Monday, August 13, 2018

வரிகளால் ஆய பயன் என்?

By வெ.ந. கிரிதரன் | Published on : 13th August 2018 02:45 AM |

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன். நாட்டு நடப்புகள் குறித்து கலந்துரையாடி கொண்டிருந்தபோது வருமான வரி குறித்து பேச்சு வந்தது. "நாங்கள் எல்லாம் உயர் வருவாய் பிரிவின்கீழ் வருவதால் 30 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு அதிகமாக வரி விதிப்பது எந்த விதத்தில் நியாயம்' என பேச்சை ஆரம்பித்தவர், "எங்களை இத்துடன் விட்டுவிட்டால் பரவாயில்லை. ஹோட்டலுக்கு சென்றால் ஜி.எஸ்.டி., தியேட்டருக்கு போனால் ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசலுக்கு 50 சதவீதத்துக்கு மேல் வரி, போதாகுறைக்கு சமையல் எரிவாயு மானியத்தையும் விட்டுக் கொடுங்கள் எனவும் கேட்கின்றனர்.

சரி, நாம் நன்றாக சம்பாதிப்பதன் பயனாக வருமான வரி செலுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறோம் என மகிழ்ச்சி கொள்ளலாம் என்றால் அதுவும் முடியவில்லை' என வருந்தினார்.
"மின்னல் வேகத்தில் வாகனங்கள் பறக்கும் நான்கு வழி, ஆறு வழி, எட்டு வழி சாலைகள் உள்ள இதே நாட்டில்தான், குண்டும் குழியுமான சாலைகளும், இன்னும் சாலை வசதியையே காணாத ஆயிரக்கணக்கான கிராமங்களும் இருக்கின்றன. ஆனால், நாட்டின் எந்த மூலையில் வசிப்பவராக இருந்தாலும், அவர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும்போது, அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யும்போது ஆயுள்கால சாலை வரி என மொத்தமாக ஒரு தொகையை வசூலித்து விடுகின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு மணி நேரம் தொடர்ந்தால் போல் மழை பெய்தால் போதும். மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து குளம் போல் தேங்கி நிற்கும்படிதானே உள்ளன இங்கு உள்கட்டமைப்பு வசதிகள்?

உயர்கல்விக்கு 2 சதவீதம், பள்ளிக்கல்விக்கு 1 சதவீதம் என கல்விக்கென தனியாக வரி வசூலிக்கப்பட்டாலும் (எஜுகேஷன் செஸ்), மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு தரவேண்டியது கட்டாயமென சட்டம் போட்டிருப்பது, அரசாங்கமே தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிப்பது போல இல்லையா?

அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், அவசர மருத்துவத் தேவைக்கு நாம் விரும்பியோ, விரும்பாமலோ தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று லட்சக்கணக்கில் செலவு செய்துதானே மருத்துவம் பார்க்க வேண்டியுள்ளது?
உள்ளாட்சி அமைப்புகளுக்கு, குறிப்பாக, சென்னை போன்ற மாநகராட்சிகளுக்கு குடிநீருக்காக வரி செலுத்திவிட்டு, அன்றாட தேவைகளுக்காக லாரி தண்ணீரையும், குடிநீருக்கு கேன் தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கும் அவலநிலை நம் மக்களைத் தவிர உலகின் வேறெந்த நாட்டு மக்களுக்காவது ஏற்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.
குடிநீருக்காக குடங்களைச் சுமந்துக் கொண்டு மக்கள் வீதி வீதியாக அலைவதும், தண்ணீர் கேட்டு தொண்டைநீர் வற்ற பொதுமக்கள் சாலை மறியல் செய்வதும் ஒவ்வொரு கோடையிலும் நடக்கும் கொடுமைகளாகத்தானே தொடர்கின்றன?

