Tuesday, August 14, 2018


அழகிரி,போர்க்கொடி,D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்


தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, திடீர் போர்க்கொடி துாக்கி உள்ளார். தி.மு.க.,வில், தனக்கே செல்வாக்கு என, செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, சவால் விட்டுள்ளார். விரைவில், ஆதரவாளர்களுடன் ஆலோசித்து, அதிரடி முடிவெடுக்கப் போவதாகவும், மிரட்டல் விடுத்துள்ளார். கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, கட்சியின் செயற்குழு, இன்று கூடும் நிலையில், தடலாடி நடவடிக்களை, அழகிரி துவக்கியுள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக, கருணாநிதி, 7ம் தேதி, மரணம் அடைந்தார். அவரது உடல், சென்னை, மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிட வளாகத்தில், அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் சமாதிக்கு, நேற்று அழகிரி, தன் மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் தயாநிதி மற்றும் சென்னை மாவட்ட ஆதரவாளர்களுடன் சென்றார். சமாதியில் மலர் துாவி, தந்தையை வணங்கினார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: என் தந்தையிடம், ஆதங்கத்தை கொட்டினேன். என்ன ஆதங்கம் என்பது, இப்போது உங்களுக்குத் தெரியாது. கருணாநிதியின் உண்மையான, விசுவாசமுள்ள உடன்பிறப்புகள், என் பக்கம் தான் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விசுவாசிகளும், என் பக்கம் இருக்கின்றனர். அவர்கள், என்னை ஆதரிக்கின்றனர். எனவே, இதற்கு காலம், பின்னால் பதில் சொல்லும். இவ்வாறு அழகிரி கூறினார்.

பின், நிருபர்களின் கேள்விகளுக்கு, அழகிரி அளித்த பதில்:

உங்கள் ஆதங்கம் கட்சி தொடர்பானதா; குடும்பம் தொடர்பானதா?
கட்சி தொடர்பானது தான்.
தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பீர்களா?
நான், இப்போது தி.மு.க.,வில் இல்லை. செயற்குழு பற்றி, என்னிடம் கேட்காதீர்கள்; எனக்குத் தெரியாது.
நீங்கள் மீண்டும், தி.மு.க.,வில் இணைய வாய்ப்புள்ளதா?
அதுபற்றி, எனக்குத் தெரியாது. என் ஆதங்கத்தை, தலைவரிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அழகிரி கூறினார்.

ஒதுங்கிய ஸ்டாலின் :

கருணாநிதி நினைவிடத்தில்



அஞ்சலி செலுத்தியதும், கோபாலபுரம் வீட்டிற்கு அழகிரி சென்றார். அப்போது அங்கு, ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து விட்டு, வெளியே புறப்பட்டார். அந்த நேரத்தில், அழகிரி வீட்டுக்குள் நுழைவதை பார்த்த ஸ்டாலின், அவருக்கு வழி விட்டு ஒதுங்கினார். இருவரும் சந்திக்கும் வாய்ப்பு இருந்தும், ஸ்டாலின் ஒதுங்கி கொண்டார். அழகிரி உள்ளே சென்றதும், அங்கிருந்து, ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அழகிரி, விறுவிறு என, உள்ளே சென்று, தன் தாயார் தயாளுவை சந்தித்து பேசினார்.

ஆலோசிப்பேன் :

இதன்பின், நமது நாளிதழுக்கு, தொலைபேசியில், அழகிரி அளித்த பேட்டி:

கருணாநிதியின் சமாதியில், நீங்கள், கட்சி தொடர்பான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்; அடுத்த கட்டமாக, உங்கள் நடவடிக்கை என்ன?
இப்போது, எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள, என் ஆதரவாளர்களையும், கருணாநிதியின் விசுவாசிகளையும் அழைத்து பேசி, முடிவு எடுப்பேன்.

ஆதரவாளர்களை, சென்னையில் சந்திப்பீர்களா அல்லது மதுரையில் சந்திப்பீர்களா?

