Wednesday, August 15, 2018

BE admisdions

பி.இ. கலந்தாய்வு: 36 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை: 120 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை

By DIN  |   Published on : 15th August 2018 01:34 AM 

பொதுப் பிரிவு பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு இன்னும் ஒரு சுற்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் 36 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை என்பது தெரியவந்துள்ளது. 120 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
2011- ஆம் ஆண்டிலிருந்து பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து வரும் நிலையில், நிகழாண்டில் அது மேலும் குறைந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் 5 சுற்றுகளைக் கொண்ட ஆன்-லைன் பொதுப் பிரிவு கலந்தாய்வில், திங்கள்கிழமை வரை 4 சுற்றுகள் நிறைவடைந்துவிட்டன. 
81 கல்லூரிகளில் மட்டுமே.. .மாணவர் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் 81 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பியிருக்கின்றன. 
299 பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான சேர்க்கை நடைபெற்றுள்ளது.
36 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை: இதே போன்று 120 பொறியியல் கல்லூரிகளில் 10-க்கும் குறைவான இடங்களே நிரம்பியிருக்கின்றன. இதில் 83 கல்லூரிகளில் 5-க்கும் குறைவான இடங்களும், 18 கல்லூரிகளில் ஒரு இடம் மட்டுமே நிரம்பியிருக்கின்றன.
36 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலை காரணமாக தமிழகத்தில் உள்ள 250 பொறியியல் கல்லூரிகளை வரும் ஆண்டுகளில் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: இந்த முறை பி.இ. இயந்திரவியல், கட்டடவியல் (சிவில்) பிரிவுகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 
உயிரி தொழில்நுட்பம், கெமிக்கல் பொறியியல் படிப்புகளை புதிதாக தொடங்கிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து காணப்படுகிறது.
100 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே... நிலைத்து நின்று, தரமான கல்வியை மாணவர்களுக்குக் கொடுக்கக்கூடிய சூழல், தமிழகத்தில் உள்ள 100 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் பொறியியல் பாடத் திட்டத்தையும், தேர்வு முறையையும் மேம்படுத்தாவிட்டால், பொறியியல் படிப்பின் பக்கம் மாணவர்களை ஈர்ப்பது வரும் காலங்களில் மேலும் கடினமாகிவிடும். அது மட்டுமின்றி, வேலைவாய்ப்பு மற்றும் வளாகத் தேர்வில் சிறந்து விளங்கும் கல்லூரிகள் மட்டுமே வரும் ஆண்டுகளில் மாணவர்களை ஈர்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Changes in visa regulations leave students in limbo, many reconsider plans to study abroad

Changes in visa regulations leave students in limbo, many reconsider plans to study abroad  Amisha.Rajani@timesofindia.com 22.09.2024  Hyder...