அரசு இயந்திரத்தின் அலட்சிய போக்கால், தங்கள் ஊரின் ஏரி, குளம், கால்வாய்களை தங்களது சொந்த செலவில் தூர்வார வேண்டிய துர்பாக்கிய நிலைக்கும் அல்லவா நம் மக்கள் தள்ளப்படுகின்றனர்?
இவையெல்லாவற்றுக்கும் மேலாக, செய்யும் வேலைக்கான சரியாக ஊதியம் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. "அவுட்சோர்சிங்' எனப்படும்

அயல்பணி நியமனமுறையை கொண்டு வந்து, பணியாளர்களின் சம்பளத்திலும் மாதந்தோறும் கைவைத்து விடுகின்றனர்.
ஏடிஎம்-களில் இவ்வளவு முறைக்கு மேல் பணம் எடுத்தால் அபராதம், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் இவ்வளவு தொகை இல்லையென்றால் அதற்கும் அபராதம், ரொக்கமில்லா பணபரிவர்த்தனைக்கும் வரி என,வங்கிகளும் தங்கள் பங்குக்குக் கொள்ளை அடித்து வருகின்றன.

இப்படி தரமான கல்வி, மருத்துவம், சுத்தமான குடிநீர், சிறப்பான உள்கட்டமைப்பு வசதி, உழைப்பை சுரண்டாத வேலை என ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல் வருமான வரி, சாலை வரி, ஜி.எஸ்.டி. என பல்வேறு வரிகளை ஓர் அரசு வசூலிப்பதால் ஆன பயன் என்ன' என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் நண்பர்.
"இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? நம் நாடு வளர்ச்சி அடையவே இல்லையென சொல்கிறீர்களா?' என அவரிடம் கேட்டேன். "அப்படிச் சொல்லிவிட முடியாது; நம் தேசத்தின் வளர்ச்சி சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியாக இல்லை என்பதுதான் என் வருத்தம்' என்றார் அவர்.

அவரது இந்த வருத்தத்தை நேர்மையாக வரி செலுத்தும் அனைவரின் ஒட்டுமொத்த குரலாகதான் நாம் பார்க்க வேண்டும். இத்தகையோரின் ஆதங்கத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து வருமான வரிவிதிப்பு மற்றும் வசூலிக்கும் முறையில் அதிரடி சீர்திருத்தங்களை கொண்டு வருவது அவசியமாகும். 

அதாவது, அதிகமாக சம்பாதித்தால் அதிக வரிவிதிப்பு என்றில்லாமல், அனைவருக்கும் சமமான அளவு வரி விதிக்கும் முறையை கொண்டுவர வேண்டும். அத்துடன், அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு வருமான வரி விதிப்பில் கடைப்பிடிக்கப்படும் டி.டி.எஸ். முறை போன்று, பல்வேறு சுயதொழில் புரிவோர், வணிகர்கள், பலவித சேவை நிறுவனங்களை நடத்துவோர் என பலதரப்பினரும் வருமான வரி ஏய்ப்பு செய்யாதபடி புதிய வழிமுறையை கண்டறிந்து அதனைக் கடுமையாக செயல்படுத்த வேண்டும். 

பல்வேறு வரி இனங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் வகுக்கப்படும் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பை, பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் மட்டும் ஒப்படைக்காமல், வாய்ப்புக்காக காத்திருக்கும் நம் இளைஞர்களை கொண்டு நடத்தப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் அவற்றில் சரி பங்கு தர வேண்டும்.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கலின்போது, முந்தைய நிதியாண்டில் கிடைத்த மொத்த வரி வருவாய் எவ்வளவு, அதில் எந்தெந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது, அத்திட்டங்களில் தற்போதைய நிலை என்ன என்பவை குறித்தும் மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவைதான், நேர்மையாக வரி செலுத்தும் குடிமக்களுக்கு ஓர் நல்லரசு தரும் வெகுமதியாக இருக்கும்.

No comments:

Post a Comment

Passengers of an international flightdropped off at domestic terminal

Passengers of an international flight dropped off at domestic terminal The Hindu Bureau CHENNAI 3.01.2025 Passengers of an international fli...