மதுரைக்கு செல்லவில்லை. கருணாநிதி மறைவு தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. அதில், நான் பங்கேற்க இருப்பதால், சென்னையில் தான் இருப்பேன். இவ்வாறு அழகிரி கூறினார்.
அழகிரியின் போர்க்கொடி குறித்து,


ஸ்டாலின் ஆதரவாளரான, சென்னை மேற்கு மாவட்ட செயலர், ஜெ.அன்பழகன் கூறியதாவது: கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அழகிரி. அது, கருணாநிதி எடுத்த முடிவு. கட்சி கட்டுக்கோப்பாக உள்ளது. அவர் பின்னால், யாரும் செல்ல மாட்டார்கள். அழகிரியின் கருத்துக்கு, பதில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை. தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், ஸ்டாலின் விரிவான பதிலை தருவார். இவ்வாறு அவர் கூறினார்.

குடும்ப பஞ்சாயத்தில் நடந்தது என்ன?

இதுபற்றி, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: இரு தினங்களுக்கு முன், சென்னை, கோபாலபுரம் வீட்டில், அழகிரியை கட்சியில் சேர்ப்பது தொடர்பான பஞ்சாயத்து நடந்தது. அதில், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அழகிரி, தமிழரசு, செல்வி, செல்வம், அமிர்தம் உள்ளிட்டோரும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் பங்கேற்றனர்.

அப்போது, மூத்த நிர்வாகி ஒருவர், 'கருணாநிதியின் பிள்ளைகளான, அழகிரி, ஸ்டாலின், கனிமொழியை, தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், ஸ்டாலின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் போன்றவர்களின் தலையீட்டை, கட்சியினர் ரசிக்கவில்லை. எனவே, அவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்' என்றார்.

'பொருளாளர் பதவியை, துரைமுருகனுக்கும், துணை பொதுச்செயலர் பதவியை, கனிமொழிக்கும் வழங்கலாம். ஆனால், அழகிரிக்கு, எக்காரணம் கொண்டும், கட்சியில் பதவி கிடையாது; அவரை

சேர்க்கவும் வாய்ப்பு இல்லை' என, ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார்.

உடனே, அழகிரி ஆவேசமாக பேசியதாவது: தி.மு.க., தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமல்ல. உதயநிதி பணம் விவகாரம் எல்லாம், என்னிடம் இருக்கிறது. கட்சி என்பது, லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு சொந்தமானது. தவறு செய்கிற மாவட்ட செயலர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை. பணம் வாங்கி விட்டு, கட்சி பதவிகளை, மாவட்ட செயலர்கள் விற்பனை செய்துள்ளனர்.

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த, மாவட்ட செயலர்களின் பொருளாதார வசதியையும், தற்போதைய மா.செ.,க்களின் பண வசதியையும் பார்த்தால் தெரியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு, அப்பாவி நகர, ஒன்றிய செயலர்கள் மீது, நடவடிக்கை எடுப்பது நியாயமா?இவ்வாறு அவர் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.

கலைஞர் தி.மு.க., உதயமாகுமா?

அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது: கருணாநிதியை போல, அழகிரியும் ஒரு போராளி தான். அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி, ஸ்டாலின் எந்த முடிவும் எடுக்கவில்லை. கருணாநிதியின் விசுவாசிகளை ஒருங்கிணைப்போம். ஸ்டாலின் தலைமை மீது நம்பிக்கை இல்லாத, அதிருப்தியாளர்களை் அரவணைப்போம். லோக்சபா தேர்தலுக்கு முன், அழகிரியின் தலைமையில், 'கலைஞர் தி.மு.க.,' உதயமாகலாம். ரஜினி கட்சியுடன் கூட்டணி வைத்து, நாங்கள் வெற்றி பெற்றால், கட்சி தானாக, அழகிரியின் கையில் வந்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'அழகிரி வேண்டாம்!'

தி.மு.க., செயற்குழுவில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும், கருணாநிதிக்காக அடுத்தடுத்து நடத்த உள்ள, இரங்கல் கூட்டங்கள் குறித்தும் ஆலோசிப்பதற்கு, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனை, செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்கும் விஷயம் குறித்து விவாதித்துள்ளார். அதற்கு அன்பழகன், 'எந்த நெருக்கடி, யாரிடம் இருந்து வந்தாலும் சரி; குடும்பத்துக்குள் நெருக்கடி வந்தாலும் சரி; எக்காரணம் கொண்டும், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டாம்' என, கூறியதாக, அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.09.2024