காலண்டரின் தாளை கிழிக்கவே மனசு வராது. ரப்பர் பேண்டு போட்டு மாட்டி வெச்சிருவேன். ஒரு காலண்டர் உருவாக பலகட்ட வேலைகள், பலரின் உழைப்பு இருக்கு. கடைகளில் இலவசமா கொடுக்கிறாங்கன்னு நிறைய பேரு அதை அலட்சியமா நினைக்கிறப்போ மனசுக்கு கஷ்டமா இருக்கும். எங்களை மாதிரி பல தொழிலாளர்களின் உழைப்பு அதில் அடங்கியிருக்கு. தினமும் காலண்டர் பார்க்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் வளர்க்கணும். அதில் பால் நல்ல விஷயங்களைத் தெரிஞ்சுப்பாங்க'' என நெகிழ்வுடன் சொல்கிறார்.

ஒவ்வொரு வருடமும் 15 ரூபாய்க்கு ஆரம்பித்து 2000 ரூபாய் வரை கேலண்டர் விற்பனையாகிறது. புதுப் புது தொழில்நுட்பங்கள் வந்தாலும், சிவகாசி காலண்டர்களுக்கான மவுசு குறையவில்லை.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...