Monday, August 13, 2018



சிறுமியரை,கற்பழித்தால்,துாக்கு தண்டனை,சட்டம்,அமலானது,அரசு,அதிரடி

dinamalar 13.08.2018

புதுடில்லி : பெண்கள், சிறுமியரை பாதுகாக்கும் நோக்கில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்வோருக்கு, துாக்கு தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டப்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்யும் கொடியவருக்கு, முன் ஜாமின் கிடைக்காது. பலாத்கார குற்றங்கள் அனைத்துக்கும், புதிய சட்டப்படி, தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

உ.பி., மாநிலம், உன்னாவோ மாவட்டத்தில், ஒரு பெண்ணும், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் ஒரு சிறுமியும், இந்தாண்டு துவக்கத்தில், கொடூர கும்பல்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. இதையடுத்து, சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய, பலதரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.

ஒப்புதல் :

இதைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உட்பட, கடுமையான தண்டனைகளை வழங்கும் ஷரத்துகளுடனான அவசர சட்டத்தை, மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன் இயற்றியது.



இந்நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட மசோதா, கடந்த வாரம், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறின. இந்நிலையில், புதிய கிரிமினல் சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பாலியல் குற்றங்களை தடுக்கும் அவசர சட்டத்துக்கு மாற்றாக, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம், 'கிரிமினல் சட்டம்- 2018' என அழைக்கப்படும்;

இது, 2018, ஏப்., 21ல், அமலுக்கு வந்ததாக கருதப்படும்.

இந்த புதிய சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றில் தக்க திருத்தங்களுக்கு வகை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாழ்நாள் சிறை :

புதிய சட்டப்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, இறக்கும் வரை வாழ்நாள் சிறை அல்லது துாக்கு தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 - 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம்  செய்தால், குறைந்தபட்ச தண்டனை, 10 ஆண்டுகளில் இருந்து, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த தண்டனை, குற்ற வாளி இறக்கும் வரை, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வரை, அதிகரிக்கப்படலாம். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமி யரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியவர்களுக்கு, இறக்கும் வரை வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கான குறைந்தபட்ச தண்டனை, ஏழு ஆண்டில் இருந்து, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தண்டனை, ஆயுள் தண்டனையாக நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.

நிர்ணயம் :

பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க, புதிய சட்டம் வகை செய்கிறது. பாலியல் பலாத்கார வழக்குகள் அனைத்தையும், இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேல்முறையீடுகள் மீதான விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர், முன்ஜாமின் பெற முடியாது.

No comments:

Post a Comment

Passengers of an international flightdropped off at domestic terminal

Passengers of an international flight dropped off at domestic terminal The Hindu Bureau CHENNAI 3.01.2025 Passengers of an international fli...